தாவோ: பாதை புதிது - 18


புகழ்பெற்ற எழுத்தாளர் லூயி கரோல் எழுதிய ‘த்ரூ தி லுக்கிங் கிளாஸ்’ நாவலில் சிறுமி ஆலீஸ் ஓடுவது போன்று ஒரு இடம் வரும். ஆலீஸ் எவ்வளவு ஓடினாலும் ஒரே இடத்தில் நிற்பதுபோன்று தெரியும். அவளை ஒரு மரத்தடியில் சற்று ஓய்வு எடுத்துக்கொள்ளச் சொல்கிறாள் இன்னொரு கதாபாத்திரமான சிவப்பு ராணி. அங்கே இளைப்பாறும் ஆலீஸ் சொல்கிறாள், “இவ்வளவு நேரமும் இந்த மரத்துக்குக் கீழேயே இருந்தது போலவே எனக்கு ஒரு எண்ணம் ஏற்படுகிறதே! எல்லாமும் முன்பு உள்ள மாதிரிதான் இருக்கிறது!”

“ஆமாம், இவ்வளவு நேரமும் ஒரே இடத்தில்தான் இருக்கிறாய்” என்கிறாள் சிவப்பு ராணி.

“எங்கள் நாட்டிலெல்லாம் ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்துக்குப் போக வேண்டும் என்றால், சற்று முன்பு ஓடியதைப் போல நீண்ட நேரத்துக்கு வெகு வேகமாக ஓட வேண்டும்” என்கிறாள் ஆலிஸ்.

“உங்கள் நாடு ரொம்பவும் மெதுவான நாடாக இருக்கும். இங்கே நீ எவ்வளவு வேகத்தில் ஓடினாலும் அதே இடத்தில்தான் இருக்கிறாய் பார். இங்கே, ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு ஓட வேண்டும் என்றால் இதைவிட இரு மடங்கு வேகமாக நீ ஓட வேண்டும்” என்கிறாள் சிவப்பு ராணி.

வேகத்தை வழிபடும் இன்றைய உலகுக்கு மிகவும் அடிப்படையான ஒரு ‘சுய முன்னேற்ற மந்திர’த்தை ஆலீஸுக்குச் சொல்கிறாள் சிவப்பு ராணி. நேற்றைய வேகம் இன்றைக்கு ஆமைநடை. இன்றைய வேகம் நாளைக்கு நத்தை ஊர்தல். இதுதான் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான சமன்பாடு.

ஒரு கட்டத்தில், ஓடுவதும் ஓடாமல் இருப்பதும் ஒன்றுபோல் ஆகிவிடுவதுதான் இதில் விசித்திரம்! இயற்பியலில், சீரான ஓய்வுநிலையில் இருந்தாலும் சரி, மாறாத வேகத்தில் மணிக்கு 100 மைல் வேகத்தில் ஓடினாலும் சரி அதற்குப் பெயர் நிலைமம்தான் (inertia). ஒரே வேகமல்ல, முடுக்கமே (acceleration) நம் நவீன உலகத்தில் மற்றவர்களை முந்துவதற்கான மந்திரம். முடுக்கத்தின் உச்சநிலை என்ன? முடக்கம்தான்!

இன்றைய தொழில்நுட்பம் தேடிக்கொண்டிருக்கும் தங்கப்புதையல், செயற்கை அதிநுண்ணறிவு (Artificial superintelligence). ஸ்டீவன் ஹாக்கிங் உள்ளிட்ட உலகின் பல்வேறு அறிவியலாளர்களும் சிந்தனையாளர்களும் செயற்கை அதிநுண்ணறிவின் அபாயத்தைப் பற்றிக் கூக்குரல் எழுப்பியிருக்கிறார்கள். செயற்கை அதிநுண்ணறிவு உருவாக்கப்பட்டுவிட்டால் அதன்பின் அதற்கு மனிதர்கள் தேவையில்லை. அது தன்னைத்தானே மேம்படுத்திக்கொள்ளும். அதனால் செய்ய முடியாதது ஏதுமில்லை என்பதால், மனிதர்கள் செயலற்று

நின்றுபோய்விட வேண்டியதுதான். பணிஓய்வு பெற்று வீட்டில் இருக்கும் அப்பாவை, வேலைக்குப் போகும் பிள்ளை ‘தண்டச்சோறு’ என்று ஏசும்போது அந்த அப்பாவுக்கு என்ன உணர்வு ஏற்படுமோ அப்படிப்பட்ட உணர்வுதான் ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் ஏற்படும். தொழில்நுட்பத்தின் உச்சபட்ச வளர்ச்சியால் மனித குலம் உறைந்துபோய் நிற்கப்போகும் இந்த நிலைக்குத் தொழில்நுட்ப ஒருமைநிலை (Technological Singularity) என்று பெயர்.

