முடிவற்ற சாலை 7: உலகின் உயரமான உணவகம்!


உலகின் மிக உயரமான கட்டிடங்களில் ஒன்று சி.என். டவர். இது டொரன்டோவிலுள்ளது. இந்த டவரைக் காண்பதற்காக உலகம் முழுவதிலுமிருந்து சுமார் இருபது லட்சம் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இங்கு வருகை புரிகிறார்கள்.

கனடாவுக்குப் போயிருந்தபோது அந்த டவரிலுள்ள 360 என்ற சுழலும் உணவகத்துக்குச் சென்றிருந்தேன். ஆகாசத்தில் அமர்ந்து சாப்பிடுவது புதிய அனுபவமாக இருக்கும் என்றார் அழைத்துச்சென்ற நண்பர். உணவகத்தின் நுழைவுக்கட்டணம் ஆளுக்கு மூன்றாயிரம் ரூபாய். அதன் பிறகு நீங்கள் சாப்பிடும் உணவுக்கு ஏற்ப தொகை.

நாங்கள் மூன்று பேர் சென்றிருந்தோம். ரொட்டி, பழச்சாறு, பாஸ்தா, சாலட் எனச் சாப்பிட்டோம். பில் பதிமூன்றாயிரம் ரூபாய். அந்த உணவகம் 360 டிகிரி சுற்றிச் சுழலக்கூடியது. ஆகவே, நகரை சுற்றிப் பார்த்தபடியே சாப்பிடலாம். கண்ணாடியை ஒட்டிய இருக்கை கிடைப்பது கடினம் என்பதால், பதினைந்து நாட்களுக்கு முன்பாக நண்பர் இடம் ரிசர்வ் செய்திருந்தார். 150 மாடிகள் கொண்ட கட்டிடம் அது. கண்ணாடியால் உருவாக்கப்பட்ட லிஃப்ட் நம்மை மேலே அழைத்துப்போகிறது. உணவகத்தினுள் நுழைந்தால் மாயலோகம் ஒன்றுக்குள் நுழைந்து விட்டதைப் போல இருந்தது. இனிமையான இசை. உயர்ந்த ரக இருக்கைகள்.

இந்தியாவுக்கு டைனிங் டேபிள் அறிமுகமான காலத்தில் அவ்வளவு உயரத்தில் உட்கார்ந்துகொண்டு சாப்பிடுவது கூடாது எனப் பல குடும்பங்களில் தடுத்திருக்கிறார்கள். நான் இன்றைக்கும் தரையில் அமர்ந்து சாப்பிடவே விரும்புகிறேன். அதுவும் எல்லா உணவையும் எடுத்து வைத்துக்கொண்டு வட்டமாகச் சுற்றியமர்ந்து பேசிக்கொண்டு சாப்பிடுவது தனிச் சுகம்.

அந்தக் காலத்தில் வீட்டில் டைனிங் டேபிள் போட்டுக்கொள்வதைப் பெருமையாக நினைத்தார்கள். அப்படி டைனிங் டேபிளில் சாப்பிடுகிற வர்களை மேஜைக்கார குடும்பம் என்று அழைத்தார்கள். மயிலை சீனி வேங்கடசாமி சிறந்த தமிழ் ஆய்வாளர். அவர் ‘உணவுநூல்’ என்றொரு சிறிய அறிமுக நூலை எழுதியிருக்கிறார். தமிழ் டிஜிட்டல் நூலகம் என்ற இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. படித்துப் பாருங்கள். தமிழர் உணவின் வகைகளை, முக்கியத்துவத்தைச் சிறப்பாக எழுதியிருக்கிறார்.

உலகின் மிக உயரமான இடத்துக்குச் சாப்பிட வந்திருக்கிறோம். உங்களுக்குப் பிடித்தமான உணவைச் சொல்லுங்கள் என்றார் நண்பர். மெனு கார்டில் இருந்த பெயர்கள் விநோதமாக இருந்தன.

பெரிதும் இத்தாலிய உணவு வகைகள். நான் அவற்றை விரும்புகிறவனில்லை. ஆகவே, அவர்களையே உணவைத் தேர்வு செய்யச்

சொன்னேன். வாயில் நுழையாத உணவுப் பெயர்களைத் தேர்வு செய்தார்கள். உணவு வரும்வரை டொரன்டோ நகரின் இரவை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.

மனிதர்களின் சாதனை வியப்பூட்டக்கூடியது. இவ்வளவு உயரத்தில் ஒரு உணவகம் அமைத்து, அதையும் 360 டிகிரி சுழலும் விதமாக உருவாக்கி அங்கே அமர்ந்து சாப்பிடலாம் என்பது எவ்வளவு ரசனை யான கற்பனை. கண்ணாடித் தடுப்புக்கு வெளியே நகரம் ஒளிர்ந்து கொண்டிருந்தது. உணவு வந்தது. என்னால் எதையும் ஒரு வாய் சாப்பிட முடியவில்லை. அந்த ருசி எனக்கு ஏற்புடையதாகயில்லை. இட்லி, தோசை சாப்பிடுகிற ஆசாமிகளுக்கு இது பிடிக்காது என்றார் நண்பரின் மனைவி.

