அம்மா வேடத்திலும் அசத்திய கதாநாயகி!


தண்ணீர் தரமறுத்தாலும் இன்றுவரை தமிழ் சினிமாவுக்குக் கதாநாயகிகளைத் தடையின்றி அனுப்பிக்கொண்டுதான் இருக்கிறது கர்நாடகம். ‘யயாதி’ (1938) படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் கன்னடத்துக் கணக்கை பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்கியவர் எம்.வி.ராஜம்மா!

ராஜம்மாவின் அறிமுகப்படம் கேட்பாரற்றுப் போனது. ஆனால், அடுத்த படத்தில் அவருக்கு அதிர்ஷ்டம் காத்திருந்தது. தமிழ் சினிமாவின் முதல் இரட்டைவேடப் படமான ‘உத்தமபுத்திர’னில் பி.யு.சின்னப்பாவுக்கு ஜோடியாக நடித்து ஒரே மூச்சில் புகழின் உச்சியைத் தொட்டார் எம்.வி.ராஜம்மா.

“என்ன ஒரு அழகு, என்ன ஒரு நளினம், கன்னடத்துப் பெண்ணாக இருந்தும் தமிழைச் சுத்தமாக உச்சரிக்கிறாரே!” என்று வியந்த டி.கே.எஸ். சகோதரர்கள், இவர்தான் நமது படத்தின் கதாநாயகி என்று முடிவு செய்தார்கள். அன்றைய சென்னையில் மூன்று மாதங்களைக் கடந்து வெற்றிநடை போட்டுக் கொண்டிருந்தது இவர்களது ‘குமாஸ்தாவின் பெண்’ நாடகம். அதைத் திரைப்படமாக்கித் தரும் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்தார்கள். அதற்குத்தான் கதாநாயகியாக ராஜம்மாவை ஒப்பந்தம் செய்தார்கள். அப்போது, ”கோவை பிரிமியர் சினிடோன் ஸ்டுடியோவில் பகல் முழுக்க படப்பிடிப்பு. இரவில் கோவை ராஜா திரையரங்கில் எங்களது ‘குமாஸ்தாவின் பெண்’ நாடகத்தையும் நடத்துகிறோம். நாடகத்தில் கதாநாயகியின் வேடத்தில் நடிப்ப வரை விட நீங்கள் சிறப்பாக நடிக்க வேண்டும். அதற்காக எங்கள் நாடகத்தை ஒருமுறையாவது நீங்கள் பார்க்க வேண்டும்” என்றார் டி.கே.சண்முகம்.

இந்த நிபந்தனையைக் கேட்டு, ராஜம்மாவுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது! பின்னே, டி.கே.எஸ். நாடக சபாவுக்கு சற்றும் குறைவில்லாத ‘குப்பி’ வீரண்ணா நாடகக் குழுவில் பயிற்சிபெற்றவர் ராஜம்மா. ஆர்மோனியம் வாசித்துக்கொண்டே நாடகத்தில் பின்பாட்டுப் பாடும் சிறுமியாக நாடக வாழ்க்கையைத் தொடங்கி, கதாநாயகியாக உயர்ந்தவர். ஹெச்.எல்.என்.சின்ஹாவின் ‘சம்சார நவுகா’ என்ற கன்னட நாடகத்தில் பி.ஆர். பந்துலுவுக்கு ஜோடியாக நடித்துப் புகழ்பெற்றவர். அந்த நாடகம் அதே பெயரில் 1936-ல் திரைப்படமானபோது பந்துலுவும் - எம்.வி. ராஜம்மாவும் கன்னடத் திரையில் அறிமுகமானார்கள். இப்படி நாடகம் வழியே சினிமாவுக்கு வந்த தன்னைப் பார்த்து, “எங்கள் கதாநாயகியின் நடிப்பைப் பார்த்துக் கற்றுக்கொள்” என்பதுபோல் கூறினால் கோபம் வராதா என்ன?

x