கூடாரத்துத் திரைய விலக்கி ஈட்டியோட வந்து நின்ன கலிங்காவோட வேகத்தைப் பார்த்த போடப்ப நாயக்கர், சடார்னு எந்திரிச்சு, ரெண்டு கையையும் தூக்கி, பின்வாங்கிப் பதறி நின்னாரு!
காவக்காரங்க சுதாரிச்சு ஓடிவர, சித்தனும் ஓடிவந்த வேகத்தைப் பார்த்த நந்திச்சாமி, வெடவெடத்துப் போய் நின்னுக்கிட்டு இருந்தான். கலிங்கா சிரிச்சுக்கிட்டே, ‘‘பயப்படாதீங்க மகாராசா.. திடீர்னு வந்த வெள்ளத்துல முங்கின உங்க வீரர்களக் காப்பாத்த முடியல. அவங்க கொண்டுவந்ததுல ஒரே ஒரு ஈட்டியை மட்டும்தான் காப்பாத்த முடிஞ்சது. இந்த ஈட்டியை உங்ககிட்ட ஒப்படைக்கத்தான் வந்தேன்!’’னு சொன்னான்.
போடப்பர் கொஞ்சம் மூச்சுவாங்கி, ஆசுவாசப்படுத்திக்கிட்டாரு. சித்தனையும் கலிங்காவையும் மாறிமாறிப் பார்த்தாரு. ‘‘உன்ன நம்புறேன் கலிங்கா. நீங்க எங்களுக்கு எதிரி இல்லைனு முன்னமே தெரியும். என் பாஷைல ‘தலைய வெட்டு’ன்னு சொன்னா, ‘தலைமறைவா கூட்டிட்டுப் போ’னு அர்த்தம்! பெரும்பிறவிப் பாண்டியனைக் கண்டுபிடிக்கத்தான் உங்களைப் பயமுறுத்த வேண்டியிருந்தது’’னு சொல்லிக்கிட்டே நந்திச்சாமியை உத்துப் பார்த்தாரு. ‘‘நந்திச்சாமி என்கிட்ட சொன்னதை எல்லாம் நான் பூரணமா நம்பல. அவ்வளவு சுளுவா நம்ப மாட்டேன்! யார் அங்கே? இந்த நந்திச்சாமியோட தலைய வெட்டுங்க!’’னு சொன்னதுதான் தாமஸம், அங்க இருந்த அத்தன பேரும் வெடிச்சிரிப்பு சிரிச்சாங்க. ஆனா, சித்தன் மட்டும் சிரிக்காம, போடப்பரையும் துங்கபத்ரா கமண்டலத்தையும் மாறி மாறிப் பார்த்துக்கிட்டிருந்தான்.
‘‘அட... நீ சித்தன்தான். உன்னையும் நம்புறேன். பொம்மிக்குச் சக்தி இருக்குன்னு நம்புறேன். நாங்க ஸ்திரீகள துச்சமா நினைக்கிறதில்ல. எங்க பெண் தெய்வம் ஜக்கம்மாவுக்கு இந்த இடத்துல கோயில் கட்டத்தான், இந்த வேம்பு மரத்தை மட்டும் விட்டுவச்சேன்!’’னு சொன்ன போடப்பர்,கூடாரத்துக்குப் பக்கத்துல இருந்த பெரிய வேம்பு மரத்தைக் காட்டினாரு.
உடனே சித்தன், தன் மனசுக்குள்ள ஒரு கணக்குப்போட்டு, ‘‘மகாராசா இந்த வேம்போட அடிமரத்துல இருந்து பால் சுரக்குது பார்த்தீங்களா? நானூறு வருஷமா இந்த மரம் இங்க இருக்குன்னு ருசுப்படுத்துறேன்’’னு சொன்னான். அந்த வேப்பம் பாலை வழிச்சு அள்ளி சேகரம் பண்ணி, அங்க இருந்த நுங்கு சிரட்டையில ஊத்தினான்.
கீழே கிடந்த வேப்பங்கொட்டையை நசுக்கி உள்ளே போட்டான். தன் வேட்டியில இருந்த நூல உருவித்திரி போட்டு நெருப்பு மூட்டினான். பிரகாசமா எரிஞ்ச வெளிச்சத்துல போடப்பர் முகமும் பிரகாசமா மாறுச்சு. ‘‘ஆகா... இந்த இயற்கை சனங்கமேல எவ்வளவு இரக்கம் காட்டுது பார்த்தீங்களா?’’
