தாவோ: பாதை புதிது - 17


ஜி.நாகராஜனின் குட்டிக் கதை

மடத்துக்கு முன்னால் ஒரே கூட்டம். ஊர் மக்கள் அனைவரும் திரண்டு வந்திருந்தனர். அத்தனை பேர் முகத்திலும் வருத்தம் தோய்ந்திருந்தது. குசுகுசு என்று மட்டும் பேசிக்கொண்டனர்.

‘சாமியார் சமாதியாகிவிட்டார். ‘ ‘இன்று காலை தியானத்தில் உட்கார்ந்திருந்தவர்தானாம், அப்படியே சமாதியாகிவிட்டார் ‘ என்றெல்லாம் பேசிக்கொண்டனர்.

ஊர்ச் சிறுவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. கூட்டத்தின் நடுவே குறுக்கும் நெடுக்குமாகச் சென்றுகொண்டிருந்தனர். என்னவென்று புரிந்துகொள்ளாமலேயே அவர்களும் ‘சாமியார் சமாதியாகிவிட்டார்’ என்ற வார்த்தை

களைச் சொல்லிக்கொண்டனர். இறுதியில் மடத்துக்காரர்கள் சாமியாரை வெளியே கொண்டுவந்தனர். சாமியார் வெளியே தூக்கிக்கொண்டுவரப்படுவதையே உற்று நோக்கிக்கொண்டிருந்த ஒரு சிறுவன் திடீரென்று, ‘டேய், சாமியார் செத்துப்போயிட்டாரு’ என்று கத்திக்கொண்டே கூட்டத்தை விட்டு ஓடிவந்தான். உடனே அத்தனை சிறுவர்களும், ‘மடத்துச் சாமியாரு செத்துப்போயிட்டாரு’ என்று அழுத்தம் திருத்தமாகக் கத்திக்கொண்டு ஓடினர். பெரியவர்கள் சிறுவர்களைக் கூட்டத்தை விட்டு அதட்டி மிரட்டி ஓட்டினர்.

அவ்வளவுதான் கதை.

நாம் பெரியவர்கள். எப்போதுமே அடுத்தவர்களின் பார்வையை, அடுத்தவர்கள் உருவாக்கிவைத்த சட்டதிட்டத்தைக் கேள்விக்கே உட்படுத்தாமல் அப்படியே உள்வாங்கிக்கொண்டு ஒப்பிப்போம். நமது அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதற்கு இந்த ஒப்பித்தல் அவ்வளவு அவசியமாக இருக்கிறது. குழந்தைகளோ இந்த உலகத்துக்கு இன்னும் அவ்வளவு பழக்கப்படாதவர்கள். மற்றவர்களின் பார்வைகளும் கருத்துகளும் குழந்தைகளின் கண்களை இன்னும் மூடவில்லை. ஆகவே, உண்மையை எந்தப் போர்வையும் இன்றி குழந்தைகள் அணுகுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை ‘சாமியார் செத்துவிட்டார்’.

தாவோயிஸத்துக்கும் பெரும்பாலான மதங்கள், கோட்பாடுகளுக்கும் இடையிலான வேறுபாடு இதுதான். நம்மைக் குழந்தைப் பார்வையிலேயே அப்பட்டமான உண்மையைப் பார்க்கச் சொல்கிறது. தாவோயிஸத்தையும் நம் மீது போர்த்திக்கொள்ளக் கூடாது என்பது ரொம்பவும் முக்கியம். நமக்கான தாவோயிஸத்தை நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்க்கையிலிருந்துதான் உருவாக்கிக்கொள்ள வேண்டும். இந்தச் சிந்தனையின் சுவடுகளை ஜென் பவுத்தத்திலும் பார்க்கலாம். ‘புத்தரை சாலையில் பார்த்தால் கொன்றுவிடு’ என்பது மிகவும் பிரபலமான கூற்று. வெளியில் தென்படும் புத்தர் நமக்கு உள்ளே இருக்கும் புத்தரை மறைத்துவிடுவார். நாம் ஒவ்வொருவரும் நமக்குள்ளே உள்ள புத்தரைத்தான் வெளிப்படச் செய்ய வேண்டுமே தவிர, வெளியில் உள்ள புத்தரை நமக்குள் இறக்கிக்கொள்ளக் கூடாது.

‘சமாதியான’ சாமியாரின் இடத்தில் இன்று நமக்கு அரசியல் கோட்பாடுகள், மதங்கள் இருக்கின்றன. ஒருவர் காந்தியவாதி என்றால் அவர் காந்தியத்தின் பார்வையிலேயே இந்த உலகையும் சுற்றி நிகழும் நிகழ்வுகளையும் அணுகுவார். பெரியாரியவாதியாக இருந்தால் இந்த உலகத்தைப் பெரியாரை வைத்துத்தான் அளப்பார். இந்து, இஸ்லாம், கிறித்தவம் என்று எந்த மதத்தைச் சேர்ந்த அடிப்படைவாதியாக இருந்தாலும், எல்லாமே தங்கள் மதத்தில் இருக்கிறது என்று விடாப்பிடியாக இருப்பார்கள். அடுத்தவர்கள் முன்வைக்கும் உண்மை அவர்களின் காதுக்குள் நுழையாது.