அவர் சொன்னது உண்மை. ஒன்றிரண்டு வருஷமில்லை. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழர்கள் இட்லி சாப்பிட்டுப் பழகியிருக்கிறார்கள். பிறகு அதிலிருந்து எப்படி விடுபட முடியும்? எதற்காக விடுபட வேண்டும்?

நான் மேஜையில் வைக்கப்பட்ட உணவில் இருந்த பச்சைக் காய்கறிகளைக் கொறித்தேன். நண்பர் உற்சாகமாகச் சாப்பிட்டார்.

எப்படி இருக்கிறது இந்த அனுபவம் என்று கேட்டார். உயர மான இடத்தில் உயர்வான உணவு கிடைக்கவில்லை என்றேன்.

அவர் சிரித்தார். அவரிடம் சொன்னேன், நல்ல உணவை ருசிக்கச் சமூகத்தின் மேல்தட்டுக்குப் போகக் கூடாது. கீழே கீழே என அடித்தட்டை நோக்கிப் போக வேண்டும். நான் சாப்பிட்ட மிகச் சிறந்த உணவு, எளிய குடிசை வீட்டில் தயாரிக்கப்பட்டதே. புதிய உணவின் ருசியை அனுபவிக்க வேண்டாமா எனக் கேட்டார் நண்பர். அனுபவிக்கலாம். ஆனால், வயிறு அவற்றை ஏற்றுக்கொள்வதில்லை. அது முரண்டுபிடிக்கக் கூடியது என்றேன்.

பின் எப்படி இவ்வளவு ஊர்கள் பயணம் செய்கிறீர்கள் எனக் கேட்டார் நண்பர். பழங்களும் ரொட்டியும் காபியும் ஸான்ட்விச்சும் போதுமானவை. சாப்பாட்டுக்கு ஏங்கினால் பயணிக்க முடியாது என்றேன்.

அவர்கள் இத்தாலிய உணவு வகைகளை ரசித்துச் சாப்பிட்டார்கள். ஒரு இத்தாலிக்காரனுக்கு நம் அடை அவியலும் பொங்கல் வடையும் பிடிக்குமா என்ன. அவரவர் ருசி அவரவருக்கு.

இந்தியாவுக்குள் வடகிழக்கு மாநிலங்களைத் தவிர வேறு இடங்களில் உணவு பிடித்தமானதாகவே இருக்கிறது. அதுவும் வட இந்தியர்களைப் போல ரொட்டிதயாரிக்க முடியாது. உருளைக்கிழங்கு அவர்களின் விருப்ப உணவு. பைபிளில் உருளைக்கிழங்கு என்ற சொல்லே கிடையாதாம். ஆகவே, அதைப் பலகாலம் விலக்கி வைத் திருந்திருக்கிறார்கள். கைதிகளுக்கும் குதிரை களுக்கும் உணவாகத் தந்திருக்கிறார்கள். இன்று இந்தியாவின் முக்கிய உணவுப்பொருள் உருளைக்கிழங்கு.

ஒருமுறை ராஜஸ்தானில் கும்பல்கர்க் கோட்டையைக் காணப் பயணம் செய்து கொண்டிருந்தபோது மதிய உணவுக்குச் சின்னஞ்சிறிய தாபா ஒன்றில் காரை நிறுத்திச் சாப்பிட்டோம். உணவு தயாரித்துக் கொண்டுவர முக்கால் மணி நேரம் ஆனது. ஆனால், அற்புதம். அவ்வளவு ருசியான பனீரை என் வாழ்நாளில் சாப்பிட்டதில்லை. அது போலவே சுவையான லஸ்ஸி. சாப்பாட்டை முடித்தவுடன் அப்படியே படுத்துக் கிடக்கலாம் போன்றே இருந்தது.

நாலு மணி வரை அந்தத் தாபாவில் இருந்தோம். நல்ல உணவு உடலுக்கும் மனதுக்கும் சந்தோஷம் அளிக்கக் கூடியது.

குவாலியரின் ஜெய்விலாஸ் அரண்மணை யில் உணவு மேஜையில் வெள்ளி ரயில் ஒன்றைக் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். இந்த அரண்மனை மிகப் பெரியது. அங்கே 300-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. பார்வையாளர்கள் அவற்றுள் சிலவற்றைக் காண மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

அரண்மனையிலுள்ள விருந்து மேஜையில் ஒரு குட்டி ரயில் தண்டவாளம் அமைக்கப்பட் டுள்ளது. அதிலொரு குட்டி ரயில் காணப் படுகிறது. வெள்ளியால் ஆன இந்தச் சிறிய ரயிலில் மொத்தம் 7 பெட்டிகள். அதில் SCINDIA என மன்னர் பெயர் எழுதப்பட்டிருக்கிறது.

