முடிவற்ற சாலை 10: கல்லில் ஒரு கனவு!


மதுரையின் ஆயிரங்கால் மண்டபமும் நெல்லையின் கிருஷ்ணாபுரம் சிற்பங்களும் ஹம்பி விட்டலர் கோயில் இசைத்தூண்களும் ஆவுடையார் கோயில் ஓவியங்களும் தஞ்சைப் பெரிய கோயில் கோபுர அழகும் கண்டு வியந்து, தென்னிந்திய கலைகளுக்கு இணையாக எதுவுமில்லை என நினைத்துக்கொண்டிருந்தேன்.

ஆனால், ராஜஸ்தானின் ரணக்பூர் ஜெயின் கோயிலின் உள்ளே சென்றபோது அந்த எண்ணம் மாறிப் போனது. பேரழகின் உச்சத்தைத் தொட்ட சமணக் கோயில்கள் இந்தியாவில் இருக்கின்றன.

அவை நிகரற்ற கலைப்பொக்கிஷங்கள் என்ற உண்மையை உணர்ந்தேன்.ஆம் நண்பர்களே. ரணக்பூர் ஜெயின் கோயிலின் ஒவ்வொரு அங்குலமும் பளிங்குக் கற்களால் கலை நுணுக்கத்துடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் ஒரு பிரம்மாண்டமான கனவுலகுக்குள் நுழைந்தது போலவே இருந்தது. கோயிலில் மின்விளக்குகள் கிடையாது. இயற்கையான சூரிய ஒளியே கோயிலை நிரப்புகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் பாலி மாவட்டத்திலுள்ள ஒரு சிற்றூர்தான் ரணக்பூர். ரணக்பூருக்குப் பயணம் செய்வதே தனித்த அனுபவம். புழுதி பறக்கும் சீரற்ற சாலைகளையும் இடிபாடுகளையும் கொண்ட சின்னஞ்சிறு கிராமங்களுக்குள் கார் சென்றுகொண்டிருந்தது. ராமநாதபுர மாவட்டத்துக்குள் சென்றுகொண்டிருப்பது போலவே உணர்ந்தேன். கருங்கல்லால் ஆன வீடுகள். வெயிலுக்காக உயரம் குறைவாகக் கட்டப்பட்டிருக்கின்றன. தொலைவில் ஆடு மேய்க்கும் கிழவர்கள். முக்காடு போட்டபடி வேலை செய்துகொண்டிருக்கும் பெண்கள். நவீன உலகின் எந்த அடையாளமும் இல்லாமல் நூறு வருஷங்களுக்குப் பின்னால் வாழ்ந்துகொண்டிருப்பது போன்ற கிராமங்கள்.

கிழட்டு ஒட்டகம் ஒன்று சாலையோரம் படுத்துக்கிடந்தது. சாதியின் அழுத்தமான பிடியில் ராஜஸ்தான் உள்ளது. தரமான சாலைகள் இல்லை. பொதுப் போக்குவரத்தும் குறைவு. குடிநீர் வசதி கிடையாது. பள்ளியொன்றைக் கண்டதும் இறங்கி அருகில் சென்று பார்த்தேன். நாற்பது ஐம்பது மாணவர்கள். இரண்டு ஆசிரியர்கள். அழுக்கடைந்துபோன வகுப்பறை. அடிப்படை வசதிகள் இல்லாத கல்விக்கூடங்கள். தலைப்பாகை கட்டிய முதியவர்கள் சிலர் சாலையோரம் அமர்ந்திருந்தார்கள்.

இந்தியாவின் பெருநகரங்கள் 21-ம் நூற்றாண்டின் அதிநவீன வசதிகளால் ஒளிர்ந்துகொண்டிருக்கையில், இது போன்ற கிராமங்கள் 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்துவருகின்றன என்பதே நிஜம்.

கலைப்பொருட்கள் செய்து விற்பது,சுற்றுலா பயணிகளுக்கான தேவைகளை நிறைவேற்றுவது, அரியவகை கற்களை விற்பது, பளிங்குக் கற்களை விற்பது இவைதான் பெரும்பான்மை ராஜஸ்தானியர்களின் வேலை. இசையும் நடனமும் பிரிக்க முடியாதபடி கலந்திருக்கின்றன. பொம்மலாட்டம், வாள்வீச்சு, பானை நடனம் போன்ற மரபான நாட்டார்கலைகள் இன்றும் தொடர்கின்றன.
வெயிலோடு பயணம் செய்து ரணக்பூரை அடைந்தேன். சின்னஞ்சிறிய ஊர். ஆனால், உலகமே அதைத் தேடி வந்துகொண்டிருக்கிறது. காரணம் பேரழகு மிக்க கலைக்கோயில்.