‘‘சரியாச் சொன்னீங்க மகாராசா. இந்த மாதிரி இயற்கையை மதிச்ச இரக்கமுள்ள ராசாக்கள் ராஜ்ஜியத்தை ஆண்டதாலதான், இவ்வளவு மழை வருது... இவ்வளவு நதிகள் ஓடுது!’’னு சொன்ன சித்தன், ‘‘பாண்டிய ராசாக்கள் எங்க கன்னிதெய்வத்தை மதிச்சு ஆண்டதால, வீரபாண்டி கிராமம் எப்படி உருவாச்சுனு உங்களுக்கு நாஞ் சொல்லியாகணும்’’னு சொன்னான்.
``முன்னொரு காலத்துல, எங்க முதுவார்கள் அம்மை நோயில சிக்கிக்கிட்டாங்க. அதைத் தீர்க்க வழிவகை தேடினப்ப, மலையிலிருந்து இடம் பெயர்ந்து போறதுன்னு எங்க கன்னிதெய்வம் முடிவெடுத்துட்டாங்க. குழந்தை குட்டிங்க எல்லோருமே கையில வேம்பு மரக் கன்றையும், வேம்பு இலைகளையும் கையில ஏந்தி, மலையில இருந்து கீழ இறங்கி, கிழக்குமுன்ன நடக்க ஆரம்பிச்சாங்க. பல காததூரம் நடந்து முல்லை ஆத்து மேற்குக் கரைக்கு வந்தப்போ, ஒரே வெள்ளக்காடா இருந்துச்சு! மனந்தளராம, வேப்பிலையை தலைமேல சுமந்துக்கிட்டு, அந்த ஆத்துல முங்கி எழுந்திருச்சு கிழக்குக் கரை சேர்ந்ததும், என்ன ஆச்சர்யம் உடம்புல அம்மை அடையாளமா இருந்த கொப்புளம், எரிச்சலடங்கி வத்திப்போச்சு! இதுதான் நல்ல சகுனம்னு நினச்ச கன்னிதெய்வம் அங்கயே குடிசை போட்டு, வேப்ப மரத்தை நட்டு வளர்க்க ஆரம்பிச்சாங்க. வேப்ப இலைக் குளியல்னால அம்மை நோய் குணமாக, இதுக்கு வழிகாட்டின கன்னிதெய்வத்தோட ஞாபகார்த்தமா ஒரு கல்லை நட்டு, அதுக்குக் கண்ணைத் திறந்து கும்பிட ஆரம்பிச்சாங்க. அதுதான் கன்னிதெய்வம். அதுதான் நிம்பவனம்.
மதுரையை ஆண்டுக்கிட்டிருந்த மன்னன் வீரபாண்டியனுக்கு ஊழ்வினையால, அம்மை நோயால இரண்டு கண்ணுலயும் பார்வை பறிபோயிருச்சு. கோயிலுக்குப் போன வீரபாண்டியன், சோமசுந்தரர்கிட்ட, நோய் தீரப் பரிகாரம் கேட்டாரு. ராத்திரி கனவுல வந்த சோமசுந்தரர், ‘நீ மேற்கே இருக்கும் முல்லை ஆத்துக்குப் போ. வேம்பு மரத்துக்கு அடியில் இருக்கும் கன்னிதெய்வத்தை வழிபடு. உனக்கு ஒளி கிடைக்கும்’னு சொல்லி மறஞ்சுட்டாரு. வீர
பாண்டியன், உடனே புறப்பட்டு முல்லை ஆத்துக் கரைக்குவந்து, கன்னிதெய்வத்தோட திருவடியில விழுந்து கும்பிட்டாரு. கன்னிதெய்வம் சொன்னபடிக்கு, வீரபாண்டியன் வேப்பிலையும் மஞ்சளையும் அரச்சு ஆடை போல உடம்புல வரஞ்சுக்கிட்டாரு. அதே கோலத்துல முல்லை ஆத்துல ஏழு நாள் முங்கி எழுந்திரிக்க, அம்மை நோயும் போயிருச்சு, கண் பார்வையும் கிடைச்சிருச்சு! சந்தோஷப்பட்டுப்போன வீரபாண்டியன், கன்னிதெய்வத்துக்கிட்ட ‘கைமாறு என்ன செய்யணும்’னு கேட்டாரு.
