முதலில் வந்து சேர்பவர்களுக்கு தங்கக் காசு!- அரசுப் பள்ளியைக் காக்க அதிரடி ஆஃபர்!


அது ஒரு அரசு ஆரம்பப் பள்ளி. ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். அப்போது விடு விடுவென வகுப்பறைக்குள்ளே நுழைகிறார் சேகர். ஆசிரியரின் அனுமதியுடன், அவர் பாடம் எடுக்கும் நேர்த்தியை வகுப்பறையில் உட்கார்ந்து கவனிக்கிறார் . அடுத்த நாள் தனது மகனுடன் பள்ளிக்கு வரும் அவர். “இவன் என் பிள்ளை. இவன் இங்கதான் படிக்கணும்... நல்லா கவனிச்சுப்பீங்கல்ல...” என்று ஆசிரியரின் ஒப்புதல் வாங்கிக்கொண்டு மகனைப் பள்ளியில் சேர்த்துவிட்டுப் போகிறார்.

இரண்டு ஆண்டுகள் நகர்கின்றன. மீண்டும் சேகர் தனது அடுத்த பிள்ளையைக் கூட்டிக்கொண்டு வருகிறார். “மூத்த பையன் நல்லா படிக்கிறான். இவனையும் இந்த வருசம் பால்வாடியில் சேர்த்துக்குங்க. அடுத்த வருசம் ஒண்ணாம் வகுப்புக்குத் தயார் ஆயிடுவான்!” என்கிறார். ஆசிரியரோ, “சேர்த்துக்கலாம், ஆனா... இப்ப 4 பசங்கதான் இந்த ஸ்கூல்ல படிக்கிறாங்க. செப்டம்பருக்குள்ள இந்த எண்ணிக்கை ரெட்டை இலக்கத்துக்கு உயரலைன்னா, இந்த வருஷமே இந்தப் பள்ளியை மூடிருவாங்களே..!” என்று தயங்கியபடியே சொல்கிறார்.

இதைக் கேட்டதுமே, “நம்ம பள்ளியை மூடறதா?” என்று அதிர்ந்த சேகர், அடுத்ததாகச் சொன்னதும் செய்ததும் யாரும் சிந்திக்காத சிறப்பு. “என் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகள்ல படிக்க வெச்சிருந்தா இருபதாயிரம், முப்பதாயிரம்னு பீஸ் கட்டுவேன்ல. அதை இந்தப் பள்ளிக்கூடத்தை மூடாம பாதுகாக்கத் தர்றேன். இங்க புதுசா வந்து சேர்ற முதல் பத்துப் பிள்ளைகளுக்கு ஒரு கிராம் தங்கக் காசு தர்றோம்னு விளம்பரப்படுத்துங்க. அதுக்கான செலவை நான் ஏத்துக்குறேன்” என்கிறார் சேகர்.
ஆசிரியர்களும் அவர் சொன்னதை அப்படியே நோட்டீஸாக அச்சடித்து வீடு வீடாகக் கொண்டு போய் கொடுத்தார்கள். இதைப் பார்த்த ஊர்த்தலைவர் செல்வராஜ், “முதலில் சேரும் பத்து மாணவர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரமும், 2 செட் சீருடையும் நான் தர்றேன்” என்று அறிவிக்கிறார். இந்த அறிவிப்புகளால், நான்காக இருந்த மாணவர்கள் எண்ணிக்கை இப்போது ஏழாக உயர்ந்திருக்கிறது. இன்னும் நான்கைந்து பேர் ஒரு வாரத்தில் தங்கள் பிள்ளைகளை இங்கே சேர்ப்பதாக உறுதியளித்துவிட்டுச் சென்றுள்ளார்களாம்.

கோவை மாவட்டம் அன்னூருக்கு அருகிலுள்ளது கோனார்பாளையம். இங்குள்ள அரசுத் தொடக்கப்பள்ளியில்தான் இந்தக் காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. ஒரு காலத்தில் முந்நூறு குடும்பங்கள் வசித்த இந்த கிராமத்தில் வறட்சி உள்ளிட்ட காரணங்களால் இப்போது சுமார் 60 குடும்பங்கள் மட்டுமே இருக்கின்றன. இதனால், இங்குள்ள பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாகச் சரிந்து 4 என்ற நிலைக்கு வந்துவிட்டது.

x