உங்கள் இல்லம் அமைதிப் பூங்காவாக மாறும்..!


“ஒண்ணுக்கு ஒண்ணு ஆதரவா இருக்கும்னு ரெண்டு புள்ளைகளப் பெத்தோம். ஆனா, ஒவ்வொரு விஷயத்துக்கும் இதுங்க அடிச்சுக்கறதைப் பார்த்தா ஒண்ணோட நிறுத்திருக்கலான்னு இப்பத் தோணுது” இப்படிப் புலம்பும் பெற்றோர்கள் பலரைப் பார்த்திருப்போம். ரெண்டுக்கே இந்த நிலை என்றால், அதற்கும் மேல் பெற்றவர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். சதா சண்டைபோட்டு கட்டி உருளும் பிள்ளைகளை சமாதானப்படுத்தவே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கும்.

பெற்றோர்கள் நினைத்தால் இந்தச் சகோதர சண்டைகளைக் குறைத்து, வீட்டில் அமைதியைக் கொண்டுவர முடியும். அதற்கு அவர்கள் முதலில் செய்யவேண்டிய விஷயம் குழந்தைகள் மத்தியில் ஒருவர் மீது மற்றவர் பொறாமை கொள்ளாமல் பார்த்துக்கொள்வதுதான். அப்படி பொறாமை ஏற்படாமல் இருக்க, முதலில் நாம் அவர்களை ஒப்பிட்டுப் பேசுவதை நிறுத்த வேண்டும்.

“உன்னைவிட சின்னவனா இருந்தாலும் எவ்வளவு பொறுப்பா ஸ்கூல்ல இருந்து வந்ததும் அவனோட பொருட்களை அந்தந்த இடத்துல வைக்கறான். ஆனா மூத்தவனான நீ, எல்லாத்தையும் கண்ட இடத்தில போட்டுட்டு விளையாடப் போயிடறே. இனியாச்சும் அவனைப் பார்த்து கத்துக்கோ” என்று எப்போதாவது கூறியிருப்போம். இதில், அவனைப் பார்த்து கத்துக்கோ’ என்ற அந்த ஒரு வார்த்தை சகோதர யுத்தத்துக்கான விதையை குழந்தைகளின் மனதில் ஊன்றும். ‘நம்மைவிட அவனை அம்மா ஒசத்தியாக சொல்லிவிட்டாளே’ என்ற பொறாமை, கோபமாக மாறி சகோதரர்களுடன் சண்டையிடத் தூண்டும். எனவே, எந்தக் கட்டத்திலும் ஒரு குழந்தையோடு மற்ற குழந்தையை ஒப்பிடாதீர்கள்.

பொறாமையைப் போலவே அன்புக்கான ஏக்கமும் குழந்தைகளைப் பிரிக்கும். ‘பெற்றோர்களிடம் இருந்து நமக்கு முழுமையாக கிடைக்கவேண்டிய அன்பை சகோதரனோ சகோதரியோ தட்டிப் பறிக்கிறார்களோ என்ற எண்ணம் குழந்தைகள் மனதில் கொஞ்சம்கூட ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வீட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தைகளுடனும் குறிப்பிட்ட நேரத்தை செலவு செய்து அனைவரும் தங்களுக்கு முக்கியம் என்பதை பெற்றோர்கள் உணரவைக்க வேண்டும்.

x