கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்த கலைஞன்!


மக்கள் மனதில் அளித்த அரியாசனத்தால் உச்ச நட்சத்திரங்கள் உருவெடுக்கிறார்கள். அவர்களுக்கென்றே கதைகளை எழுதும் வழக்கம் எம்.கே.தியாகராஜ பாகவதர் காலத்திலேயே தொடங்கிவிட்டது. ஆண்களின் பிடியில் இருக்கும் திரையுலகில், லேடி சூப்பர் ஸ்டாராக உயர்ந்த சாவித்திரிக்காகவும் கதைகள் எழுதப்பட்டன. ஆனால், குணச்சித்திர நடிகருக்காகவே ஒரு திரைக்கதை எழுதப்பட்ட அதிசயம் நிகழ்ந்தது என்றால் அது எஸ்.வி.ரங்காராவுக்கு மட்டும்தான். அதை எழுதியவர் ‘இயக்குநர் திலகம்’ கே.எஸ்.கோபாகிருஷ்ணன். அந்தப் படம் 1967-ல் வெளிவந்த ‘கண்கண்ட தெய்வம்’.

உலகமறியாமல் வளர்ந்து, நான்கு பிள்ளைகளுக்குத் தந்தையாகவும் ஆகிவிட்ட அப்பாவித் தம்பிக்கும் அவரது குடும்பத்துக்கும் கடைசிவரை கண்கண்ட காவல் தெய்வமாக விளங்கும் அண்ணன் கதாபாத்திரத்தை ஆராவாரம் இல்லாமல் வெளிப்படுத்தியிருப்பார் ரங்காராவ். ‘நடிப்புச் சக்கரவர்த்தி’ என ஆந்திரத் திரையுலகம் கொண்டாடும் ரங்காராவ், திரைக்குள் அடிவைத்தது சமூக நாடக மேடைலிருந்து! கத்தி நடிக்க வேண்டிய நாடக நடிப்பை, திரையில் புராணக் கதாபாத்திரங்களுக்கு அடக்கமாகப் பயன்படுத்தியவர். தனது கம்பீரமான குரலை அளவாகத் தளர்த்தி, யதார்த்த நடிப்பின் புதிய தடத்தை சமூகப் படங்களில் ஏற்ற கதாபாத்திரங்கள் வழியே வளர்த்தெடுத்தவர். அவரது நடிப்பாளுமை பற்றிப் பாடம் நடத்த போதும் இந்த ஒரு படம்!

கமல், ரஜினி, அஜித், விஜய் என்று ஆர்ப்பரிக்கும் இன்றைய தலைமுறைப் பார்வையாளர்கள் வரை ரங்காராவைக்கொண்டு வந்து சேர்த்துவிட்டது அவர் தோன்றும் ‘கல்யாண சமையல் சாதம்’ பாடல் காட்சி. ‘மாயா பஜார்’ படத்தில் கடோத்கஜனாக நடித்தது இன்றைய குழந்தைகளுக்கும் தெரிந்திருக்கிறது என்றால், ‘அன்புச் சகோதரர்கள்’ படம் இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர்களின் நினைவுகளை இன்றும் நெகிழ வைக்கும்.

‘முத்துக்கு முத்தாகச் சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி பிறந்துவந்தோம் கண்ணுக்கு கண்ணாக’ - என்று தன் மூன்று தம்பிகளையும் தோளோடு அணைத்தபடி பாடிக்கொண்டு வரும் கிராமத்து அண்ணன் தர்மராஜ் ஆக அந்தப் படத்தில் தோன்றும் ரங்காராவை அத்தனை சீக்கிரம் கடந்து சென்றுவிட முடியாது.

x