முடிவற்ற சாலை 8: வயதெனும் வழிகாட்டி!


பயணம் என்பது இயற்கை எழில் மிக்க இடங்களுக்கோ, சரித்திரப் புகழ்மிக்க இடங்களுக்கோ போவது மட்டுமில்லை. பழைய நண்பர்களைத் தேடிக் காணப்போவதும், படித்த பள்ளியை, கல்லூரியை, பிறந்த மருத்துவமனையை, சொந்த ஊரைத் தேடிக் காண்பதும் ஒருவகையில் பரவசமான பயணமே.

பள்ளி நாட்களில் சுற்றுலா அழைத்துக்கொண்டு போவார்கள். இதற்கான அறிவிப்பு வந்த நாளிலிருந்து மாணவர்கள் வீட்டில் காசு கேட்க ஆரம்பிப்பார்கள். வகுப்பில் நாற்பது பேர் இருந்தால் அதில் பாதிப் பேர் வீட்டில் பணம் தர மாட்டார்கள். ‘எதற்காக ஊர் சுற்ற வேண்டும்’ என்று மறுத்துவிடுவார்கள். சில மாணவர்கள் இதற்காகவே உண்டியலில் காசு சேர்த்து வைப்பதும் உண்டு.

ஆறாம் வகுப்பு படிக்கும்போது ஒருமுறை பள்ளி மாணவர்கள் அனைவரும் மைசூருக்குச் சுற்றுலா போயிருந்தோம். தனியாக ஒரு பஸ் பிடித்துப் பயணம் மேற்கொண்டோம்.

ஆறாம் வகுப்பு ஆசிரியர் இதைப் பற்றி அறிவித்த நாளிலிருந்து யார் யார் பணம் கட்டியிருக்கிறார்கள், யார் பணம் கட்டவில்லை என்பதே அன்றாடப் பேச்சாக இருந்தது. வகுப்பில் படித்த மாணவிகளில் ஒன்றிரண்டு பேரைத் தவிர மற்ற யாரும் வரவில்லை. மாணவர்களில் பன்னிரண்டு பேர் மட்டுமே பணம் கட்டியிருந்தார்கள். இரண்டு பேர் ஐந்து ரூபாய் மட்டுமே கொடுத்திருந்தார்கள். மீதிப் பணம் பயணம் கிளம்புவதற்குள் கட்டிவிடுவதாகச் சொல்லியிருந்தார்கள்.

ஒவ்வொரு நாள் பள்ளிக்குப் போகையிலும் இன்னும் சுற்றுலா போக எத்தனை நாட்கள் இருக்கின்றன என எண்ணிக்கொண்டேயிருப்பேன். மைசூர் எந்தப் பக்கம் உள்ளது, அங்கே என்ன இருக்கிறது என்று எதுவும் அப்போது தெரியாது. ஜாலியாக சுற்றுலா போகப் போகிறோம். அந்தச் சந்தோஷம் மட்டுமே மனதில் இருந்தது.

பஸ்ஸில் ஜன்னல் இருக்கையை எப்படியாவது பிடித்து உட்கார்ந்துவிட வேண்டும் என்று திட்டம் போட்டுக்கொண்டோம். பள்ளிக்கு இரவு ஒன்பது மணிக்குதான் பஸ் வந்துசேரும் என்றார்கள். ஏழு மணிக்கெல்லாம் பயணப் பையுடன் பள்ளிக்கூடம் வந்து சேர்ந்துவிட்டோம். இரவு ஒன்பது மணிக்கு வர வேண்டிய பஸ் பத்தரைக்குத்தான் வந்தது. உறக்கத்துடன் ஏறி அமர்ந்தபோது ஜெயபால் என்ற பையனை இழுத்துக்கொண்டு அவனது அப்பா வீதியில் வந்துகொண்டிருந்தார். அப்போதுதான் அவனுக்கான பணத்தை அவரால் தயார் செய்ய முடிந்திருக்கிறது.

பஸ் முன்பாக வந்து நின்று காசை நீட்டி அவனையும் டூர் கூட்டிப் போங்கள் என்றார். `பணம் கட்டினாலும் ஹெட்மாஸ்டர் கையெழுத்து இல்லாமல் புதிதாகப் பசங்களை ஏற்ற முடியாது’ என்று செல்லையா சார் கண்டிப்புடன் மறுத்தார். ஜெயபால் ஏக்கத்துடன் எங்களைப் பார்த்துக்கொண்டிருந்தான். ‘அதான் பணம் கட்டுறேன்ல சார்’ எனப் பையனின் அப்பா சண்டையிட்டுக்கொண்டிருந்தார்.

