கண்ணியம்... கம்பீரம்... காக்கிச்சட்டை..!


மக்களின் பாதுகாப்புக்கு அரணாய் நிற்கும் காவலர்களைப் பொத்தாம் பொதுவாக வில்லன்கள் போலவே சித்தரிக்கும் அபாயகரமான ஒரு சூழலைச் சிலர் உருவாக்கி வருகின்றனர். காவல்துறையில் சில கறுப்பு ஆடுகள் மேற்கொள்ளும் தவறான, முரட்டுத்தனமான நடவடிக்கைகளை வைத்துக்கொண்டு, ஒட்டுமொத்தக் காவல் துறை மீதே ஆத்திரம் கொள்வதும், அவர்களை ஒட்டுமொத்தமாகப் பொதுமக்களுக்கு எதிரானவர்கள் போல் உருவகப்படுத்துவதும், குழப்பம் விளைவிக்கக் காத்திருக்கும் சமூக விரோதிகளுக்கே சாதகமாகப் போய் முடியும்!

‘வன்முறையைப் பிரயோகிக்கும் போலீஸ் மீது பொதுமக்களும் பதில் தாக்குதல் நடத்துவதில் என்ன தவறு?’ என்பது போன்ற விவாதக் குரல்கள், காவல்துறை மீது குற்றவாளிகளுக்கு இருக்கக்கூடிய, இருக்க வேண்டிய இயல்பான அச்சத்தையும் போக்கடித்துவிடும். இந்நிலை தொடரும்போது, காவலர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கதையாகும். கடைசியில், மாநிலத்தின் ஒட்டுமொத்த அமைதியும், பாதுகாப்பும் கேள்விக்குறியாகிவிடும்.

காக்கிச் சட்டைக்கான கண்ணியத்தை பொதுமக்கள் அளிக்கிற வரையில்தான், காவலர்களின் கையிலிருக்கும் லத்தி - துப்பாக்கி மீது சமூக விரோதிகளுக்குப் பயம் இருக்கும். மக்களைக் காக்கும் பணியில் காவல்துறையினரை சோர்வின்றிக் கடமையாற்ற வைப்பது அந்தக் கண்ணியம்தான்.

சட்டத்தை உயிராக மதித்து, பகல் - இரவு பாராமல் கடமை ஆற்றும் காவலர்களும் நம்மைப் போல ரத்தமும், சதையும், இதயமும் உள்ள மனிதர்கள்தான். அவர்கள் தவறு செய்யும்போது, அதைப் பொதுவெளிக்குக் கொண்டு வருவதற்கும், சட்டரீதியான நடவடிக்கையை எதிர்கொள்ளச் செய்வதற்கும், நமது ஜனநாயகம் ஏராளமான வாய்ப்புகளை வழங்கியிருக்கிறது. தவறுசெய்யும் அதிகாரிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துவதுதான் நேர்மையான சமூகத்தின் பொறுப்பு. அப்படியான ஆரோக்கிய சூழலை உண்டாக்குவதில் ஊடகங்களும், பொதுநல அமைப்புகளும் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும்.

x