யாருக்குத் தண்ணீர்..? தனியாருக்கா, மக்களுக்கா?


பன்னாட்டு நிறுவனங்கள் முதலில் கனிம வளங்களுக்காக நமது வனங்களில் கைவைத்தார்கள். மலைகளை வெட்டி விற்றார்கள். குளிர்பானங்களுக்காக ஆறுகளைச் சுரண்டினார்கள். பெட்ரோலியம், மீத்தேனுக்காக விவசாய நிலங்களில் குழி தோண்டினார்கள். இவை எல்லாவற்றையும் எடுத்துச்செல்ல சாலைகளுக்காக விவசாய நிலங்களைப் பறித்தார்கள். ஒவ்வொன்றாக ஊடுருவியவர்கள் இப்போது நமது அடிப்படைத் தேவையான குடிநீரிலும் கைவைக்கிறார்கள். உலகம் முழுவதும் ஏராளமான நாடுகள் குடிநீரைத் தனியார் மயப்படுத்தியதிலிருந்து பின்வாங்கி அரசுமயப்படுத்தி வரும் (remunicipalisation) சூழலில் கோவை மாநகராட்சி குடிநீர் விநியோகத்துகாகக் பிரான்ஸின் ‘சூயஸ்’ நிறுவனத்துடன் மேற்கொண்டிருக்கும் ஒப்பந்தம் பல்வேறு சந்தேகங்களையும் அச்சங்களையும் மக்களிடம் விதைத்திருக்கிறது. சில முன்கதைகளைப் பார்ப்போம்.

‘கொச்சாபாம்பா’ தண்ணீர்ப் போர் தெரியுமா?

தென் அமெரிக்க நாடான பொலிவியாவின் நகரம் கொச்சாபாம்பா. 1999-ம் ஆண்டு இந்த நகரின் குடிநீர்ப் பராமரிப்பு, விநியோகப் பணிகளை நகராட்சி நிர்வாகம் ‘பெத்தேல்’ என்கிற அமெரிக்க நிறுவனத்திடம் ஒப்படைத்தது. காரணம், அந்த நாடு உலக வங்கியிடம் வாங்கிய கடன். உலக வங்கியின் கடன் தரும் அமைப்பான சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund) ஏழை மற்றும் வளரும் நாடுகளின் குடிநீர் மற்றும் கழிவு நீர் சுத்திரிகரிப்புத் திட்டங்களுக்குக் கடனைத் தரும்போதே அந்தத் திட்டங்களில் தனியாரைப் பங்கு பெற வைக்க வேண்டும் என்கிற நிபந்தனையை விதிக்கிறது. குறிப்பாக, குடிநீர் திட்டங்களுக்குச் செலவிடும் தொகையை வணிக ரீதியாகக் கருத வேண்டும் என்று வலியுறுத்தும் உலக வங்கி, அதற்குரிய லாபத்துடன் மூலதனத்தைத் திரும்ப எடுக்க வலியுறுத்துகிறது. அதன் அடிப்படையில் குடிநீர் விநியோகத்தில் இறங்கும் தனியார் நிறுவனம் குடிநீருக்கான கட்டணத்தைச் சந்தையின் லாபத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கிறது. கொச்சாபாம்பா தொடங்கி கோவை வரை தண்ணீர் வியாபாரத்துக்கான உலகளாவிய அடிப்படை விஷயம் இதுதான்.

தொடக்கத்தில் குடிநீர் சேமிப்பு, குடிநீர் சிக்கனம் போன்ற கோஷங்களுடன் களமிறங்கிய அந்தத் தனியார் நிறுவனம் குடிநீர் கட்டணத்தை நான்கு மடங்கு உயர்த்தியது. மக்கள் தங்களது மாத வருமானத்தில் நான்கில் ஒரு பங்கை குடிநீருக்காக செலுத்த வேண்டியிருந்தது. இதனால் மக்கள் மழை நீரைச் சேகரித்தார்கள். ஆனால், அதற்கும் தடை விதிக்கப்பட்டது. நிலத்தடி நீரை எடுக்கவும் கெடுபிடிகள். கொந்தளித்துப்போன மக்கள் போராட்டத்தில் இறங்கினார்கள். போராட்டங்களை ஒடுக்க ராணுவம் வந்தது. போர்க்களமானது கொச்சாபாம்பா. ஏராளமானவர்கள் காயமடைந்தனர். ஒருவர் உயிரிழந்தார். அதன் பின்பும் போராட்டங்கள் தொடரவே, ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. குடிநீரை மீண்டும் நகராட்சியே பழைய கட்டணத்தில் விநியோகித்தது.

x