கோட்பாடுகள், மதங்கள் எல்லாவற்றையும் துணைக்கு வைத்துக்கொள்வது தவறில்லை. அவற்றைநம் கண்ணுக்குக் கீழே வரைக்கும் வைத்துக்கொள்ளலாம். கண்ணுக்கு முன்பாக அல்ல. எதுவுமே நம் பார்வையை மறைத்துவிடக் கூடாது, இப்போது நாம் படிக்கும் தாவோயிஸம் உட்பட.

இதனால்தான் சட்டதிட்டங்களையும் கட்டுப்பாடுகளையும் தாவோயிஸம் எதிர்க்கிறது. நேர்மை, நியாயம், அறம், ஒழுங்கு, கடமை, பாசம் என்று நல்ல விஷயங்களாக நமக்குள் பதிந்துபோனவற்றையெல்லாம் பார்த்து தாவோயிஸம் பரிகசிக்கிறது. கட்டுப்பாடுகளும் சட்டதிட்டங்களும் சமூகத்தின் ஒழுங்குக்காகக் கொண்டுவரப்படுகின்றன என்று நம்பப்படும் நிலையில் அந்த ஒழுங்கையே தாவோயிஸம் கேள்வி கேட்கிறது.

சீன ஞானி கன்ஃபூஸியஸ் நேர்மை, நியாயம், அறம், ஒழுங்கு, கடமை, பாசம் என்றெல்லாம் பேசிய காலகட்டத்தில் தாவோயிஸம் ஏன் இவற்றையெல்லாம் எதிர்த்தது என்றும் ஒழுங்கின்மையை ஏன் அது ஆராதிக்கிறது என்பதையும் வரலாற்று ரீதியாகப் பார்த்தால் நமக்குப் புரியும். சீனாவிலும் சரி, உலக வரலாற்று நெடுகிலும் ஏனைய நாடுகளிலும் சரி மேற்குறிப்பிட்ட ‘நல்ல’ விஷயங்கள் ‘அரசுமைய’ நோக்கில் பயன்படுத்தப்படுபவை. வலுவான அரசு, நம் காலத்து மொழியில் ‘வல்லரசு’, உருவாக வேண்டுமென்றால் நியாயம், அறம் போன்ற ‘நல்லதாக’ கருதப்படும் விஷயங்களைக் காட்டி, கடுமையான கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட வேண்டும். இன்றைய தொலைக்காட்சி விளம்பரங்களில் ‘அம்மாவின் அன்பு’ எந்த அளவுக்குப் பயன்படுத்தப்படுகிறது என்பதை அதனுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

‘அறம்’ என்ற பெரிய வார்த்தையைச் சொல்லிச் சொல்லியே போர்கள், அத்துமீறல்களைக் காலம்காலமாக அதிகாரவர்க்கம் எளிய மக்கள்மீது நிகழ்த்திவருகிறது. ஒரு சொல்லை இரண்டு நாட்கள் தொடர்ந்து கேட்டால் நமக்குப் புளித்துப்போய்விடுகிறது. ஆனால், பல்லாயிரம் ஆண்டுகளாக ‘அறம்’ என்ற சொல்லை வெவ்வேறு மொழிகளில் நாம் கேட்டுக்கொண்டிருக்கிறோம். கிளிப்பிள்ளை சொல்வதுபோல் நாமும் நம் செயல்களுக்கு அர்த்தம் கொடுக்கவும், நம் இலக்கியங்களுக்கு மேன்மை கூட்டவும் அறத்தைச் சேர்த்துக்கொள்கிறோம்.

மனிதர்கள் தங்கள் நலனுக்காக உருவாக்கிய அறத்துக்கும் இயற்கைக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. பழங்குடியினருடைய வாழ்க்கையையும் அதிநவீன மனிதர்களான நம் வாழ்க்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தால், நம்முடைய அறம் எப்படிப்பட்டது என்பது நமக்குப் புரியும். அதனால்தான் தாவோ அறத்துக்குப் பதிலாக ‘இயற்கையின் போக்கு’ என்ற சிந்தனையை முன்வைக்கிறது. இயற்கையின் போக்கு என்பதன் தொடர்ச்சியை நம் உணர்வுகள், உறவுகள், அரசியல் என்று எல்லாவற்றிலும் காண முடியும் என்கிறது தாவோ. போக்கு என்றால் போய்க்கொண்டிருப்பது. அதில் நாம் அதிகம் செய்ய வேண்டியது ஏதும் இல்லை. சிறுவர்கள் சைக்கிள் டயரை ஓட்டி விளையாடுவதைப் பார்த்திருப்போம் அல்லவா! ஒரு சிறிய குச்சியை டயரின் பக்கவாட்டில் மெலிதாக வைத்து அது ஓடும் திசையை சற்று மாற்றுவார்கள். அதுபோன்றதொரு அணுகுமுறையையே தாவோயிஸம் முன்வைக்கிறது.

