ஹாட் லீக்ஸ்: ஏழ்ரையக் கூட்டுறதே வேலையா?


‘மாமூல்’ திரும்பிய மலைக்கோட்டை!
அதிரடிக்குப் பேர்போனவர் அந்த காக்கி உயரதிகாரி. இவர், சில மாதங்களுக்கு முன்பு மலைக்கோட்டை மாநகரில் பொறுப்பேற்றதும் கஞ்சா, லாட்டரி, குட்கா உள்ளிட்ட சமாச்சாரங்களை ஒழித்து கட்டுக்குள் கொண்டுவந்தார். ஆனால், அடுத்த சில வாரங்களிலேயே இது மீண்டும் ‘மாமூல்’ நிலைக்கு வந்துவிட்டது. கேட்டால், “பார்க்க வேண்டியவங்கள பார்த்தாச்சு... இனி பயமேன்” என்கிறார்கள் இந்தத் தொழிலில் இருப்பவர்கள். காக்கி அதிகாரியின் அலுவலகத்தில் ஒற்றர் படைக்குப் பொறுப்பாக இருக்கும் இன்னொரு அதிகாரிதான் மலைக்கோட்டை நகரம் மீண்டும் ‘மாமூல்’ நிலைக்குத் திரும்பக் காரணமானவராம்!

ஏழ்ரையக் கூட்டுறதே வேலையா?
நடந்துமுடிந்த சட்டமன்றக் கூட்டத் தொடரின் நிறைவு நாளில் ஒன்றிரண்டு பேரைத் தவிர... மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ-க்கள் அனைவருமே வேட்டி - சட்டையில் பளிச்சென சபைக்கு வந்திருந்தனர். அதிமுக எம்.எல்.ஏ-வான ஆறுகுட்டியும் திமுக எம்.எல்.ஏ-வான சேகர்பாபுவும் சிரித்துப் பேசியபடியே சபைக்கு வந்துகொண்டிருந்தார்கள். இதைப்பார்த்துவிட்டு மீடியாக்காரர்கள் சிலர், இருவரையும் ‘க்ளிக்’கித் தள்ள... தெறித்து ஓடவேண்டிய ஆறுகுட்டி அமைதியாய் நடந்தார். மாறாக, “ஏதையாச்சும் எடுத்துப்போட்டு ஏழ்ரையக் கூட்டுறதே உங்களுக்கு வேலையாப் போச்சு...” என்று சங்கடத்துடன் தலையைச் சொறிந்தார் சேகர்பாபு. இதன்பிறகு ஆறுகுட்டி மட்டும் சட்டமன்றத்துக்குள் செல்ல... சேகர்பாபு அவரை விட்டு தேங்கி நின்றுவிட்டு சற்று நேரம் கழித்தே சபைக்குள் அடிவைத்தார்.
படம்: எல்.சீனிவாசன்

ஜகா வாங்கிய வேல்முருகன்
தமிழர் நலன் சார்ந்த பிரச்சினைகளுக்குப் போராடுவதற்காக ‘தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பு’ என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் தலைவரானார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன். இந்த அமைப்பில் பத்துக்கும் மேற்பட்ட முக்கியத் தமிழ் அமைப்புகள் அங்கம் வகிக்கின்றன. இந்த அமைப்புதான் நெய்வேலி நிலக்கரிச் சுரங்க முற்றுகை, சென்னையில் ஐபிஎல் எதிர்ப்பு உள்ளிட்ட போராட்டங்களை முன்னெடுத்தது. இப்போது நிபந்தனை ஜாமீனில் நாகர்கோவிலில் தங்கியிருக்கிறார் வேல்முருகன். தமிழர் நலனுக்காகக் குரல் கொடுக்கும் தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்படுவதைக் கண்டித்து ஏதாவது போராட்டம் நடத்த வேண்டும் என வாழ்வுரிமைக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிரதிநிதிகள் சிலர் 
வேல்முருகனைச் சந்தித்து கோரிக்கை வைத்தார்களாம். ஆனால், “நிலைமை சரியில்லை... அதனால் போராட்டம் நடத்துவதெல்லாம் இப்போதைக்கு சரிப்பட்டு வராது” என்று சொல்லி மறுத்துவிட்டாராம் வேல்முருகன்.

ஜாகை மாறுகிறாரா செல்லூர் ராஜூ?
தன்னை வளர்த்துவிட்ட சீனியரான எஸ்.டி.கே.ஜக்கையனை ஓரங்கட்டிவிட்டு அரசியலில் முன்னுக்கு வந்தவர் அமைச்சர் செல்லூர் ராஜூ. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதுபோல், இப்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரால் அவதிப்பட்டுக்கொண்
டிருக்கிறார் ராஜூ. மதுரை மாவட்டத்தில் உள்ள அதிமுக எம்எல்ஏ-க்கள் அத்தனை பேரையும் தன் வசப்படுத்தி வைத்திருக்கிறார் உதயகுமார்.
முதல்வரிடமும் செல்வாக்காய் இருக்கிறார் உதயகுமார். அதனால்தான் இவர் கூப்பிட்டபோதெல்லாம் மதுரைக்கு ஓடோடி வருகிறார் முதல்வர். இதெல்லாமே ராஜூ வட்டாரத்தை சிடுசிடுக்க வைத்துக்கொண்டிருக்கிறது. இதைப் புரிந்துகொண்டு தினகரன் தரப்பிலிருந்தும் ராஜூவுக்கு மெல்ல நூல்விட்டுப் பார்க்கிறார்களாம். செல்லூராரும் மத்திய அரசுக்கு எதிராக பட்டும் படாமல் கருத்துகளை எடுத்துவிடத் தொடங்கியிருக்கிறார். இதெல்லாம் எதில்போய் முடியுமோ தெரியவில்லை!

x