முடிவற்ற சாலை 9: ரயில் நிலையங்களின் தனிமை!


எனது பயணத்தில் விதவிதமான ரயில் நிலையங்களைப் பார்த்திருக்கிறேன். ரயில் நிலையம் என்பது தனியொரு உலகம். அதனுள் எத்தனை விதமான மனிதர்கள். நாம் யாரும் பார்த்திராத ஸ்டேஷன் மாஸ்டர் தொடங்கி பிளாட்ஃபார பெஞ்சில் உறங்கிக்கொண்டிருக்கும் பிச்சைக்காரர் வரை வியப்பூட்டும் மனிதர்களின் வாழ்க்கை அதனுள் அடங்கியிருக்கிறது. அதிலும் ரயில் வராத நேரங்களில் ரயில்வே ஸ்டேஷனில் உருக்கொள்ளும் தனிமை அலாதியானது.

சின்னஞ்சிறு ரயில் நிலையங்களில் நாளுக்கு ஒருமுறையோ இருமுறையோதான் ரயில் நிற்கும். மற்ற நேரத்தில் தூங்குமூஞ்சி மரங்களும் சிமென்ட் பெஞ்சுகளும் தண்ணீர் சொட்டும் குழாயும் மகிழ மரங்களுமெனத் தனிமை தன் சிறகை அகல விரித்திருக்கும். வெயில் மட்டுமே நடமாடி மகிழும்.

ரயில்வே ஸ்டேஷனில் நிறைய பகல்பொழுதுகளைக் கழித்திருக்கிறேன். அதுவும் வடஇந்திய ரயில் நிலையங்களில் அடுத்த ரயில் மாறுவதற்காகக் காத்திருந்த பொழுதுகள் மறக்க முடியாதவை. சில நேரம் ரயில் வரத் தாமதமாகி எட்டு மணி நேரம் முதல் பதினாலு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியதாக இருந்திருக்கிறது. அது போன்ற சூழலில் ரயில்வே ஸ்டேஷன் கேன்டீனில் சாப்பிட்டு பிளாட்ஃபாரத்தில் அங்குமிங்கும் அலைந்து திரிந்து ஸ்டேஷனை ஒட்டிய மரத்தில்நிற்கும் குரங்குகளை வேடிக்கை பார்த்தபடியே இருப்பேன். தண்டவாளத்தை எண்ணுவேன். தூரத்து மேகத்தை பார்த்துக்கொண்டிருப்பேன். விட்டுவிட்டு சப்தமிடும் பறவையின் குரலை ரசிப்பேன்.

வாழ்க்கை விநோதமானது. சிலருக்கு ரயில்வே ஸ்டேஷன்தான் வீடு. அதை ஒட்டியே காலியிடத்தில் தங்கிக்கொண்டு பிளாட்ஃபாரத்தில் நாளைக் கழிப்பவர்களைக் கண்டிருக்கிறேன்.

சிறிய ரயில் நிலையங்கள் அழகானவை. அவற்றுக்கெனத் தனி வாசமும் நிறமும் இயல்புமிருக்கின்றன. ரயில் நிலையத்தில் கிடைக்கும் டீக்கென்றே தனி ருசியிருக்கிறது. ரயில்வே ஸ்டேஷனை ஒட்டிய ரயில்வே காலனியில் குடியிருப்பவர்கள் நாளெல்லாம் ரயிலைப் பார்த்தபடி அதன் ஓசையைக் கேட்டபடியே இருக்கிறார்கள். அவர்களுக்கு ரயிலைப் பிடிக்காது. கிராமத்துச் சிறுவர்களுக்கோ தூரத்தில் ரயில் போனால்கூட கைகாட்டிச் சிரிப்பது பிடித்தமானது. இனத்தால், மொழியால் பிரித்து வைக்கப்பட்ட நம்மை ரயில் இணைத்துவிடுகிறது.

பாசஞ்சர் ரயிலில் புத்தகம் படிப்பது தனியொரு அனுபவம். என் கல்லூரி நாட்களில் புத்தகம் படிப்பதற்கென்றே செங்கோட்டை பாசஞ்சரில் ஏறிச் சென்றுவருவேன். ஐந்து மணி நேரம் எந்தத் தொல்லையும் இல்லாமல் சுதந்திரமாகப் படித்துக்கொண்டு வரலாம். இடையில் தேநீர் விற்பவர் வருவார். சூடான தேநீர் குடிக்கலாம். கண்சோர்வு அடையும் நேரம் வெளியே ஒடும் காட்சிகளைப் பார்த்துக்கொண்டு வரலாம். படிப்பதற்கு இது போல பல இடங்களையும் வழிகளையும் கண்டுபிடித்திருந்தேன்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை கொல்கத்தா ரயில் நிலையத்தில் ஒன்பது மணி நேரம் காத்திருக்க வேண்டியதாகிற்று. மழைக்காலமது. புயல் எச்சரிக்கை காரணமாக ரயில்கள் நிறைய ரத்தாகியிருந்தன. நான் பதிவுசெய்திருந்த ரயில் புறப்படுமா இல்லையா என்றே தெரியவில்லை. கொட்டும் மழைக்குள் ரயில் நிலையத்திற்குள் ஒடுங்கியிருந்தேன். வெளியே பேரோசையுடன் இடி மின்னல்வெட்டு. மழை கொட்டித்தீர்க்கிறது. ரயில் கிளம்பிவிட்டால் போதும் எப்படியாவது இங்கிருந்து வெளியேறிவிடலாம் என நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், ரயில் பற்றி அறிவிப்பேயில்லை.