ஒரு உதாரணம். உலகத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை செயற்கை அதிநுண்ணறிவு எடுத்துக்கொண்டுவிட்டால் மனிதர்களுக்காக இல்லாமல், தனது நலனுக்காகவே பல்வேறு பொருள்களை உற்பத்தி செய்ய ஆரம்பிக்கும். அதற்கு ஏராளமான க்ளிப்புகள் தேவைப்படுகிறது என்றும் க்ளிப்புகள் செய்வதற்கான வேதிப்பொருள்கள் மனித உடலில் இருக்கின்றன என்றும் வைத்துக்கொள்வோம். தயங்காமல் மனிதர்களைக் கொன்று க்ளிப்புகள் செய்ய ஆரம்பிக்கும் என்று அச்சுறுத்துகிறார்கள் அறிவியலாளர்கள்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடந்தும் ஓடியும் வந்துகொண்டிருந்தது இன்னும் வேகம் பிடித்துக் கடந்த நூற்றாண்டில் பறக்க ஆரம்பித்தது. அன்று பறக்க ஆரம்பித்த வேகத்தைவிட இன்று பறந்துகொண்டிருக்கும் வேகம் பல மடங்கு அதிகம். தலைதெறிக்க இவ்வளவு வேகமாகச் செல்வதெல்லாம் எதிர்காலத்தில் நம் ஆன்மாவை செயற்கை அதிநுண்ணறிவிடம் அடமானம் வைப்பதற்குத்தானா?

லாவோ ட்சு நமக்கு மூன்று பொக்கிஷங்களைத் தருகிறார்: அன்பு, மிதம், உலகத்தை முந்தத் துணியாமை. இந்த மூன்றும் ஒன்றுதான். அன்பாக இருக்கும் ஒருவர் அபரிமிதத்துக்கல்ல, மிதத்துக்கே ஆசைப்படுவார். அபரிமிதம் என்பது நம் தேவைக்கு அதிகமானது. நம் தேவைக்கு அதிகமானது எதுவுமே இன்னொருவர் தேவையை அபகரித்ததாகத்தான் இருக்கும். மற்றவர் மீது அன்பு இருந்தால் நம் அபரிமிதம் நம் கண்களை உறுத்தும். மேலும், அபரிமிதம் எப்போதும் முன்னே முன்னே ஓடச் சொல்லும். எல்லோரையும் முந்தச் சொல்லும். முந்திச் சென்றால்தான் அள்ளிக்கொள்ள முடியும்; இறுதியில் சென்றால் கிடைப்பது ஏதுமில்லை என்பது அபரிமிதத்தின் மந்திரம். முந்திச் செல்லும்போது நம்முடன் வருபவர் மீது நாம் அன்பு காட்ட மாட்டோம், பிடித்துத் தள்ளிவிடவே பார்ப்போம். ஆகவே, இதற்கு நேர் எதிரானதுதான் லாவோ ட்சுவின் மூன்று பொக்கிஷங்களும்.

 மிலன் குந்தெரா ‘ஸ்லோனெஸ்’ என்ற நாவலை எழுதியிருக்கிறார். அதில் இப்படிச் சொல்கிறார்: “வேகம் என்பது தொழில்நுட்பப் புரட்சி மனிதனுக்கு அன்பளிப்பாக வழங்கிய ஒருவிதப் பரவசமே. ஓடுபவர் எப்போதுமே தன் உடலைக் குறித்த உணர்வில் இருக்கிறார். அதனால், அவர் தனது உடலில்தான் இருக்கிறார். ஆகவே, தனது கொப்புளங்கள், களைப்பு போன்றவற்றை எப்போதும் அவர் நினைத்துப் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஓடும்போது தனது உடல் எடை, வயது போன்றவற்றைப் பற்றி மற்ற எப்போதையும்விட அதிகமாக உணர்கிறார். இவை எல்லாமே, வேகம் என்ற திறனை ஒரு இயந்திரத்திடம் ஒப்படைக்கும்போது மாறிப்போகின்றன: அப்போதிலிருந்து அவருடைய உடல் என்பது அந்தச் செயல்பாட்டுக்கு வெளியில் இருக்கிறது. உணர முடியாத, உருவமில்லாத, அசல் வேகத்திடம், வேகத்தின் பரவசத்திடம் தன்னை அவர் ஒப்படைத்துக்கொள்கிறார்.”

 ஒரு இடத்தைச் சீக்கிரம் அடைய வேண்டும் என்பதைவிட வேகமாகச் செல்லும் பரவசத்துக்காகவே வேகமாகச் செல்பவர்களை நாம் சாலைகளில் தினமும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதைத்தான் மிலன் குந்தெரா ‘வேகத்திடம் தன்னை ஒப்படைத்தல்’ என்கிறார். அப்படி ஒப்படைத்தபின் வேகம்தான் நம் எஜமானனே தவிர அதற்கு நாம் எஜமானன் அல்ல.

