பதுங்கியிருக்கிறோம்... பயந்துவிடவில்லை!- மதுரையிலிருந்து மிரட்டும் சீமான்!


தினம் ஒரு பொதுக்கூட்டம், போராட்டம் என்றிருந்த சீமான், இப்போது கட்டாய ஓய்வில் இருக்கிறார். நீதிமன்ற உத்தரவுப்படி 15 நாள் நிபந்தனை ஜாமீனில் மதுரையில் தங்கியிருக்கும் அவரைச் சந்திக்கச் சென்றோம்.மதுரையின் ஊரகப் பகுதியில் உள்ள ‘கடம்பவனம்’ விடுதியில் கட்சிக்காரர்களுடன் மாலை நேர உடற்பயிற்சியில் இருந்தார் சீமான். ‘தம்பி’ படத்து மாதவன் போல் சதா அறச்சீற்றத்தோடு இருப்பாரோ என்று எதிர்பார்த்துப் போனால், ரொம்பவே இலகுவாக இருந்தார் மனிதர். காற்றுடன் சண்டையிடுவது போல மூர்க்கமாகக் காலால் உதைப்பது, குதியோட்டம், இடுப்பைச் சுழற்றிக்கொண்டே இடம் வலமாக ஓடுவது, கையைத் தலைக்கு மேல் சுழற்றியபடி ஓடுவது என்று விதவிதமான உடற்பயிற்சி. அதை நம் புகைப்படக்கலைஞர் படமெடுக்க, “தம்பி, மாந்தோப்புக்குள் மாவோயிஸ்ட்கள் பயிற்சின்னு எதுகை மோனையா தலைப்பு போட்டுறாதீங்க. இதுதான் சாக்குன்னு பிணையை ரத்து பண்ணி உள்ள பிடிச்சிப்போட்டுடுவானுங்க” என்று கேலி செய்தவர், அடுத்து கால்பந்தாட்டத்தில் இறங்கினார்.

“வெற்றி”, “புகழ்” (மதுரை, தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள்) என்று கத்தியபடி பந்தை ‘பாஸ்’ செய்து ‘கோல் போஸ்ட்’ அருகே போய் அவர் ஓங்கி அடிக்க பந்து மைதானத்துக்கு வெளியே (அவே) போய்விட்டது. பெரிய பள்ளத்தை நோக்கி பந்து போவதைக் கண்ட சீமான், “தம்பி விரைந்துசெல்... பறந்து செல்” என்று சுத்தத் தமிழில் உத்தரவுகளைப் பிறப்பித்தார். “விடமாட்டோம் விட மாட்டோம் சீமான் தம்பிகள் விடமாட்டோம்” என்று கேலியாகச் சொல்லியபடி பந்தை விரட்டினார் புகழேந்தி. அவரை, “தலைவரே, (மாவட்ட தலைவர்களை அப்படித்தான் சொல்கிறார் சீமான்) உடம்புக் கொழுப்பு போய், வாய்க்கொழுப்பு வந்திடுச்சா?” என்று செல்லமாகக் கண்டித்தார் சீமான். சுமார் ஒரு மணி நேர உடற்பயிற்சிக்குப் பிறகு இளவட்டக்கல் ஒன்றின் மீது அமர்ந்தபடி நமது பேட்டிக்கு சமூகம் அளித்தார் சீமான்.

போராட்டம், மைக் இல்லாமல் எப்படியிருக்கிறது இந்த அனுபவம்?

கடந்த காலங்களிலும் இதுபோன்ற அடக்குமுறைக்கு ஆளாகியிருக்கிறேன். ஆனால், இது அசாதாரணமான சூழல். திரும்பிய திசையெல்லாம் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்கிற நேரத்தில், ஒவ்வொரு நொடியும் எனக்கு முக்கியம். இந்தத் தருணத்தில் இப்படித் திறந்தவெளிச் சிறையில் தள்ளிவிட்டார்கள். மக்களைச் சந்திக்க முடியவில்லை. தம்பிகளைப் பார்க்க முடியவில்லை. மே 18 தான் கடைசியாக மேடையேறினேன். ஆனாலும், பதுங்கியிருக்கிறோமே ஒழிய, பயந்துவிடவில்லை. பாய்வோம்.

x