இங்கே குழந்தைகள் தொட்டில் ஆடலாம்..!: புரட்சி செய்யும் புன்னப்புரா காவல் நிலையம்!


காவல் நிலையங்களுக்கு புகார் கொடுக்க வருபவர்களை உட்காரவைத்துப் பேசினாலே அபூர்வம். ஆனால், கேரளத்தின் புன்னப்புரா காவல் நிலையத்தில், புகார் கொடுக்க வருபவர்களின் குழந்தைகளைத் தூங்கவைக்க தொட்டில் வசதி உள்ளிட்ட புரட்சியான பல நல்ல ஏற்பாடுகளைச் செய்துவைத்திருக்கிறார்கள்!

குழந்தைகளைத் தூங்கவைக்க தொட்டில், சிறுவர்கள் விளையாட குட்டிசைக்கிள், அவர்கள் உட்கார்ந்து பாடம் எழுத சின்னஞ்சிறு டேபிள் - சேர் இத்தனையும் ஆலப்புழா மாவட்டத்தின் புன்னப்புரா காவல் நிலைத்தில் நான் பார்த்த காட்சிகள். மனதுக்கு உற்சாகமூட்டும் படகு இல்லம், பரந்து விரிந்த காயல், கண்களுக்கு விருந்தளிக்கும் அழகிய கடற்கரை, திரும்பிய திசையெல்லாம் கொஞ்சி விளையாடும் இயற்கைச்சூழல் இவற்றுடன் ஆலப்புழாவின் இன்னொரு அதிசய அடையாளமாக மாறியிருக்கிறது புன்னப்புரா காவல் நிலையம். சமீபத்தில் இதை ‘மாதிரி காவல் நிலையமாக’ அறிவித்துள்ளது கேரள காவல் துறை.

இந்தக் காவல் நிலையத்தின் முகப்புப் பகுதியிலேயே குழந்தைகளுக்காகப் பிரத்யேக அறை அமைக்கப்பட்டுள்ளது. அதைக் கடந்து உள்ளே சென்றால் மக்கள் தொடர்பு அலுவலருக்குத் தனி இருக்கை அமைத்துள்ளனர். புகார் கொடுக்க வருபவர்கள் தங்கள் பிரச்சினைகளை இவரிடம் சொன்னால் மனு எழுதிக் கொடுப்பதுடன் வழிகாட்டுதலும் செய்கிறார். புகார் கொடுக்க வருபவர்களிடம் ஒரு கட்டு பேப்பரும், கார்பன் தாளும் வாங்கிவரச் சொல்லும் அதிகாரமெல்லாம் இங்கில்லை. புகார் கொடுக்க வருபவர்களிடம் நெருக்கமாக அமர்ந்து பேசி பிரச்சினையைக் கேட்கிறார் மக்கள் தொடர்பு அலுவலர். அதைக் கடந்து உள்ளே சென்றால் வரவேற்பறை. அங்கே இரண்டு காவலர்கள் அமர்ந்திருக்கிறார்கள். இவர்கள் பொதுமக்களிடம் புகாரை வாங்கிக்கொண்டு இன்முகத்துடன் பேசுகின்றனர்.

கேரள மாநில காவல்துறை தலைவர் ஸ்ரீலோக்நாத் பெஹேரா, 1987-ல் ஆலப்புழாவில் ஏ.எஸ்.பியாக இருந்தபோது இந்தக் காவல் நிலையத்தில் அதிகாரியாக இருந்தார். அந்த அறிமுகத்தில் இந்தக் காவல் நிலையத்தை மாதிரி காவல் நிலையமாக்கியிருக்கிறார் அவர். இதுகுறித்து நம்மிடம் பேசிய காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளரும், நிலைய பொறுப்பு அலுவலருமான ஆர்.பினு, “புகார் கொடுக்க வருபவர்கள் சில நேரங்களில் கைக்குழந்தைகளுடனும், சிறுபிள்ளைகளுடனும் வருகிறார்கள். அதுபோன்ற சூழலில் அந்தக் குழந்தைகளைப் பாதுகாப்பான இடத்தில் விட்டுவிட்டு அவர்கள் தங்களது புகாரைத் தெரிவிக்க வேண்டும். அதற்காகத்தான் தனியாக ஒரு அறையை ஒதுக்கி அதில் தொட்டில், விளையாட்டு உபகரணங்களை வாங்கி வைத்தோம். அத்துடன், குழந்தைகளைக் கவரும் வகையில் இந்த அறை முழுவதும் வண்ண கார்ட்டூன்கள் வரைந்தும், காய்கறிகள், பழங்கள் எனப் பயனுள்ள குறிப்புகளை ஒட்டியும் வைத்திருக்கிறோம்.

x