சொட்டாங்கல்- தமிழச்சி தங்கபாண்டியன்


‘குலுதாடி’ அழகம்மா

பெரிய தூக்குச்சட்டி நெறய கம்பங்கஞ்சியக் குடிச்சுப்புட்டு வந்தாலும் “வவுறு பசிக்கி செமதி, எலந்தவடை வச்சிருக்கியா”னுவா அழகம்மா. எப்பயும் தீனி மென்னுகிட்டே இருக்கிற வாயும், கொட்டக் கொட்ட விரியுற வவுறுமா இருக்குறதால அவளுக்குக் ‘குலுதாடி’னு பட்டாப் பேரு. “வவுறா அது, குலுதாடிய (மாட்டுத் தீனி கரைச்சு வைக்கிற பெரிய மரக் குண்டான்) கவுத்தி வச்சுருக்கா”னு சத்துணவு மாலா அக்கா சடச்சுக்கிட்டாலும் அழகம்மாக்கு மட்டும் உண்டன ஒரு கரண்டி சோறும் வெஞ்சனமும் போட்டுவிடும்.

அழகம்மா சந்திரங்கொளத்துக்காரி. “நெதமும் கொள்ளத் தூரம் நடந்து ஓடியாரேன். வவுத்தப் பசிக்காதாக்கும்”னு நொடிச்சிப்பா. பொட்டுக்கடலயப் போட்டு ஒத்த சுருக்குப்பைய அண்ணாக்கயித்துல கட்டிப் பாவாடைக்குள்ள வச்சுருப்பா. ‘குலுதாடி’னு ஆரு கூப்புட்டாலும் மொகஞ் சுளிக்காம திரும்பிப் பாப்பா. வவுத்துக்கு மேல எப்பயும் எக்கியிருக்கிற சட்டைல கடைசி பட்டனப் போடாம அதத் திருகிக்கிட்டே இருப்பா.

ரீசஸ் பீரியடுல எல்லாரும் முடியனூர்க் கிழவி கிட்டக்கத் தீம்பண்டம் வாங்குனாக்க, அவ மட்டும் முல்லைக்கனி அண்ணாச்சியோட முக்குக்கடைக்கு ஓடிருவா. எப்பயும் சீரணியும், சாத்தூர்சேகும் அங்கன கெடைக்கும். “ ‘குலுதாடி’ வந்துட்டியாக்கும், பையப் பிச்சு எடுத்துக்க”னு அண்ணாச்சி விட்டுறுவாரு. அவருக்கு அழகம்மாவோட அண்ணன் வெடிவாலுதா சரக்கு எடுத்துட்டு வர்றது. “எஞ் சம்பளத்த இவ பெருந்தீனி தின்னே தீத்துப்புடுவா”னு வெடிவாலண்ணன் திட்டுனா, முல்லைக்கனி அண்ணாச்சி “திங்கத்தான இருக்கோம்”னு சிரிச்சிக்கிட்டே கணக்கு வச்சுக்குவாரு.

x