மீண்டும் சேர்க்கப்பட்ட  திலீப்… வெளியேறிய நடிகைகள்!- நடிகைகளுக்கு எதிராகப் போகிறதா கேரள நடிகர்சங்கம்?


நம்பத்தகுத்த காட்சிகளோடு, யதார்த்த வாழ்வியலையும் பேசுபவை மலையாளத் திரைப்படங்கள். ஆனால் இப்போது, நம்பமுடியாத காட்சிகள், மனம் நிரம்ப வக்கிரம் எனத் திரைக்கு வெளியே மலையாளத் திரையுலகின் முகம் கொடூரமாக மாறிவருகிறது. அதன் உச்சமாகத்தான் நடிகர் திலீப், நடிகையைக் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கைதானார். இப்போது அவரை மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்த்திருப்பதால், மலையாளத் திரையுலகமே பிளவுபடும் சூழல் எழுந்துள்ளது!

‘ஜனப்பிரிய நாயகன்’ என்பது திலீப்புக்கு மக்கள் கொடுத்திருந்த பட்டம். ஆரம்பத்தில் மேடையில் மிமிக்ரி, நகைச்சுவை எனச் செய்து வந்தவர், 1991-ல், மலையாள இயக்குநர் கமலிடம் உதவியாளராகச் சேர்ந்தார். 1994-ல், ‘மானத்தே கொட்டாரம்’ என்னும் படம் மூலம் மலையாளத் திரையுலகிற்கு நடிகராக அறிமுகமானார். பிறகு, நடிகை மஞ்சுவாரியரைக் காதலித்து மணமுடித்தார். மஞ்சுவாரியருக்கு 17 வயதில் ஒரு மகளும் உள்ளார்.

திலீப் உதவி இயக்குநராக இருந்த காலத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் காவ்யா. ‘அங்கிள்’ என வாய் நிரம்ப புன்னகையோடு திலீப்பைச் சுற்றி வந்த அந்தக் குழந்தை நட்சத்திரமே இப்போது திலீப்பின் இரண்டாவது மனைவி! தொடக்கத்தில் திலீப், காவ்யாவுடன் நெருக்கம் காட்டியதை மஞ்சுவாரியரிடம் ஒரு பிரபல நடிகை அவ்வப்போது சொல்லி எச்சரித்துள்ளார். இதனால் ஏற்பட்ட மனக்கசப்பில் கடந்த 2014-ல், திலீப் - மஞ்சுவாரியர் தம்பதிக்கு சட்டப்படி விவாகரத்து நடந்தது. அதன் பின்னர் காவ்யாவை மணந்த திலீப்புக்கு, காவ்யாவுடனான காதலை மஞ்சுவாரியரிடம் போட்டுக் கொடுத்த நடிகை மீது கோபம் மறையவே இல்லை. இந்நிலையில்தான் ‘ஹனிபி டூ’ என்ற மலையாளப் படத்தில் நடித்துத் திரும்பியபோது, நடிகையை ஒரு கும்பல் கடத்தி, பாலியல் தொல்லை கொடுத்து அதை செல்போனிலும் வீடியோவாகப் பதிவு செய்தது. இவ்வழக்கு எங்கெல்லாமோ சுற்றி கடைசியில் திலீப் தலையில் விழுந்தது.

இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியான பல்சர் சுனிலோடு சேர்ந்து இச்சம்பவத்தை நடத்த நான்கு ஆண்டுகள் திட்டம் தீட்டியிருக்கிறார் திலீப். கைதானபோது மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’வில் பொருளாளராக இருந்தார் திலீப். உடனே, கொச்சியில் உள்ள நடிகர் மம்முட்டியின் இல்லத்தில் அவசரக்கூட்டம் நடத்திய ‘அம்மா’ சங்க நிர்வாகிகள் திலீப்பை அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்பில் இருந்தும் நீக்கினர். இதையடுத்து, 85 நாள் சிறைவாசம் இருந்துவிட்டு, ஜாமீனில் வந்தார் திலீப். இதனிடையில் அவர் நடித்த `ராம்லீலா’, `கம்மார சம்பவம்’ படங்களும் ரிலீஸாகி பெரும் வெற்றிபெற்றது. பொதுநிகழ்வுகளிலும் சர்வசாதாரணமாகப் பங்கெடுத்து வந்த திலீப், இப்போது மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்க்கப்பட, கொதிநிலைக்குச் சென்றுள்ளனர் நடிகைகள்.

x