தாமதிக்காமல் திறக்கட்டும் மேட்டூர் அணை!


கனமழையால் கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. விநாடிக்கு 50 ஆயிரம் கன அடிக்கும் மேலாக உபரி நீர் திறக்கப்படுவதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75 அடியைத் தாண்டிவிட்டது. ஆனாலும், 90 அடியைத் தொட்ட பிறகுதான் அணையைத் திறப்போம் என்கிறது தமிழக அரசு.

2013-ல், போதிய தண்ணீர் இல்லை என்று ஆகஸ்ட் 2-ல் தான் அணை திறக்கப் பட்டது. அடுத்த மூன்றாவது நாளே கர்நாடக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, விநாடிக்கு லட்சம் கன அடிக்கும் மேல் உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால், மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி, விநாடிக்கு 1 லட்சம் கன அடிக்கும் கூடுதலான உபரி நீரைத் திறந்துவிட்டு, அது கொள்ளிடம் வழியே வீணாகக் கடலில் கலந்தது.
அதேநேரத்தில் கடைமடைப் பகுதிகளுக்கு நீர் கிடைக்காமல் டெல்டா விவசாயிகள் இன்னலுக்குள்ளாயினர். உபரி நீரைச் சேமிக்க முன்கூட்டிய திட்டமிடல் இல்லாததே இதற்குக் காரணம். அதே நிலைமை இப்போதும் வந்துவிடக் கூடாது!

சம்பா சாகுபடி வேலைகள் ஆகஸ்ட்டில்தான் தொடங்கும். இப்போதைக்கு பாசனத் துக்குத் தண்ணீர் பெருமளவு தேவைப்படாது. இந்த நேரத்தில் மேட்டூர் அணையைத் திறந்தால், கடைமடைப் பகுதி வரை ஆறுகளில் தண்ணீரைக் கொண்டு போகலாம். ஏரி, குளம், குட்டைகளை நிரப்பி வைக்கலாம். கர்நாடகம் தொடர்ந்து கூடுதல் தண்ணீர் திறந்துவிட்டாலும் அதை மேட்டூரில் சேமிக்க இது உதவியாக இருக்கும்.

 காவிரி மேலாண்மை ஆணையமும் செயல்பாட்டுக்கு வந்துவிட்டதால் நமக்கான பங்கை அடுத்து வரும் மாதங்களில் கர்நாடகம் திறந்தே ஆகவேண்டும். ஆகவே, மேட்டூர் அணையை உடனடியாகத் திறக்க தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும். இல்லையேல், 2013 போலவே நூற்றுக்கணக்கான டி.எம்.சி. தண்ணீரைக் கடலுக்கு அனுப்பும் நிலை உண்டாகும்.

x