சாட் பூட் த்ரீ
“சீனிப் பயலச் சேர்த்தாக்க நா ஆட்டைக்கு வல்ல. அவன ‘உப்புக்குச் சப்பாணி’யா* வச்சுக்கலாம்”னு சின்ராசு கண்டிசனாச் சொன்னப்போ “நானும் வல்ல”னுட்டுச் சீனியப் பாத்தேன். “அவன் ‘சாட் பூட் த்ரீ’ வேணாக்க சொல்லட்டும்”னு மொட்டை கஜாவும் இழுத்தான். சீனிக்கு மொகம் சுண்டி, மூக்கு வெடச்சுடுச்சு. இன்னும் கொஞ்சம்னா தெக்குத் தெக்குன்னு கண்ணாமுழி நெறஞ்சுரும்னு நா அவன கோயில் திண்ணைக்கு “வா போலாம்”னேன். “விடு, செமதி. எனக்கு மூக்குச் சளி கொட்டுது”னுட்டு வீட்டுக்குப் போயிட்டான்.
சீனிதா எங்க செட்லயே ஒல்லிப்பிச்சான். “வல்லு வதக்குன்னு நொறுங்கத் தின்னாத்தான. வெறும் மேத்தீனியாத் தின்னா வெரலுத் தண்டியாவே மீச மொளக்கிற வரைக்கும் திரியணும்”னு சீனியோட அம்மா மாரியம்மாக்கா பொலம்பும். “எப்பயும் சீக்காளிப் பயலா இருந்தா ஒன்னிய ஒன்னுலயும் சேத்துக்க மாட்டாய்ங்க”னு எல்லா வௌயாட்டலயும் சீனிய ஓரங்கட்டிடுவாய்ங்க.
ஒருக்கா ‘இறை வணக்கம்’ முடிஞ்சதும் அறிவியல் வாத்தியார் எங்க எல்லாத்தையும் நிக்க வச்சு ‘சப்பாணி‘ங்கிறது சொல்லக் கூடாத ‘ஆகாத வார்த்தை’னு பாடம் எடுத்தப்புறந்தா ஆராச்சும் சீனிய அப்டிக் கூப்புட்டா நா எக்கி வுடறது. சீனிக்கு அது பழகிட்டாலும், எனக்குப் பொறுக்காதுங்கிறதால எங்கூடவே தொத்திக்கிட்டுச் சேக்காளியாகிட்டாப்ல.