ரயில் நிலையம் பகலிலும் இருண்டுபோயிருந்தது. மழையின் சீற்றத்துக்குப் பயந்து ஆட்கள் நெருக்கிக்கொண்டு நின்றிருந்தார்கள். மழையின் வேகம் அதிகமாகிக்கொண்டேயிருந்தது. பேசாமல் லாட்ஜுக்குத் திரும்பிச் சென்று இன்னொரு நாள் தங்கிவிட்டு மழை விட்டதும் கிளம்பலாமா என்றுகூட யோசனையாக இருந்தது. ஆனால், ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்து டாக்ஸி பிடித்து லாட்ஜுக்குப் போவது இன்னும் சிரமம். ஆகவே, ரயில் நிலையத்துக்குள் நின்றபடியே மழையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். வரிசையாக ரயில்கள் ரத்துசெய்யப்பட்டுக்கொண்டேயிருந்தன. வேறு எங்காவது மாறிப் பயணம் செய்வது என்றாலும் இயலாத நிலை. என்ன செய்வது என அறியாமல் ரயில் நிலையத்திலேயே இருந்தேன். மழை. சீறும் மழை. இரும்பைத் தின்னும் மழை. நேரம் போக மறுத்தது. வெறுமையின் உச்சம். ஒரு வழியாக, இரவு ஏழு நாற்பதுக்கு ரயில் கிளம்பும் என அறிவித்தார்கள். அப்போது மணி இரண்டு. இன்னும் ஐந்து மணி நேரம் காத்திருக்க வேண்டும். மழை விடுவதாகயில்லை. பயந்த முகங்கள். நிற்கும் ரயில் மீது பெய்யும் மழை. பிளாட்ஃபாரம் எங்கும் மழைத்தண்ணீர்.

மனிதன் பயப்பட வேண்டிய ஒரே ஆயுதம் தண்ணீர்தான். அதன் வலிமைக்கு நிகரேயில்லை. பகல் மறைந்து இரவாகியது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிட்டது. இருட்டு. மழையோடு சேர்ந்து ஒழுகும் இருட்டு. அவசர விளக்குகள் ஒன்றிரண்டு ஒளிர்ந்தன. மற்றபடி ரயில் நிலைய பிளாட்ஃபாரம் தெரியாத இருட்டு. அறிவிப்பு ஒலிபெருக்கி வேலை செய்யவில்லை. ஒருவேளை ரயில் ரத்தாகிவிடுமா என்ற பயம் கூடவே இருந்துகொண்டிருந்தது. ஒருவழியாக மழை குறைய ஆரம்பித்தது. மழை சப்தம் கேட்டுக் கேட்டு நடுங்கிக்கொண்டிருந்த காதுகள் மெல்ல அமைதி கொண்டன. மின்சாரம் திரும்பியது. பிளாட்ஃபாரத்தின் மஞ்சள் வெளிச்சம் பாதுகாப்பு உணர்வை உருவாக்கியது.

நான் செல்ல வேண்டிய ரயில் பிளாட்ஃபாரத்துக்கு வந்துசேர்ந்தது. அதை பார்த்த மாத்திரம் ஒடிப்போய் ஏறி இருக்கையில் அமர்ந்துகொண்டேன். நனைந்த மனிதர்கள். ஈர உடைகள். ஈரமான சுமைகள். ரயில் கிளம்புவதற்கான ஆயத்தமேயில்லை. ரயில் கிளம்பாவிட்டாலும் பரவாயில்லை. இதற்குள்ளேதான் இருப்பேன் என முடிவோடு பெர்த்தில் ஏறி படுத்துக்கொண்டேன். ஒருவழியாக ரயில் பத்தரை மணிக்குக் கிளம்பியது. ரயில் புறப்படத் துவங்கியதும் மனது ஆறுதல் கொண்டது. பசியை மறந்து படுத்துக் கிடந்தது அப்போதுதான் நினைவுக்கு வந்தது

ரயில் கிளம்பி இருளுக்குள் ஊர்ந்து போனது. அடுத்த அரைமணி நேரத்தில் மீண்டும் மழை. கதவு ஜன்னல்கள் எல்லாவற்றையும் மூடி வைத்துவிட்டோம். மழையின் கைகள் ஜன்னலைத் தட்டி ஓய்ந்தன. ரயில் பெட்டி ஒழுகியது. காலையில் இருந்ததை விடவும் அதிகமான மழை.

