ஹாட் லீக்ஸ்: ஆயிரம் இருந்தாலும் அவரு நம்ம ஊருப் புள்ள!


கோவையைப் பிரிக்காதீங்கய்யா...

கோவை திமுக-வில், வடக்கு, தெற்கு என இரண்டாக இருந்த மாநகர் மாவட்டங்கள் மீண்டும் கோவை மாநகர் மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால் இதில், மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் 57 வார்டுகள் மட்டும் இடம்பெற்றுள்ளன. எஞ்சியவை புறநகர் மாவட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், தலைமை அறிவிக்கும் போராட்டங்களுக்கு கோவை மாநகரில் இருப்பவர்கள் புறநகர்களுக்கு ஓடவேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. ஏற்கெனவே கோஷ்டி கானம் காதைக் கிழிக்கும் கோவை திமுக-வை இது மேலும் பலவீனமாக்கும் என்று சொல்லும் கட்சி நிர்வாகிகள், “கோவை மாநகரின் 100 வார்டுகளையும் ஒரே மாவட்டமாக அறிவிக்க வேண்டும்’’ எனக் குரல் எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

கணக்குப் போடும் கமல்ஹாசன்

கர்நாடகா முதல்வருடன் சந்திப்பு, தேர்தல் கமிஷனில் கட்சிப் பெயர் பதிவு, ராகுல், சோனியா காந்தி சந்திப்பு, கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோருடன் பேச்சு எனத் தனது கட்சியை விசாலப்படுத்திக்கொண்டே இருக்கிறார் கமல்ஹாசன். தனது கட்சியை மாநில கட்சியாக இல்லாமல் தேசியக் கட்சி அந்தஸ்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே இப்படிக் கண்டம் விட்டுக் கண்டம் பாய்கிறாராம் கமல். இதனால்தான், கட்சியின் சின்னம் குறித்து தேர்தல் கமிஷனில் கேட்டபோதுகூட, “அப்புறம் அப்டேட் செய்கிறோம்” என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறார். தேசிய அளவில் அனைவரையும் ஈர்க்கும் வகையில் ஒரு சின்னத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்காகவே கமல் இந்த அவகாசத்தைக் கேட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

x