ஃபிட்னஸுக்கு அடுத்து விவசாய சவால்!


ஃபிட்னஸ் சவாலைத் தொடர்ந்து தற்போது விவசாய சவால் சமூக ஊடகங்களைக் கலக்கத் தொடங்கியிருக்கிறது. கோவாவின் ‘அக்வம்-பைக்ஸோ’ பஞ்சாயத்துத் தலைவர் சித்தேஷ் பகத், இந்தச் சவாலைத் தொடங்கிவைத்தார். சவாலை முதலில் ஏற்ற கோவாவின் காங்கிரஸ் எம்எல்ஏ அலெக்ஸோ ரெகினால்டோ, தான் விவசாய நிலத்தில் டிராக்டர் ஓட்டும் வீடியோவை ஃபேஸ்புக்கில் பகிர்ந்தார். அவரைத் தொடர்ந்து அம்மாநில வருவாய்த் துறை அமைச்சர் ரோஹன் கவுன்டேவும் டிராக்டர் ஓட்டும் வீடியோவைப் பகிர்ந்தார். இதனால், சென்ற வாரம் சமூக ஊடகங்களில் இந்த விவசாய சவால் பற்றி அதிகம் பேசப்பட்டது.

யுனிலீவருக்கு எதிராக இன்னொரு ஆல்பம்!

மூன்று ஆண்டுகளுக்கு முன், கொடைக்கானலில் மெர்க்குரி கழிவுகளை நீக்காத ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தை எதிர்த்து ‘கொடைக்கானல் வோன்ட்’ என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டார் சென்னையைச் சேர்ந்த இசைக் கலைஞர் சோஃபியா அஷ்ரஃப். அவர், தற்போது பாடகர்கள் டி.எம்.கிருஷ்ணா, அம்ரித் ராவு ஆகியோருடன் இணைந்து யுனிலீவர் நிறுவனத்தை எதிர்த்து மீண்டும் ‘கொடைக்கானல் ஸ்டில் வோன்ட்’ என்ற ஆல்பத்தை ஜூன் 29 அன்று யுடியூபில் வெளியிட்டார். ‘கொடைக்கானல் வோன்ட்’ ஆல்பம் போல இந்த ‘கொடைக்கானல் ஸ்டில் வோன்ட்’ ஆல்பமும் யுனிலீவர் நிறுவனத்துக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆல்பத்தைப் பார்க்க: http://y2u.be/UhZz5vKi01c

x