சமண மதத்தின் ஐந்து முக்கிய புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றாக ரணக்பூர் ஜெயின் கோயில் கருதப்படுகிறது. பகவான் ஆதிநாதருக்காக இக்கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. ரிஷபதேவர் எனும் ஆதிநாதர் சமண சமயத்தை நிறுவியர். ஆதிநாதர் தவக்கோலத்தில் சிற்பமாக அமர்ந்திருந்தார். தலைப்பகுதியில் முக்குடையுடனும் இரு புறமும் சாமரதாரிகளுடனும் காணப்படுகிறார். அகன்ற விழிகள் கொண்ட சலவைக்கல் ஆதிநாதர் பெருங்கருணையோடு நம்மை பார்த்துக்கொண்டிருப்பதுபோலவே இருந்தது.

இக்கோயிலின் அடித்தளப் பகுதி 48,000 சதுர அடி பரப்பளவில் உள்ளது. 80 குமிழ் கோபுர அமைப்புகள், 29 மண்டபங்கள், 1,444 தூண்கள் காணப்படுகின்றன. தூண்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான அலங்கார வேலைப்பாடுகள் கொண்டதாக உருவாக்கப்பட்டிருக்கின்றன.
இக்கோயிலில் மூன்று அடுக்கு கொண்ட நான்கு வாசல்கள் இருக்கின்றன. ஆனால், ஒரே வாசல் வழியாகத்தான் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறோம். மற்ற வாசல்கள் மூடப்பட்டிருக்கின்றன. உள்ளே காலணிகள் அணிந்து செல்லக் கூடாது. உடைக் கட்டுப்பாடும் உண்டு. படியேறி உள்ளே சென்றால் அமைதி. பேரமைதி. வழிபாட்டு ஸ்தலம் என்ற போதும் உள்ளே வந்தவர்களிடமிருந்து சிறு முணுமுணுப்பு சப்தம்கூட இல்லை!

ஒவ்வொரு தூணையும் நின்று நிதானமாகப் பார்த்தேன். கட்டிடக் கலையின் உன்னதம். சலவைக்கல்லில் இப்படியான சிற்பங்களைச் செய்வது சவாலானது. கலைநுணுக்கங்களைச் செதுக்கிய சிற்பிகள் மகத்தானவர்கள். எவரது பெயரும் அங்கே குறிப்பிடப்படவில்லை. சலவைக்கல் சிற்பங்களின் அழகைத் தொட்டு உணர்ந்து பார்க்கும்போது கண்ணில் நீர் ததும்பியது. எத்தனை அற்புதம்! எவ்வளவு ஆண்டுகால உழைப்பு! பாலைவன வெயிலின் உக்கிரத்தினுள் எப்படி இந்தக் கலைப்பணியைச் செய்திருப்பார்கள்?

இந்தக் கோயிலைக் கட்டியவர் ராணா கும்பா மன்னரின் அமைச்சரான தர்ணா ஷா. அவர் ஒரு வணிகர். இக்கோயிலைக் கட்டி முடிக்க 63 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. அன்றைய மதிப்பில் இதற்கு 15 கோடி செலவிடப்பட்டிருப்பதாகச் சொல்கிறது ஒரு கணக்கு.

இந்தக் கிராமம் தர்ணா ஷாவின் சொந்த ஊர் என்பதால், இக்கோயிலை அங்கேயே உருவாக்கியிருக்கிறார். இவ்வளவு பெரிய கலைக்கோயிலைச் செய்தவரின் உருவம் சுண்டுவிரல் அளவில் ஒரு கோயில் தூணில் செதுக்கப்பட்டிருக்கிறது. தான் வெறும் பணியாள். ஆதிநாத பகவானின் கருணையே இக்கோயிலைச் சாத்தியப்படுத்தியது என்ற பணிவின் அடையாளமே இந்தச் சிறிய உருவம்.

காலவிருட்சம் என்றொரு சிற்பம் கோயிலின் விதானத்தில் உள்ளது. முடிவற்ற காலத்தின் அடையாளமாக அந்தச் சிற்பம் நுணுக்கமாக உருவாக்கப்பட்டுள்ளது. கோயிலின் எந்த இடத்திலிருந்து பார்த்தாலும் மூலவரைக் காண முடிகிறது. முகலாயப் படையெடுப்பின்போது இந்தக் கோயில் தாக்கப்பட்டு மீண்டும் புத்துருவாக்கம் பெற்றிருக்கிறது.

