மனித சமத்துவத்துக்காக முனிவாகன சேவை- பட்டியல் இனத்தவரை தோளில் சுமக்கும் பட்டாச்சாரியார்!


தலித்களுக்கு ஆலயப் பிரவேசம் மறுக்கப்பட்ட காலத்தில் அவர்களின் பக்கம் நின்று தீண்டாமையை அகற்ற அருந்தொண்டு செய்தவர் இராமானுஜர். இன்றைக்கு பட்டியல் இனத்து மக்களுக்கு அத்தகைய சங்கடங்கள் இல்லை என்றாலும், தேர் வடம் பிடிப்பது, பரிவட்டம் கட்டுவது உள்ளிட்ட விஷயங்களில் அங்கொன்றும் இங்கொன் றுமாய் சில பிணக்குகள் இருக்கத்தான் செய்கின்றன. இந்த நிலையில், ஆந்திரத்தில் தலித்களைத் தனது தோளில் தூக்கிக்கொண்டு அரங்கநாதன் ஆலயங்களில் ஆலயப் பிரவேசம் செய்து மனித சமத்துவம் போதித்து வருகிறார் சி.எஸ்.ரங்கராஜன் பட்டாச்சாரியார்!

எட்டாம் நூற்றாண்டில் ரங்கத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் நிகழ்வுடன் ரங்கராஜன் பட்டாச்சாரியாரின் இந்தச் சேவையையும் ஒப்பிடும் ஆந்திர மக்கள் இதை, ‘முனிவாகன சேவை’ என்று கொண்டாடுகிறார்கள். திருச்சி ரங்கத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் அந்தப் புராணக்கதை இதுதான். சோழ நாட்டின் உறையூரில் இசைக்கு பேர்போன பாணர் குலத்தில் தோன்றியவர் பாணர் பெருமாள். இவருக்குத் திருவரங்கத்தில் குடிகொண்டுள்ள அரங்கன் மீது அளவுகடந்த பக்தி; காதல். ஆனால், அந்தக் காலத்தில் பாணர் குலத்தைத் தீண்டத்தகாதவர்களாய் ஒதுக்கிவைத்திருந்தது சமூகம். இதனால், பாணர் பெருமாளுக்கு அரங்கநாதரை ஆலயத்துக்குள் சென்று சந்திக்க முடியாத இக்கட்டு. ஆனாலும், சதா சர்வகாலமும் அரங்கனை நினைத்துப் பாடிக்கொண்டிருந்தார் பாணர் பெருமாள்.

தினமும் இவர், காவிரிக் கரையில் நின்றபடி திருவரங்கத்து கோபுரத்தைப் பார்த்து பெருமாளை வழிபட்டும் பாடியும் வந்தார். அப்படியொருநாள் இவர் தன்னை மறந்து பாடிக்கொண்டிருக்கையில், திருவரங்கம் கோயில் அர்ச்சகரான லோகசாரங்கமுனி, சுவாமியின் அபிஷேகத்திற்காகக் காவிரியில் தண்ணீர் எடுக்க வந்தார். அப்போது, வழியில் அரங்கனை துதிபாடி மெய்மறந்த நிலையில் பாணர் பெருமாள் நிற்க, அவரைக் கல்லால் அடித்து விலகச் சொல்லிவிட்டு தண்ணீர் எடுத்துக்கொண்டு கோயிலுக்குள் சென்றார் சாரங்கமுனி. அங்கே அரங்கனின் நெற்றியிலும் காயம் பட்டு ரத்தம் கசிந்துகொண்டிருந்தது. இதைப் பார்த்து அதிர்ந்த சாரங்கமுனி, “நான் என்ன பிழை செய்தேன் ரங்கா...” எனக் கதறினார். அப்போது, “என் தீவிர பக்தனை நீ கல்லால் அடித்துக் காயப்படுத்தினாய். அவன் நெற்றியில் பட்ட கல் என் மீதும் பட்டது. இந்தப் பாவத்தை போக்க வேண்டுமானால், அந்த பக்தனை உன் தோள் மீது சுமந்து இங்கே அழைத்து வா” என அசரீரியாய் ஒலித்தார் அரங்கன்.

இதைக்கேட்டதும், “தவறு செய்து விட்டேன்... என்னை மன்னியுங்கள்” எனக் கண்ணீர் மல்க கூறிவிட்டு பாணர் பெருமாள் நின்றுகொண்டிருந்த இடம் நோக்கி ஓடினார் சாரங்கமுனி. அங்கே மயங்கிக் கிடந்த அவரை எழுப்பி, மயக்கம் தெளிவித்து முதலில் அவரிடம் மன்னிப்பு கேட்டார் சாரங்கமுனி. நடந்த விஷயங்கள் அனைத்தையும் அவரிடம் சொன்னார். இதைக் கேட்டு பாணர் பெருமாள் மெய் சிலிர்த்துப் போனார். “எனக்காக ரத்தம் சிந்தினாயா ரங்கா...” எனக் கண்கள் குளமாகக் கண்ணீர் விட்டு ரங்கனைத் தொழுதார். பிறகு, தனது தோள் மீது பாணர் பெருமாளைக் கோயிலுக்குள் சுமந்து சென்று அரங்கனைத் தரிசிக்க வைத்தார் சாரங்கமுனி.

x