மணிக்கு 200 ரூபாய்.. அசத்தும் ஆட்டோ சிவதாணு!


ஆட்டோக்காரர்கள் பல ரகம். கேரளத்தில் இருபது ரூபாயை வைத்துக்கொண்டு நம்பி ஆட்டோவில் ஏறலாம். கர்நாடகம், ஆந்திரத்திலும் அப்படியே. முப்பது நாற்பது ரூபாய்க்கு வருவார்கள். வடக்கிலும் மோசமில்லை, லக்னோ, அலகாபாத், உத்தராகண்ட், குஜராத், டெல்லி இங்கெல்லாம் பெரும்பாலும் மீட்டர் கட்டணங்கள்தான். அநேகமாக நாட்டிலேயே அதிகக் கட்டணம் வாங்குபவர்கள் சென்னை ஆட்டோக்காரர்களாகத்தான் இருப்பார்கள். சென்னையைப் பார்த்து தமிழகத்தின் இதர ஊர்களிலும் ஆட்டோக் கட்டணங்கள் எகிறிவிட்டன. இவர்களுக்கு மத்தியில், ‘ஆட்டோவில் ஒரு மணி நேரம் பயணிக்க ரூ.200 மட்டுமே’ என்ற புதிய் சிஸ்டத்தை அறிமுகம் செய்திருக்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சிவதாணு!

நாகர்கோவில், நாகராஜாகோயில் ஆட்டோ நிறுத்தத்தில் ஆட்டோ நிறுத்தும் சிவதாணு சமூகசேவகரும்கூட. கையைக் காலை இடிக்காமல் நல்ல அகலமான இருக்கைகளுடன் ஜம்மென்று இருந்த அவரது ஆட்டோவில் ஏறி அமர்ந்தபடியே சிவதாணுவிடம் பேச்சுக் கொடுத்தோம். “மீட்டர் கட்டணத்தை கவருமென்டு அறிவிச்சப்பவே நம்ம ஆட்டோவுல மீட்டர் இருந்துச்சு. சக ஆட்டோக்காரங்க திட்டுவாங்க. காதுல வாங்காமத்தான் இருந்தேன். அதேசமயம் மத்தவங்க பொழப்புக்கு ஏன் பொல்லாப்புன்னு நினைச்சேன். மீட்டர் கட்டணத்தையும் தாண்டக் கூடாது; கைப்பிடித்தமும் வரக் கூடாதுனு சிந்திச்சதுதான் ஒரு மணி நேரத்துக்கு 200 ரூபாய் திட்டம். இதுல ஒரு மணிநேரம் தொடர்ச்சியா ஆட்டோவுல போனாலும் 200 ரூபாய்தான். நிறுத்தி நிறுத்திப் போனாலும் அதே காசுதான். காத்திருப்புக் கட்டணமெல்லாம் கிடையாது.

மணிக்கு சராசரியா 20 கிலோ மீட்டர் போனாலும், இது மீட்டர் கட்டணத்தைவிட குறைவுதான். ஒரே நிபந்தனை... இதுலேயே திரும்பவும் வருவதாக இருந்தால்தான் வண்டியை எடுப்பேன். இல்லைன்னா, கைக்காசு போயிடும். நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்கு போறதுக்கு மத்த ஆட்டோக்கள் குறைஞ்சது 400 ரூபாய் வாங்குவாங்க. ஆனா, நான் 40 நிமிசத்துல விட்டுருவேன். திரும்பி வரும் போது 40 நிமிசம். 250 ரூபாய்க்குள் போயிட்டு வந்துடலாம். சிலர், ‘என்னப்பா, இப்படி குறைச்சு வாங்குற...’ன்னு முப்பது, நாப்பது சேர்த்துக் கொடுப்பாங்க. வயதானவங்க, மாற்றுத்திறனாளிகளிடம் காசு வாங்க மாட்டேன்.

என் மனைவி இறந்து 13 வருசம் ஆச்சு. மூணு பிள்ளைங்க படிச்சு சுயமா சம்பாதிக்குறாங்க. அடிப்படையில் நான் வெல்டர். நாகர்கோவிலில் வெல்டிங் ஒர்க்‌ஷாப்பும் போட்டுருக்கேன். வயித்துப் பொழப்புக்கு அது போதும். ‘நேர்மையான ஆட்டோக்காரன்ப்பா’ன்னு நாலு பேரு பேசும்போது வர்ற சந்தோஷம் இருக்கே… அது போதும். இந்த ஓட்டம் ஏழைகளுக்கானது!” என்றவாறே ஆட்டோவை முடுக்குகிறார் சிவதாணு.

x