சலவைக்கல் யானையின் முன்பாக நின்றிருந்தேன். எத்தனை அழகாக வடிக்கப்பட்ட காதுகள்! துதிக்கை, கழுத்துமணியுடன் சிறிய தந்தத்தைக் கொண்ட அந்த யானையின் கண்களும் மிக அழகாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன.

ஒரே கல்லால் செதுக்கப்பட்ட 108 தலைகளுடனும் வால்களுடன் கூடிய பாம்புச் சிற்பம் வசீகரமாக இருந்தது. சமண சமயத்தில் துறவிகள் மட்டுமல்லாது இல்லறத்தார்க்கும் ஒழுக்க விதிகள் இருக்கின்றன. வீடுபேறு அடைவதையே சமணர்கள் வாழ்க்கையின் இறுதிப் பயனாகவும், நோக்கமாகவும் கொண்டு வாழ்ந்தனர். இதனால் மனக்கட்டுப்பாடும் புலனடக்கமும் அறிவார்வமும் சமண சமயத்தோரிடம் பேணி வளர்க்கப்பட்டன.

கல்வி நிலையங்களை உருவாக்கியதில் சமணர்கள் முன்னோடிகள். மலைக்குகைகளில் சமணப் பள்ளிகளை நிறுவினார்கள். சாதி சமய வேறுபாடற்ற சமத்துவக் கல்வி அவர்களாலே முதன்முறையாக வழங்கப்பட்டது.

மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய ‘சமணமும் தமிழும்’ என்ற புத்தகம் தமிழ் சமணம் பற்றி சிறப்பாக விளக்குகிறது.பண்டைய காலங்களில் வீடு கட்டும்போது மனையின் ஏழில் ஒரு பங்கு தர்மபாகம் என்ற பெயரால் ஒதுக்கப்படும். அந்தப் பகுதியைப் பொதுத் தேவைகளுக்கு இடமளிப்பார்கள். அது திண்ணையாகவோ முன்றிலாகவோ இருக்கக்கூடும். இந்த இடங்களிலேதான் திண்ணைப் பள்ளிகள் உருவாக்கப்பட்டன. இது போன்ற அறச்சிந்தனை சமண சமயத்திலிருந்து உருவானதே. இலக்கியம், இலக்கணம், நீதிநூல்கள், விஞ்ஞானம் மற்றும் இதர கலைகளிலும் சமணம் நிறைய கொடையளித்திருக்கிறது.

இந்தியாவின் பெரும் கலைக்கூடங்களில் ஒன்றான ரணக்பூர் ஜெயின் ஆலயத்தைக் காண உலகெங்கும் இருந்து பயணிகள் வந்துகொண்டேயிருக்கிறார்கள். பிரமிப்பின் உச்சத்தோடு கோயிலை விட்டு வெளியே வந்தேன். மாமன்னர்கள் வாழ்ந்த அரண்மனைகள், கோட்டைகள் அடையாளம் தெரியாமல் மறைந்து போய்விட்டன. மன்னர்கள் மண்ணில் மறைந்துபோய் விட்டார்கள். ஆனால், கலை மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறது. இதுதான் காலம் நமக்கு சுட்டிக் காட்டும் உண்மை.

ரணக்பூர் கோயிலின் வெளியே உள்ள போஜனாலாயாவில் எளிய சைவ உணவு தருகிறார்கள். விலை ரூ. 25. அவல் உப்புமா, எண்ணெய் இல்லாத ரொட்டி, தயிர், காய்கறிகள் தருகிறார்கள். உப்பும் காரமும் இல்லாத உணவு.

பெரும் பாலைவனப் பகுதியொன்றினுள் இப்படியொரு கலைகோயிலைக் கட்டிய அந்த மகத்தான மனிதரை நினைத்தபடியே வந்தேன்.
மனிதர்கள் கனவு காணக்கூடியவர்கள். அதை அடைவதற்காகத் தங்கள் வாழ்க்கையைச் செலவிடக்கூடியவர்கள். சிலரது கனவுகள் காலத்தை வென்று ஒளிர்கின்றன. மகத்தான கனவுகளே வாழ்வை அர்த்தப் படுத்துகின்றன. அதுதான் ரணக்பூர் நமக்குச் சொல்லும் பாடம்.
(பயணிக்கலாம்...)

x