 அதேபோல் குந்தெரா சொல்கிறார்: “நினைவு எவ்வளவு ஆழமானது என்பதற்கும் எந்த அளவுக்கு நாம் மெதுவாகச் செல்கிறோம் என்பதற்கும் நேரடித் தொடர்பு உள்ளது; எந்த அளவுக்குத் தீவிரமாக ஒன்றை மறக்கிறோம் என்பதற்கும் எவ்வளவு வேகமாக நாம் சென்றுகொண்டிருக்கிறோம் என்பதற்கும் இடையே நேரடித் தொடர்பு உள்ளது.”

வேகம் எனும்போது நமது தங்கநாற்கரச் சாலைகளும் பசுமைவழிச் சாலைகளும் நினைவுக்கு வருகின்றன; அதிகபட்ச வேகத்தை எட்டுவதற்காக அழிக்கப்படும் இயற்கைச் சூழலும் நினைவுக்கு வருகிறது.

லாரிகளில் கொண்டுசெல்லப்படும்போது சாலையில் கொட்டும் தானியங்களைக் கொத்தித் தின்றுகொண்டிருக்கும் காகங்கள், மைனாக்கள், தவிட்டுக்குருவிகள் வாகனங்களில் அடிபடுவதை நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன். அதைவிடக் கொடுமை வண்ணத்துப்பூச்சிகள்தான். பறவைகள் பிராணிகள் அடிபட்டால்கூட கொஞ்சம்உருக்குலையாமல் கிடக்கும். வண்ணத்துப்பூச்சிகள் அடிபட்டால் காற்றில் துப்பிய எச்சில்போல் கண்ணாடியில் ஒட்டிக்கொண்டு திரவமாய் வழியும். எவ்வளவுஅழகான வண்ணத்துப்பூச்சிகள், எவ்வளவு நிறங்கள்! கடைசியில் அருவருப்பான திரவமாகிவிடுகிறது. எல்லாவற்றுக்கும் காரணம் நம் வேகம்தான். மித வேகத்தில் நாம் சென்றால் பெருமளவில் இது போன்ற மரணங்களை (வண்ணத்துப்பூச்சியின் மரணமும் மரணம்தான்) மட்டுமல்ல நம்முடைய மரணத்தையும் நாம் தடுக்கலாம்.

அடிப்படையில் இதற்கெல்லாம் நம் மீது நாம் அன்பு கொள்ள வேண்டும்! ஆனால், மிலன் குந்தெரா சொல்வதைப் பார்த்தால் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒருவருக்குத் தன் மீது அன்பு செலுத்தக்கூட நேரம் இருக்காது என்றுதான் தோன்றுகிறது.

-ஆசை

அதிகாரம் 67

நான் பத்திரமாகப் பாதுகாத்துவைத்திருக்கிற

மூன்று பொக்கிஷங்கள் என்னிடம் இருக்கின்றன.

முதலாவது, அன்பு எனப்படுகிறது.

இரண்டாவது, மிதம் எனப்படுகிறது.

மூன்றாவது, உலகத்தை முந்திக்கொண்டு

செல்லத் துணியாமை எனப்படுகிறது.

அன்பாக இருப்பதால்

ஒருவன் துணிவோடு இருக்க முடியும்;

மிதமாக இருப்பதால்

ஒருவன் வளமையாக இருக்க முடியும்;

உலகத்தை முந்திக்கொள்ளத் துணியாததால்

ஒருவன் அதிகாரிகளின் தலைவனாக இருக்க முடியும்.

அன்புக்குப் பதிலாக

மனிதன் துணிச்சலை மட்டுமே பெற்றிருக்கிறான்;

மிதத்துக்குப் பதிலாக

மனிதன் மிகையை மட்டுமே பெற்றிருக்கிறான்;

பின்னால் இருப்பதற்குப் பதிலாக

மனிதன் முந்திக்கொண்டு செல்கிறான்.

இப்படிச் செய்வதெல்லாம்

மனிதனைச் சாவுக்கே அழைத்துச்செல்கின்றன.

ஏனென்றால்,

அன்பின் அடிப்படையில் போராடுபவன்

போரில் வெற்றி பெறுவான்;

அன்பின் அடிப்படையில்

தன்னைக் காத்துக்கொள்பவன்

பத்திரமாக இருப்பான்.

வானகம் அவனைக் காப்பாற்றும்;

வானகம் அவனை அன்புடன் பாதுகாக்கும்.

- சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு சீன ஞானி லாவோ ட்சு எழுதிய ‘தாவோ தே ஜிங்’ நூலிலிருந்து, தமிழில்: சி.மணி

(உண்மை அழைக்கும்...)

x