சிக்கல் மேல் சிக்கல்... என்னதான் ஆச்சு திருப்பதி ஏழுமலையானுக்கு?


திருவேங்கடமுடையான் பக்தர்களுக்கு முக்கியமான திவ்யதேசம் திருமலை திருப்பதி. திருமால் அழகனின் திவ்யதேசங்களில் 96-வது திருத்தலம் திருப்பதி. இங்கு தினமும் ஆயிரமாயிரமாய் வந்துபோகும் வேங்கடவன் பக்தர்களுக்கு அனைத்துச் சேவைகளையும் சிறிதும் பிசிறு தட்டாமல் வழங்கிவருகிறது திருமலை திருப்பதி தேவஸ்தானம். கிட்டத்தட்ட அது ஒரு தனி அரசாங்கம் போலவே செயல்படுகிறது. உணவு, தங்குமிடம், மருத்துவ வசதி இவற்றுடன் 20 மணி நேர போக்குவரத்து வசதியையும் செய்துதருகிறது தேவஸ்தானம். இத்தனை சிறப்புகளைத் தாங்கி நிற்கும் திருப்பதி தேவஸ்தானம் முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்போது அடுக்கடுக்கான சர்ச்சைகளைச் சந்தித்து வருவது ஏழுமலையான் பக்தர்களை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது!

குறிப்பாகக் கடந்த ஓராண்டாகவே திருமலையில் பல்வேறு பிரச்சினைகள் தலைதூக்கி வருகின்றன. திருமலையில் வேற்று மத பிரச்சாரம் முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், சிலர் இங்கு வேற்று மத பிரச்சாரங்களில் ரகசியமாக ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அப்படி ஈடுபட்ட சிலரை தேவஸ்தான கண்காணிப்புப் பிரிவினர் பிடித்து போலீஸில் ஒப்படைத்த சம்பவங்களும் நடந்தன. இந்தச் சர்ச்சைகளைத் தொடர்ந்து, திருப்பதி தேவஸ்தானத்தில் வேற்று மதத்தினர் பணியாற்றுவதாகவும், அவர்களைக் கோயில் பணிகளில் இருந்து நீக்குமாறும் இந்து அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. இந்த விவகாரம் ஹைதராபாத் உயர் நீதிமன்றம் வரைக்கும் வழக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சமீபத்தில் ஆந்திர அரசு திருப்பதி தேவஸ்தானத்துக்குப் புதிய அறங்காவலர் குழுவை அறிவித்தது. அதில், ஆளும் தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ-வான அனிதாவுக்கும் இடமளிக்கப்பட்டது. இதுவும் விவகாரமானது. ‘விசாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவரான அனிதா இந்து அல்ல; மாற்றுமதத்தைச் சேர்ந்தவர். இவரை எப்படி அறங்காவலர் குழுவில் நியமிக்கலாம்?’ என்று பெரும் சர்ச்சை வெடித்தது. இதையடுத்து, அனிதா தாமாகவே முன்வந்து அறங்காவலர் குழு உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார். அத்துடன் பிரச்சினை ஓயவில்லை... அறங்காவலர் குழு தலைவராக இருக்கும் புட்டா சுதாகர் யாதவும் வேற்று மதத்தவரே என இப்போது சிலர் சர்ச்சையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இவை ஒருபுறமென்றால்... திருமலை சார்ந்து வேறுசில புகார்களும் றெக்கை விரித்தன. திருமலையில் உள்ள பெரும்பாலான உணவகங்களில் தரம் குறைவாகவும் விலை அதிகமாகவும் இருப்பதாக சிலர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதை விசாரித்த நீதிமன்றம், ``இவ்விஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தது. இதையடுத்து, உணவகங்களில் விலை குறைக்கப்பட்டாலும் தரம் என்னவோ பழைய நிலையைத் தாண்டவில்லை!

x