ஒரிசாவில் புயல் அடித்துக்கொண்டிருக்கிறது என்றார்கள். மழைக்குள் ரயில் மெதுவாகவே சென்றது. இரும்புக் கதவை, ஜன்னலைத் தாண்டி மழை பெட்டிக்குள் எட்டிப்பார்த்தது. மூடப்படாத ஜன்னல் வழியாக மழை பெட்டியினுள் சீறி விழுந்தது. ரயில் கவிழ்ந்து விடுமா, இல்லை பாதியில் நின்றுவிடுமா என்ற பயம். பிரார்த்தனையும் வேண்டுதலுமாகப் பயணிகள் ஒடுங்கிக்கொண்டிருந்தார்கள்.

இரவு முழுவதும் மழை கொட்டித்தீர்த்தது. கீழே காலை வைக்க முடியாதபடி ரயில் பெட்டியினுள் தண்ணீர். இரவு ஒருவரும் உறங்கவேயில்லை. விடிகாலையில் என்னை அறியாமல் உறங்கியிருந்தேன். கண்விழித்துப் பார்த்தபோது ஒளிரும் சூரியன். மழை நின்றுபோன தூய வானம். வெம்மையான பகல். திறந்திருந்த கதவின் அருகில் போய் நின்றபடியே சூரியனைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அதன் ஒளிக்கதிர்கள் என் மேல் பட்டபோது சந்தோஷமாக இருந்தது. கைகளைக் கூப்பி சூரியனை வணங்கினேன். என்னை அறியாமல் கண் கலங்கியது.

எவ்வளவு நேரம் அந்த சூரிய வெளிச்சத்தில் நின்றிருந்தேன் என்றே நினைப்பில்லை. ஒரு சின்னஞ்சிறு ரயில் நிலையத்தில் கிராசிங்குக்காக ரயில் நின்றது. அந்த ரயில் நிலையத்தில் மக்காச்சோளம் விற்றுக்கொண்டிருந்தார்கள். அந்த மக்காச்சோளத்தில் ஒன்றை வாங்கித் தின்றேன். உலகில் கிடைக்காத பொருள் ஒன்றைச் சாப்பிடுவது போன்ற சந்தோஷத்தைத் தந்தது.

ரயில் கிளம்பிய பிறகு மெல்ல பயணிகள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள். அதன் பிறகு மழையில்லை. வெயிலில் ரயில் போய்க்கொண்டிருந்தது. பகலின் அகன்ற வெளிச்சத்தைப் பார்த்தபடியே வந்தேன். ஆனால், மனதில் ரயில் நிலைய இருட்டும் மழையும் தந்த பயம் கலையாமல் இருந்தது.

இயற்கையின் கருணையால்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இயற்கை சீற்றம் கொண்டால் அது பேரழிவை உண்டாக்கிவிடும் என்பதை அன்று முழுமையாக உணர்ந்துகொண்டேன். பயணம் சந்தோஷத்தை மட்டுமில்லை, இது போன்ற நெருக்கடிகளை, இடர்களை உருவாக்கி அதன் வழியாக வாழ்க்கையைப் புரிந்துகொள்ள வைக்கும்.

எட் ஹான்லி என்பவர் இந்தியாவில் மிக நீண்ட தூர ரயிலான திப்ரூகர் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸில் பயணம் செய்து தனது அனுபவங்களை ‘The Longest Train In India’ என்ற நூலாக எழுதியிருக்கிறார். இந்த ரயில் அசாமில் துவங்கி கன்னியாகுமரி வரை செல்கிறது. அதாவது 4,273 கிலோ மீட்டர் தூரம். மூன்று பகல் நான்கு இரவு பயணம். இந்த பயணத்தின் ஊடாக இந்தியாவின் குறுக்குவெட்டை அறிந்துகொள்ள முடியும். 21 பெட்டிகள் கொண்ட ரயிலில் 1,800 பேர் பயணம் செய்கிறார்கள். இந்தியாவின் நீண்ட தூர ரயிலைப் பற்றி வாசித்த நாளிலிருந்து இதில் ஒருமுறை பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை எழுந்துள்ளது.

ஒரு பயணியே இன்னொரு பயணியின் ஆதர்சமாகிறான். நிறைய பயணம் செய்தவன் ஒருபோதும் இயற்கையைச் சீரழிக்க மாட்டான். உணவை வீணடிக்க மாட்டான். சக மனிதர்களை வெறுக்க மாட்டான். ஒவ்வொரு பயணமும் ஒரு பாடமே!

(பயணிக்கலாம்...)

x