சொட்டாங்கல்- தமிழச்சி தங்கபாண்டியன்


திம்சு

“சீலைக்காரிய நெதம் ரவைக்கு நெனச்சுக்கோ செமதி. எனக்கு வகுத்தால போறப்பல்லாம் காட்டாஸ்பத்திரி டானிக்கும், அவ துந்நூறும்தா”னுவா பவுனுச்செல்வி. வலையங்கொளத்துல இருந்து மே மூச்சு கீ மூச்சு வாங்க நெதமும் பள்ளியோடத்துக்கு ஓட்டத்துலதா வருவா. விடியமுன்ன அவ காட்டுல வௌஞ்ச கத்திரிக்காய வூட்டுல சேக்குறது அவ வேல. நின்னாளு, நிமிந்தாளு வேலைன்னு லீவு நாள்ல கொத்து வேலைக்கும் அவ அம்மா கூட ஓடிருவா. கரணை கரணையாக் காலுங் கையும் ஓங்குதாங்கா இருக்கறதால அவளுக்குத் ‘திம்சு’னு பட்டப் பேரு.

கந்தவேலுப் பயமட்டும் உச்சித் தொண்டைல ‘திம்சு’னு கத்துனா “எலும்ப ஒடச்சா எங் கக்கத்துக்குக் காணமாட்டடா நீ”னு எக்குவா. ஆனாக்க, அவன் கொண்டாற கருப்பட்டிப் பணியாரத்துக்கு அம்புட்டுத் தொண்ணாந்து திரிவா.

பவுனு தலைல ரெட்டைக் கொடம், இடுப்புல ஒத்த கொடம்னு, தண்ணி சொமக்குறதுல கில்லாடி. பள்ளியோடத்துல தோட்ட வேலைக்கு வாளியத் தூக்குறது “சோணிக வேல”னுவா. ஒத்தப் பொட்டு பாவாடைல சிந்தாம மூணு கொடம் தண்ணியெடுத்து செவந்தி, கனகாம்பரம், கீரைப் பாத்திகளுக்கு ஆறு நடைல ஒத்த ஆளா தண்ணி ஊத்திருவா. உடற்பயிற்சி வாத்தியாரு அவளுக்குச் செலம்பம் கத்துக்கொடுத்துப் பெரிய ‘வஸ்தாது’ ஆக்குறேனுவாரு.

x