‘உனக்கு வழிகாட்டின சோமசுந்தரர் ஞாபகார்த்தமா மேற்குக் கரையில ஒரு லிங்கத்தை நட்டு அடையாளப்படுத்திக்கோ. அதுக்கு ‘கண்ணீஸ்வரமுடையர்’னு பேர் வச்சுக்கோ. சனங்க கும்பிடட்டும்’னு சொல்லி, ஆசிர்வாதம் பண்ணி அனுப்பினாங்க. அந்த மன்னன் அங்கேயே அரண்மனை கட்டி வாழ்ந்ததால, அந்த ஊருக்கு ‘வீரபாண்டி’னு பேர் வந்துச்சு. அங்கே இருக்கிற எங்க கன்னிதெய்வத்தைத்தான் பிற்காலத்துல வந்த பாண்டியர்கள், ‘கௌமாரி கன்னி தெய்வம்’னு பேர் வச்சு கும்பிட ஆரம்பிச்சாங்க.
ஆக, எங்க கன்னிதெய்வத்தோட அம்சமான இந்த பொம்மியை நீங்க மதிக்கிறதுக்கு அடையாளமா உங்ககிட்ட ஒண்ணு கேட்பேன். மறுக்காம கொடுத்து உதவணும் மகாராசா!’’னு காரியத்துல கண்ணா இருந்து, கதைய இங்க வந்து முடிச்சான்!
‘‘என்ன வேணும்னாலும் கேளு சித்தா. பொம்மிக்காக எதை வேணும்னாலும் தருவேன்!’’
‘‘நீங்க கோபப்படக் கூடாது மகாராசா... சிநேகிதமா கேட்கிறேன். நீங்க வச்சிருக்கிற அந்த துங்கபத்ரா கமண்டலம் வேணும்’’னு சித்தன் சொல்லி வாய் மூடல, போடப்பர் ‘கெக்கெக்கே’னு சிரிக்க ஆரம்பிச்சிட்டாரு. கமண்டலத்தைக் கையில எடுத்து வச்சுக்கிட்டாரு, ‘‘நீ சொன்ன கதையை நம்புறேன் சித்தா. ஆனா, கமண்டலத்துக்கும் பொம்மிக்கும் என்ன சம்பந்தம்? கமண்டலம் உன் கையில கிடச்சா இந்த மதுரை ராஜியத்தைக் கைப்பத்தலாம்னு நினப்பா... இல்ல...? ’’
‘‘மாப்பு கொடுங்க மகாராசா. இன்னிக்குப் பூரண அமாவாசை. இன்னும் மூணு நாழிகை நேரம்தான் இருக்கு. பொம்மியும் அவளோட புருஷன் கலிங்காவும் புணர்ச்சியில ஈடுபட்டே ஆகணும். அவுங்களுக்கு வாரிசு உருவாக இந்தக் கமண்டலத்துல இருக்கும் ஊத்துத் தண்ணி வேணும்!’’னு தயங்கித் தயங்கிச் சொன்னான் சித்தன்.
கொஞ்ச நேரம் யோசிச்ச போடப்பர். ‘‘சரி. எனக்கு என்ன காரியம் ஆகணுமோ அதுக்கு நீ ஒத்தாசை பண்ணணும், செய்வியா?’’
‘‘என் ஆயுள் பரியந்தம். ஒரு உயிரை உண்டாக்கணும். அதுக்காக என் உயிரையும் தரத் தயாராக இருக்கேன். சொல்லுங்க மகாராசா?’’
போடப்பர், பொம்மியப் பார்த்துச் சிரிச்சாரு. சித்தனை மட்டும் நம்பிக்கையோட பார்த்துத் தனியா கூட்டிக்கிட்டுப் போய் அவன் காதுல ‘கரகர’ன்னு ஏதோ சொன்னாரு. பதறிப்போன சித்தன், கொஞ்சம் யோசிச்சு, ‘‘மகாராசா... எனக்குச் சம்மதம்தான். இது எங்க இனத்துக்கு எதிரான தீம்புதான். பரவாயில்லை. நானும் உசுரை விட வேண்டியிருக்கும். சிரசுதான் சித்தம்! கமண்டலத்தைக் கொடுங்க’’னு சோகமான முகத்தோடு கேட்டான்!
- சொல்றேன்...
-வடவீர பொன்னையா