இது டிஜிட்டல் நாடோடிகளின் யுகம்!


உலகமயமாதலும் அதி நவீன வாழ்க்கையும் நம்மை இடமற்றவர்களாக, காலமற்றவர்களாகக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக்கொண்டுவருகின்றன. இன்னும் நூறு ஆண்டுகள் கழித்து சொந்த ஊர், பூர்வீகம், சொந்த வீடு என்பதற்கெல்லாம் அர்த்தமில்லாமல் போய்விடும் போல. வீவொர்க் (WeWork) நிறுவனமும் அதன்

துணை நிறுவனங்களும் இயங்கும் களம் இதுதான்.

வீவொர்க், அலுவலகங்களுக்கு இடத்தை வாடகைக்கு விடும் நிறுவனம். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நியூயார்க்கில் தொடங்கப்பட்ட நிறுவனம் இது. அவர்கள் வழங்கும் அலுவலகத்தில் எங்கு இடம் இருக்கிறதோ, அங்கே மடிக்கணினியை வைத்துக்கொண்டு நாம் உட்கார்ந்துவிடலாம். அல்லது இன்னும் கொஞ்சம் அதிகமான தொகையைக் கொடுத்தால், இன்னும் வசதியான அலுவலக மேசைப்பகுதியோ ஒட்டுமொத்த அலுவலகமோ கிடைக்கும். அதுமட்டுமல்ல, வீவொர்க் நிறுவனம் 20 நாடுகளில் இயங்கிவருவதால், உலகின் எந்தத் திசைக்கு வேண்டுமானாலும் பயணித்து ஏராளமான இடங்களில் தற்காலிகமாக நம் வணிக நிறுவனங்களை அமைத்துக்கொள்ளலாம்.

‘உழைப்பதற்கு ஓரிடம்’ என்பது வீவொர்க் அளிக்கும் வாய்ப்புகளுள் ஒரு பகுதிதான். நாம் வேலை பார்க்கும் இடத்தில் நாம் கேட்டவுடன் இலவச பியர் கிடைக்கும், தினசரி யோகா, உடற்பயிற்சி இன்னும் என்னவெல்லாமோ உண்டு. நம்மைப் போலவே நாடோடியாகத் திரியும் முக்கியமான நபர்களையும் அங்கே சந்திக்கலாம். இதனால் நமக்கு சில கேள்விகள் எழலாம்: வேலை என்பது என்ன? ஓய்வுநேரம் என்பது என்ன? இரண்டுக்கும் இடையிலான வேறுபாட்டுக்கெல்லாம் இனி அர்த்தம் ஏதும் இருக்கிறதா?

x