`இப்போ பணம் கட்டினா ஒண்ணும் செய்ய முடியாது. சீட்டு ஃபுல் ஆகிருச்சி’ என ஆசிரியர் மறுத்து, அவனை ஏற்றிக்கொள்ளவில்லை. இருட்டில் நின்றபடியே ஜெயபால் சப்தமாக அழுதான். அப்படியும் செல்லையா சார் அவனை ஏற்றிக்கொள்ள முடியாது என மறுத்துவிட்டார். எங்கள் பஸ் கிளம்பிய போது ஜெயபால் பஸ் பின்னாடியே ஓடி வந்து கத்தினான். நிச்சயம் அவன் அன்று இரவெல்லாம் அழுதிருக்கக் கூடும்.

நாங்கள் மைசூர் வந்து சேர்ந்தபோது காலை ஒன்பதரை மணியாகியிருந்தது. வழியில் ஸ்ரீரங்கப்பட்டணம் பார்த்துவிட்டு வந்தோம். அங்கேதான் குளியல், காலை உணவு எல்லாமும். மைசூர் அரண்மனையின் முன்பாக பஸ் போய் நின்று, நாங்கள் இறங்கும்போது ஜெயபாலையும் அழைத்துக்கொண்டு வந்திருக்கலாமே என்று தோன்றியது.

அத்தனை பிரம்மாண்டமான அரண்மனையை முதன்முதலாக அன்றுதான் பார்த்தேன். சினிமாவில்தான் இதுபோன்ற மாளிகைகளைப் பார்த்திருக்கிறேன். நேரில் பார்க்கும்போது வியப்பாக இருந்தது. எத்தனை ஜன்னல்கள் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். ஒருவர் கையை மற்றவர் பிடித்துக்கொண்டு வரிசையாக அரண்மனையின் உள்ளே நடந்தோம். எத்தனை அறைகள்! தங்கமும் வெள்ளியுமாக எவ்வளவு வேலைப்பாடுகள்!

என்னோடு வந்த செல்வம் கேட்டான்... “இவ்வளவு பெரிய வீட்டை எப்படிக் கூட்டுவாங்க? தினம் ஒரு வௌக்குமாறு தேய்ஞ்சிரும்லே?” கலைஅழகோ ஓவியங்களோ அலங்கார விளக்குகளோ அவனைக் கவரவில்லை. அவனது யோசனை எத்தனை பேர் இந்த அரண்மனையில் வீடு கூட்டுவார்கள் என்பதே.

ராஜசிம்மாசனத்தைப் பார்த்தபோது மேடை நாடகமே நினைவுக்கு வந்தது. அரண்மனைக்கு உள்ளே ராஜா இருப்பாரா என ஆசிரியரிடம் கேட்டான் மணி.

மன்னர் குடும்பம் அரண்மனையின் ஒரு பகுதியில் வாழ்வதாகச் சொன்னார் ஆசிரியர். அரண்மனையை வேடிக்கை பார்ப்பதை விடவும் அதன் வெளியே விற்கும் விளையாட்டுப் பொருட்களை எப்போது வாங்குவோம் என்பதிலே துடிப்பாக இருந்தோம். கறுப்புக் கண்ணாடி விற்கும் ஆள் கன்னடத்தில் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான். ஆசிரியரே மாணவர்களிடம் காசு வாங்கி, அவர்களுக்கான பொருளை வாங்கிக் கொடுத்தார். அங்கிருந்து சாமுண்டி மலை. பின்பு பிருந்தாவனம் எனச் சுற்றியடித்துவிட்டு மறுநாள் அப்படியே ஊட்டி பயணம். குளிரில் நடுங்கியபடியே ஊட்டி பூங்காவில் சுற்றியலைந்தோம்.

காணும் இடமெல்லாம் வியப்பூட்டுவதாகயிருந்தது. குளிரில் நடுங்கியபடியே மலை ரயிலில் சென்றோம். பயணத்தின் நினைவாக ஊட்டியில் ஒரு குழுவாகப் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். வீடு திரும்பிய மறுநாள் சுற்றுலா வராத பையன்களிடம் கதைகதையாகச் சொல்லிக்கொண்டிருந்தோம். ஒரே வருத்தம் - அன்று ஜெயபால் பள்ளிக்கூடத்துக்கு வரவில்லை. அவனது அப்பா, படித்தது போதும் என அவனை நிறுத்திவிட்டார்!

சில நாட்களுக்குப் பின்பு பள்ளி விட்டு மாலை நேரம் நாங்கள் மைதானத்தில் கதை பேசிக்கொண்டிருக்கும்போது ஜெயபால் சைக்கிளில் போய்க்கொண்டிருந்தான். நாங்கள் எவ்வளவு கூப்பிட்டாலும் திரும்பிப் பார்க்கவேயில்லை. படிப்பைப் பாதியில் விட்ட அவன், சாயப்பட்டறை வேலைக்குப் போய்வரத் துவங்கினான். பின்பு அவன் பள்ளிக்கூடம் பக்கம் திரும்பிப் பார்க்கவேயில்லை.

