பர்ஸ்ட் லுக்குக்கும் ஸ்பூஃப்!


தாஜ்மஹாலைத் தகர்த்துவிடுங்கள்!
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலைப் பாதுகாக்கத் தவறிவிட்டதாக உச்சநீதிமன்றம், மத்திய அரசையும், உத்தரபிரதேச மாநில அரசையும் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறது. மாசு காரணமாக, தாஜ்மஹாலின் பளிங்குக் கற்கள் தொடர்ந்து மஞ்சள் நிறமாக மாறிவருகின்றன. “தாஜ்மஹாலைப் பாதுகாப்பதில் அரசு, எந்தத் தீவிர அக்கறையும் இதுவரை எடுக்கவில்லை. தாஜ்மஹாலை அதன் பழைய நிலைக்கு மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ளுங்கள். அல்லது, அதை இடித்துத் தகர்த்துவிடுங்கள். இதே நிலைமை நீடித்தால், தாஜ்மஹாலை இழுத்துமூட உத்தரவிடுவோம்” என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தாஜ்மஹால் பராமரிப்புத் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் அரசை எச்சரித்திருந்தனர். இதைத் தொடர்ந்து, தாஜ்மஹால் பாதுகாப்பு குறித்து நெட்டிசன்ஸ் பலரும் தங்கள் அக்கறையை ட்விட்டரில் வெளிப்படுத்தியிருந்தனர்.

ட்விட்டரில் மட்டும் இருக்கும் இன்ஸ்டிடியூட்!
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ இன்ஸ்டிடியூட்டுக்கு ‘தலைசிறந்த கல்வி நிறுவனம்’ என்ற அங்கீகாரத்தை வழங்கியிருக்கிறது மத்திய அரசு. இன்னும் தொடங்கப்படாத ஜியோ இன்ஸ்டிடியூட்டுக்கு இப்படி ஒரு அங்கீகாரம் அளிக்கப்பட்டிருப்பதை ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் நெட்டிசன்கள் கலாய்த்தனர். பலர், தான் ஜியோ இன்ஸ்டிடியூட்டில் மேற்படிப்பு படிப்பதாக ஸ்டேட்டஸ் அப்டேட் செய்து கிண்டலடித்தனர். ட்விட்டரில் ஜியோ இன்ஸ்டிடியூட்டை ட்ரோல் செய்வதற்கென்றே அதே பெயரில் ஒரு போலி அக்கவுன்ட் உருவாக்கப்பட்ட்டது. ஆனால், ஜியோ இன்ஸ்டிடியூட், மூன்று ஆண்டுகளுக்குள் தொடங்கப்பட்டு தரம் சார்ந்த அளவு கோல்களை நிறைவேற்றிய பிறகுதான் ‘தலைசிறந்த கல்வி நிறுவனம்’ என்ற அங்கீகாரம் நடைமுறைக்கு வரும் என்று விளக்கம் அளித்துள்ளது மத்திய அரசு.

அமித் ஷாவுக்கும் அதே மரியாதை!
பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை எதிர்த்து #GoBackModi என்பதை ஏப்ரல் 12 அன்று சர்வதேச ட்விட்டர் ட்ரெண்டாக்கினார்கள் தமிழர்கள். அதேபோல, ஜூலை 9-ல் தமிழகம் வந்த பாஜக தலைவர் அமித் ஷாவை எதிர்த்து #GoBackAmitShah என்ற ஹாஷ்டாக்கை தமிழர்கள் தேசிய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டாக்கினர். பாஜக-வைத் தமிழர்கள் என்றும் ஏற்க மாட்டார்கள் என்ற கருத்தை நெட்டிசன்ஸ் அதிக அளவில் சமூக ஊடகங்களில் தெரிவித்திருந்தனர்.

பர்ஸ்ட் லுக்குக்கும் ஸ்பூஃப்!
ஆவலுடன் எதிர்நோக்கப்பட்ட ‘தமிழ்ப்படம் 2’ ஜூலை 12-ல், வெளியானது. அதற்குமுன், ட்விட்டரில் வெளியாகிய அந்தப் படத்தின் போஸ்டர்கள்  சமூக ஊடகங்களில் மேலும் எதிர்பார்ப்பைக் கூட்டின. சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவான இந்தப் படம், ‘ஸ்பூஃப்’ படமென்பதால் போஸ்டர்களும் அதே பாணியில் தயாரிக்கப்பட்டிருந்தன.  வெளிவந்த படங்கள் மட்டுமல்லாமல் புதிதாகத் தலைப்பு அல்லது 
பர்ஸ்ட் லுக் மட்டும் வெளியான படங்களையும் ஸ்பூஃப் செய்யும் வகையில் ‘தமிழ்ப்படம் 2’ படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது

x