தாவோயிஸம் முன்வைக்கும் கருத்துகளோடு ஒப்பிட்டால், இன்றைய உலக ஆட்சியாளர்களின் முக்கியமான பிரச்சினையே அவர்கள் அதீதமாகச் செயல்படுவதுதான் என்று தோன்றுகிறது. அறம், கடமை என்றெல்லாம் வலியுறுத்துகிறார்கள். அவற்றைச் செய்துமுடிக்க எண்ணற்ற கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். விளைவு, கட்டுப்படுத்த முடியாத அளவுக்குப் பிரச்சினைகள் வெடிக்கின்றன. இப்படி, பெரிய மக்கள்தொகையை வைத்துக்கொண்டு, பெரிய பெரிய திட்டங்களை முன்வைத்துக்கொண்டு, பெரிய பெரிய செயல்களில் ஈடுபட்டால் தாவோயிஸத்தை மட்டுமல்ல; எந்த இஸத்தையும் செயல்படுத்தமுடியாது.

தாவோயிஸம் கற்பனை செய்யும் ஆட்சியாளர் மிகக் குறைவாகவே செயல்படுவார். சிறிய அளவிலான மக்களையே ஆட்சிசெய்வார். மக்கள் தங்களைத் தாங்களே ஆட்சிசெய்துகொள்ள உதவுபவராகவே அவர் இருப்பார். அந்த மக்களும் சிறிய வாழ்க்கையை வாழ்பவர்களாக, சிறுசிறு சந்தோஷங்களையும், சிறுசிறு பிரச்சினைகளையும் எதிர்கொள்பவர்களாக இருப்பார்கள்.

‘கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது; ஆனால்,இன்றைய வாழ்க்கையில் இதெல்லாம் சாத்தியமா?’ என்ற கேள்வி இயல்பானதே. ஆனால், இன்று இந்த

பூமியையும், அதன் மூலம் நம்மையும் காப்பாற்றிக்

கொள்ள வேண்டுமென்றால், சின்னஞ்சிறு வாழ்க்கை

யை நோக்கி நாம் சென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்! குறைந்தபட்சம் நம் வேகத்தைக் கொஞ்சம் மட்டுப்படுத்தவாவது செய்யலாம்தானே!

(உண்மை அழைக்கும்...)

-ஆசை

அதிகாரம் 57

நேர்மையால் நாட்டை ஆண்டாலும் சரி,

தந்திரத்தால் போர்களை நடத்தினாலும் சரி,

எந்தக் காரியத்திலும் தலையிடாமல்

ஒருவன் நாட்டை ஆள வேண்டும்.

எந்தக் காரியத்திலும் தலையிடாமல்

ஒருவன் நாட்டை ஆள முடியும்.

அப்படி இல்லாவிட்டால்,

அவன் நாட்டை ஒருபோதும் ஆள முடியாது.

நாட்டில் கட்டுப்பாடும் தடையும் அதிகரித்தால்

அந்த அளவுக்கு ஏழ்மை அதிகரிக்கும்;

மக்களிடம் கூரிய ஆயுதங்கள் அதிகரித்தால்

அந்த அளவு குழப்பங்கள் அதிகரிக்கும்;

மக்களிடம் சட்டதிட்டங்கள் அதிகரித்தால்

அந்த அளவு திருட்டும் கொள்ளையும் அதிகரிக்கும்.

எனவே, ஞானி இவ்வாறு சொல்கிறான்:

நான் செயல்படாமையைக் கடைப்பிடித்தால்

மக்கள் தாங்களாகவே வளர்ச்சி அடைகிறார்கள்;

நான் அமைதியை நேசித்தால்

மக்கள் தாங்களாக நியாயமாக நடக்கிறார்கள்.

நான் எதற்கும் அலட்டிக்கொள்ளாவிட்டால்

மக்கள் தாங்களாகச் செல்வந்தராக ஆகிறார்கள்;

நான் ஆசையிலிருந்து விடுபட்டால்

மக்கள் தாங்களாக எளிமையாக இருக்கிறார்கள்.

- சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு சீன ஞானி லாவோ ட்சு எழுதிய ‘தாவோ தே ஜிங்’ நூலிலிருந்து, தமிழில்: சி.மணி

x