அதன்பிறகு வெவ்வேறு வயதுகளில் வெவ்வேறு ஆட்களுடன் மைசூருக்குப் போயிருக்கிறேன். ஒரு சமயம் திரைப்படப் படப்பிடிப்புக் காரணமாக மைசூரில் ஒரு மாத காலம் தங்கியிருந்தேன். அப்போது அரண்மனையைக் கடந்துபோகையில், ஏதாவது ஸ்கூல் பஸ் நிற்பதைக் கண்டால், மனது தானே கடந்த காலத்துக்குள் நுழைந்துவிடும்.

இந்தக் கோடை விடுமுறையில் குடும்பத்துடன் மைசூர் சென்றிருந்தேன். திருவிழாக் கூட்டம் போல மக்கள் திரள். அரண்மனைக்குள் நடந்து செல்லும்போது மனதில் சலனமேயில்லை. அங்குள்ள எந்தப் பொருளும் அலங்காரமும் மனதைக் கவரவில்லை. என் முன்பாக நடந்துகொண்டிருந்தவர்கள் விதவிதமாகப் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். ஒரு பெண் தூண் அருகே நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டாள்.

ஏதேதோ நாடுகளில் எத்தனையோ பெரிய அரண்மனைகளைப் பார்த்துவிட்டிருக்கிறேன். அதுதான் இந்தவிடுபட்ட மனநிலைக்குக் காரணமாக இருக்கும் என யோசித்தபடியே நடந்தேன். திடீரென மனதில் புதைந்துபோன ஜெயபால் நினைவில் வரத் துவங்கினான். அரண்மனையில் படிகளில் இறங்கிக்கொண்டிருந்தபோது,சாலையில் இருட்டில் நின்றபடியே ஜெயபால் அழுத காட்சி நினைவில் வந்தது. அவனைச் சுற்றுலாவுக்கு அழைத்துக்கொண்டு வந்திருந்தால் மிகுந்த சந்தோஷப்பட்டிருப்பான். அத்தோடு தொடர்ந்து பள்ளியில் படிக்கவும் செய்திருப்பான். ஏன் ஆசிரியர் இத்தனை பிடிவாதமாக இருந்தார்?

ஜெயபால் வீட்டின் கஷ்டம்தானே அவனைக் கடைசி நிமிடம் வரை பணம் கட்ட முடியாமல் செய்திருந்தது. அது ஆசிரியருக்குப் புரியாமலா போயிருக்கும்?

இப்போது ஜெயபால் என்ன ஆகியிருப்பான்? வாழ்க்கை ஒவ்வொருவரையும் ஒரு திசையில் அடித்துக்கொண்டு போய்விட்டது. ஜெயபால் பிறகு எப்போதாவது மைசூருக்கு வந்திருப்பானா? தன் மனைவி பிள்ளைகளை அழைத்துக்கொண்டு போயிருந்தால், அப்போது அவன் மனது எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும்? மைசூர் என்பது அவனுக்கு வெறும் ஊரின் பெயரில்லையே...

நினைக்க நினைக்க அரண்மனையைவிட ஜெயபால் பெரியதாக உருவெடுக்கத் துவங்கினான். பிருந்தாவனமும் சாமுண்டி மலையும் மைசூர் நகரமும் சின்னஞ்சிறியதாகிவிட்டதுபோலத் தோன்றியது. நிச்சயம் ஊர் அதிகம் மாறியிருக்காது. ஆனால், மனது பால்யவயதில் எல்லாவற்றையும் பிரம்மாண்டமாகத் தோன்றச் செய்தது. இந்த ஐம்பது வயதில் உலகின் எல்லா ஆச்சரியங்களும் சிறிய விஷயமாக மாறிவிட்டிருக்கின்றன. வயது நம் பயண அனுபவத்தை மாற்றிவிடுகிறது என்பதே நிஜம்.

தேன்நிலவுக்கு நீங்கள் சென்ற ஊட்டி வேறு. மனைவி பிள்ளைகளுடன் முதுமையில் செல்கிற ஊட்டி வேறு. இரண்டு பயணத்துக்கும் இடையில் எவ்வளவு மாறுபட்ட அனுபவம். காலம் மனிதர்களைப் பார்த்து நகைக்கிறது.

ஆண் செல்லும் பயணம் வேறு. பெண் செல்லும் பயணம் வேறு. சபா நக்வி ஆங்கிலத்தில் எழுதும் பெண் பத்திரிகையாளர். இவர் எழுதிய பயண நூல் ‘வாழும் நல்லிணக்கம்’ என்ற பெயரில் தமிழில் வெளியாகியுள்ளது. அதை வாசித்துப் பாருங்கள். மறக்க முடியாத அனுபவங்களின் தொகுப்பாக உள்ளது.

வயதுதான் பயணத்தின் வழிகாட்டி. இளமையும் உடலில் வலுவும் உள்ளபோதே நிறைய பயணம் மேற்கொள்ளுங்கள். பின்பு நீங்கள் விரும்பினாலும் உடல் அதற்கு அனுமதிக்காது.

(பயணிக்கலாம்...)

-எஸ்.ராமகிருஷ்ணன்

x