உணவு மேஜையில் அமர்ந்திருக்கும் விருந்தினர்கள் ரயிலில் இருக்கும் மதுபானங்களையோ ஐஸ்கட்டிகளையோ உணவு வகைகளையோ எடுக்க விரும்பினால், ரயில் அவர்கள் முன் நிற்கும்போது எடுத்துக்கொள்ளலாம். மொத்த ரயிலும் வெள்ளியில் உருவாக்கப்பட்டிருக்கிறது. உணவு மேஜையில் ரயில் விடுகிறார்கள் என்றால், எவ்வளவு பெரியதாக இருக்கும். எத்தனை விதமான உணவு வகைகள் தயாரிக்கப்பட்டிருக்கும் என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

சி.என். டவரில் சாப்பிடுவது என்பது மகிழ்ச்சியான தருணம் அவ்வளவே. அந்த டவரில் ஒரு இடத்துக்கு அழைத்துச்சென்று கதவைத் திறந்து காட்டுகிறார்கள். காற்று ஊ ஊவெனப் பேய்வேகத்தில் அடித்து நம்மை இழுப்பது போன்றிருக்கிறது. கண்ணாடித் தடுப்புக் காரணமாக உணவகத்தினுள் அதை உணரவே முடியவில்லை.

நண்பரின் வீட்டுக்கு காரில் திரும்பும்போது உங்கள் அனுபவத்தில் எந்த உணவு மிகக் கொடுமையானது எனக் கேட்டார் நண்பர்.

இந்திய ரயில்களில் தரப்படும் உணவு. அதை ஒரு மனிதன் ஒரு மாத காலம் சாப்பிட்டுவிட்டால், பிறகு அவனால் கல் மண் எதையும் ருசித்துச் சாப்பிட முடியும். இத்தனை ஆயிரம் பேர் போய்வருகிற ரயிலில் ஒருமுறைகூட நல்ல உணவு கிடைத்ததேயில்லை. நான்கு ரயில்வே மண்டலங்களிலும் இதே கொடுமைதான். முன்பு ரயில்நிலைய கேன்டீன்களில் உணவு நன்றாக இருக்கும். சமீபமாக அதுவும் மிகவும் மோசமாகிவிட்டது என்றேன்.

இதை ஏன் சகித்துக்கொண்டு இருக்கிறீர்கள் எனக் கேட்டார் நண்பர். வீட்டுச் சாப்பாடு எவ்வளவு நன்றாக இருக்கிறது என்பதைப் புரிய வைப்பதற்குத்தான் ரயில்வே முயல்கிறது. நல்லவேளை ஒரு நாள், இரண்டு நாளுக்கு மேல் யாரும் ரயிலில் பயணிப்பதில்லை என்றேன்.

ஐரோப்பாவிலுள்ள ரயில்களில் பயணம் செய்துபாருங்கள், மிகவும் சுவையான உணவு கிடைக்கும் என்றார் நண்பர். பயணத்தின்போது பலரும் சந்திக்கும் பிரச்சினை உணவே. நல்ல உணவு தேடி அலைந்து ஏமாற்றமாகி இனி பயணமே வேண்டாம் என வீட்டோடு முடங்கி விடுகிறார்கள். தரமற்ற உணவகங்கள் பெருகிவிட்டன. உணவின் பெயரால் எதையும் விற்றுக் காசாக்கிவிடுகிறார்கள். குடும்பத்துடன் பயணம் செய்கிறவர்கள் இதனால்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதுவும் கோடை விடுமுறை நாட்களில் ஊட்டி கொடைக்கானல் போன்ற ஊர்களுக்குப் போவதாக இருந்தால், நீங்கள் விரும்பி ஏமாறப்போகிறீர்கள் என்பதே உண்மை.

பயணம் என்பது சாப்பிடுவதற்காக மட்டுமே மேற்கொள்ளப்படுகின்ற சஞ்சாரமில்லை. அதே நேரம் உங்களுக்கு விதவிதமான சுவையும் ருசியும் பிடிக்கும் என்றால், பயணத்தில் நிறைய புதுவகை உணவுகளை ருசிக்கலாம். பறவையைப் போலத் தன் பசிக்கு மட்டும் உணவு தேடுங்கள். நிச்சயம் நிறைய தூரம் பறந்து போகலாம்.

(பயணிக்கலாம்...)

-எஸ்.ராமகிருஷ்ணன்

x