அபயகேந்திரம் - உறவுகளைத் தொலைத்தவர்களின் உறைவிடம்!


‘வீடு இல்லாதவர்களுக்கான தற்காலிக தங்குமிடம் அபயகேந்திரத்தைத் தேவைப்படு வோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்’ - நாகர்கோவிலில், திரும்பிய பக்கமெல்லாம் இப்படி விளம்பரங்கள் இப்போது பளபளக்கின்றன.

‘அபயகேந்திரம்’ - தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நடத்தப்படும் மத்திய அரசின் திட்டம். நாகர்கோவில் இந்துக்கல்லூரி அருகே அனாதைமடம் பகுதியில் அமைந்துள்ளது ஆதரவற்றோருக்கான இந்த உறைவிடம். இங்கு, ஆதரவற் றோருக்கு மருத்துவ வசதி அளித்து கட்டணமின்றி பராமரிக்கிறார்கள். இதன் கட்டுமானப் பணிக்காக மத்திய அரசு 25 லட்ச ரூபாய் ஒதுக்கியிருக்கிறது. ‘சேவாபாரதி தென் தமிழ்நாடு’ அமைப்பு இந்த அபயகேந்திரத்தை ஆட்சி செய்கிறது.

 ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி அறைகள், வெஸ்டர்ன், இந்தியன் வகை கழிப்பறைகள், வழுக்காத குளியலறைகள் என வயதானவர்களுக்கு ஏற்ற அனைத்து அம்சங்களுடன் பளிச்சிடுகிறது இந்த இல்லம். அதன் மேலாளர் பொன்குமார் நம்மிடம் அபயகேந்திரம் இல்லம் குறித்துப் பேசினார். “முப்பது வருசத்துக்கு முந்தியெல்லாம் வீட்டுக்கு ஏழெட்டுக் குழந்தைகள் இருந்தார்கள். அதனால், பெற்றோரை கவனித்துக்கொள்ள பிள்ளைகள் ஆர்வத்துடன் போட்டிபோடுவார்கள். ஆனால், இப்போது, வீட்டுக்கு ஒரு குழந்தைதான் இருக்கிறது. அந்த ஒற்றை குழந்தைக்கும் பாசத்தையும், பரிவையும் கற்றுத்தர ஆள் இல்லை. அதன் விளைவு வயதானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு விட்டனர். படித்தவர்கள் நிறைந்த குமரி மாவட்டத்திலும் இந்தப் பிரச்சினை அதிகளவில் உள்ளது. அப்படிக் கைவிடப்பட்ட ஜீவன்களைத்தான் நாங்கள் இங்கு அடைக்கலம் கொடுத்துப் பராமரிக்கிறோம்.

யாரையும், எடுத்ததுமே இங்கு அழைத்து வருவதில்லை. முதலில் அவர்களது உறவுகளோடு பேசி கவுன்சலிங் கொடுத்துச் சேர்த்துவைக்க முயற்சி செய்வோம். பேச்சுவார்த்தையில் சுமூக நிலை எட்டமுடியாமல் போனால்தான் இங்கு அழைத்து வருகிறோம். அண்மையில்கூட ஒரு குமாஸ்தாவின் தாயாரை அவரோடு சேர்த்து வைத்தோம். இந்த இல்லத்தில் இப்போது, பார்வையற்ற பெண்கள் இருவர் உள்பட 9 பேர் உள்ளனர். இந்த இல்லத்தை நிர்வகிக்க பிரதமர் நிதியிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கிறார்கள். அத்துடன் சேவையுள்ளம் கொண்டவர்களின் ஒத்துழைப்புடன் இந்த இல்லத்தை செம்மையாக நடத்துகிறோம்” என்றார்.

x