வேலையில்லாமல் ஊர் சுற்றிக்கொண்டிருப்பவர்களை ‘சீமெ சுத்தி’ என்று கிராமத்துப் பக்கம் சொல்வார்கள். ஆனால், இந்த ‘சீமெ சுத்தி’ நீலகிரி மாவட்டத்தில் பழங்குடி மக்களுக்காகச் சுற்றிவரும் பத்திரிகை கதாநாயகன்!
பனராஸ் மாத்யூ, புதுச்சேரி பிரத்தீம்ராய், லக்னோ ஸ்நேலதா இவர்கள் பழங்குடிகளுக்காக 1993-ல் கோத்தகிரியில் உருவாக்கிய அமைப்பு ‘கீஸ்டோன் பவுண்டேஷன்’ (keystone Foundation). பழங்குடி மக்களின் ஒவ்வொரு தேவைக்கும் ஏற்ப துறைகள் பிரிக்கப்பட்டு, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு கட்டமைப்புகளை உருவாக்கியது ‘கீஸ்டோன்’. தேனீ வளர்ப்பு, மூலிகை நடவு, பழங்குடிகளுக்கான பல்வேறு பயிற்சிகள் என இப்போது இந்த மையத்தில் பல்வேறு பணிகள் நடக்கின்றன. இதன் மூலம் நீலகிரி, சத்தியமங்கலம் காடுகளில் 256 கிராமங்களைச் சேர்ந்த பழங்குடிகள் பயன்பெறுகின்றனர். இந்த நல்ல விஷயங்களைப் பழங்குடி மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக 12 வருடங்களுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்டதுதான் ‘நீலகிரி சீமெ சுத்தி’ பத்திரிகை.
‘டேப்லாய்டு’ சைஸில் எட்டுப் பக்கங்களில் வெளிவந்த இந்த மாத இதழுக்கு பல்வேறு பழங்குடியின கிராமங்களில் வசிக்கும் 32 பழங்குடிகளே செய்தியாளர்கள். இவர்கள் அனைவருமே பள்ளிப் படிப்பைத் தாண்டாதவர்கள். நிதிப் பற்றாக்குறை காரணமாக செய்தியாளர்கள் படை இப்போது 8 பேராக சுருங்கி, இதழும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வந்துகொண்டிருக்கிறது. இந்தச் செய்தியாளர்கள் மாதத்தில் வரும் முதல் செவ்வாய் கிழமையில் கோத்தகிரி ‘கீஸ்டோன் பவுண்டேஷன்’ மையத்தில் சந்திக்கிறார்கள். தங்கள் பகுதியில் அந்த மாதம் நடந்த நிகழ்வுகள் பற்றி கலந்துரையாடுகிறார்கள்.
கடந்த மாதத்துக்கான சந்திப்பில் நானும் அங்கு இருந்தேன். நிறையவே அனுபவங்களைப் பெற்றேன். ஆசனூர் மகேந்திரன் திம்பம், தலைமலை, மாலரத்தம் என 34 கிராமங்களுக்கான (சாட்சாத் வீரப்பன் ஏரியாதான்) செய்தியாளர். பழங்குடி மக்களே அறிந்திராத வன உரிமைச் சட்டத்தை முன்னிறுத்தி விழிப்புணர்வு செய்து, பழங்குடிகள் 250 பேருக்கு பட்டா வாங்கித் தந்த அனுபவத்தைச் சொல்லி பிரமித்தார் மகேந்திரன்.