லாக் - அப்பில் தம்பி மரணம்- ஆண்டுக்கணக்கில் உண்ணாவிரதம் இருக்கும் அண்ணன்!


உலகின் மிக நீண்ட உண்ணாவிரதப் போராட்டத்துக்குச் சொந்தக்காரர் இரோம் சர்மிளா. மொத்தம் 16 ஆண்டுகள். பகத் சிங் சிறையிலேயே 116 நாள் உண்ணாவிரதம் இருந்தார். காந்தி தனது வாழ்வில் மேற்கொண்ட 17 உண்ணாவிரதப் போராட்டங்களில் மூன்று முறை தொடர்ந்து 21 நாட்கள் உண்ணாமல் இருந்தார். இப்போதெல்லாம் உண்ணாவிரதம் என்றாலே சென்னை நாயர் மெஸ்ஸில் ‘ஃபுல்கட்டு’ கட்டிவிட்டு சேப்பாக்கம் உண்ணாவிரத மேடையில் கண்ணயரும் அரசியல்வாதிகளும் சங்கத்துப் பிரமுகர்களும்தான் நினைவுக்கு வருகிறார்கள். ஆனால், கேரளத்தில் தனது தம்பியின் மரணத்துக்கு நீதி கேட்டு ஆயிரம் நாட்களை நோக்கி நீளுகிறது ஸ்ரீஜித்தின் உண்ணாவிரத அறப் போராட்டம். ஜூலை முதல் தேதியுடன் அவரது உண்ணாவிரதம் போராட்டம் 939-வது நாளைத் தொடுகிறது!

ஸ்ரீஜித்தின் தம்பி ஸ்ரீஜிவ். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இவரைக் காவல் துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றார்கள். சென்ற இடத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் லாக் - அப்பில் அவர் இறந்துவிட்டார். அவருக்காக நியாயம் கேட்டுத்தான் திருவனந்தபுரத்தில் கேரள மாநில தலைமைச் செயலக வாசலில் அமர்ந்துஸ்ரீஜித் போராடிவருகிறார். உண்ணாவிரதப் போராட்டத்தின் தொடக்கத்தில் 30 நாட்களுக்கு முழுமையாகச் சாப்பிடாமலேயே போராடினார். ஒருகட்டத்தில் உடல்நிலை மோசமாகி அவர் சுருண்டு விழந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. பின்பு அவர் தனது போராட்ட உத்தியை மாற்றிக்கொண்டு ஒருவேளை மட்டும் உணவு உண்கிறார். இப்போதும்  தலைமைச் செயலகம் முன்பு ஆர்ப்பாட்டம், போராட்டம் என வருபவர்களும், அவ்வழியே செல்பவர்களும் ஸ்ரீஜித்துடன் பேசி, செல்ஃபி எடுத்துக்கொள்கின்றனர். கேரளத்தில் பலரும் தங்களது முகநூல் பக்கத்தில் இவரது படத்தை வைத்துக்கொள்ளும் அளவுக்குப் பிரபலமாகிவிட்டார் என்பதே இவரது போராட்டத்தின் உறுதிக்குச் சாட்சி!

தினசரி உண்ணாவிரதம் இருக்கும் நாட்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடும் வகையில் அதை பெயின்டால் எழுதுகிறார் ஸ்ரீஜித். ஒருவேளை உண்பது, உறங்குவது என அத்தனையும் ஸ்ரீஜித்துக்குத் தலைமைச் செயலகம் முன்புதான். தனது போராட்ட இடத்தில் புத்தர் படத்தையும் அழகாக வரைந்து மாட்டியுள்ளார். இந்தப் போராட்டம் குறித்து நம்மிடம் பேசிய ஸ்ரீஜித், “கேரள மாநிலம், நெய்யாற்றங்கரை எனது பூர்வீகம். அப்பா சின்ன வயசுலயே இறந்துட்டாங்க. அம்மா, அண்ணன், தம்பின்னு நாலு பேருமா மகிழ்ச்சியா வாழ்க்கை போச்சு. நான் ஒரு ஸ்டுடியோவுல வேலை பார்த்தேன். என் தம்பி ஸ்ரீஜிவ்வை ஒரு திருட்டு வழக்கில் விசாரிக்கணும்னு கடந்த 2014-ம் வருசம், மே 19-ம் தேதி பாறசாலை போலீஸ்கூட்டிட்டுப் போனாங்க. அப்படி அழைச்சிட்டுப் போனவங்க, 21-ம் தேதி, ஸ்ரீஜிவ் லாக் -அப்பில் வைத்து விஷம் குடிச்சு தற்கொலை செஞ்சுக்கிட்டதாச் சொன்னாங்க.

இதுபத்தி விசாரிச்ச ஓய்வுபெற்ற நீதிபதி சந்திரசேகர குருப், பாறசாலை காவல் ஆய்வாளர் கோபகுமார், சார் ஆய்வாளர் பிலிப்போஸ் இரண்டு பேருமா சேர்ந்து என் தம்பியை அடிச்சும், விஷம் கொடுத்தும் கொலை செஞ்சுருக்காங்கன்னு சொன்னாரு. ரெண்டு போலீஸ்காரங்களுக்கும் தலா பத்து லட்சம் அபராதம் விதிச்சு, அதை என் குடும்பத்துக்குக் கொடுக்கவும்நீதிபதி அரசுக்குப் பரிந்துரை செஞ்சாரு. இதை எதிர்த்து அவங்க ரெண்டு பேரும் வழக்குப் போட்டு, நடவடிக்கைக்குத் தடை வாங்கிட்டாங்க.

x