இவ்வளவு படங்களை பூமி தாங்குமா?


அறிவு வளர்க்க, அண்டம் அளக்க..!

ஆசை
asaithambi.d@kamadenu.in

என்னுடைய பழைய டிஜிட்டல் கேமராவில் நான் எடுத்த புகைப்படங்களையும் கேமரா கைபேசி வாங்கிய பிறகு நான் எடுத்த புகைப்படங்களையும் சில நாட்களுக்கு முன்பு தேடித் தொகுத்தேன். கிட்டத்தட்ட எட்டு ஆண்டு காலப் புகைப்படங்கள் சிதறியும் அழிந்தும்போய்விடக் கூடாது என்பதற்காக அந்த முயற்சியில் ஈடுபட்டிருந்தேன். அப்போது ஒரே கணினியின் பல்வேறு கோப்புகளில் ஒரே படத்தின் நகல்கள் சேமிக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்தேன். நகல்களை அழிப்பதன் மூலம் கணினியில் இடத்தைச் சேமிக்கலாம் என்பதற்காக எல்லாப் புகைப்படங்களையும் ஒரே இடத்தில் வந்து கொட்டினேன். அப்படிக் கொட்டும்போது ஒரே படங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருந்தால், அவற்றைச் சேர்த்துக்கொள்ளலாமா இல்லை விட்டுவிடலாமா என்று கணினி கேட்கும் அல்லவா? அதன் மூலம் நகல்களைக் கண்டுபிடித்துக் களையெடுத்தேன். கணினியில் மட்டுமல்லாமல் ஹார்ட் டிஸ்க்கிலும் அதே படங்கள் பல முறை பல்வேறு கோப்புகளில் இருப்பதைக் கண்டறிந்தேன். எல்லாவற்றையும் ஒரே இடத்தில் கொட்டிக் களையெடுத்து முடித்தபின் புகைப்படங்களின் எண்ணிக்கையைப் பார்த்து மலைத்துப் போய்விட்டேன். எட்டு ஆண்டுகளில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகைப்படங்கள். அதாவது சராசரியாக ஒரு நாளைக்கு 3 படங்கள். என்னைப் பொறுத்தவரை அதிகமாக இருக்கலாம். ஆனால், உலக சராசரி யைப் பொறுத்தவரை என்னுடைய தனிப்பட்ட எண்ணிக்கை மிகவும் குறைவே.

கேமரா கைபேசியை வைத்திருக்கும் ஒரு நபர் சராசரியாக ஒரு நாளைக்கு 10 படங்கள் எடுப்பதாக ஒரு தரவு கூறுகிறது. அப்படியென்றால் ஒரு ஆண்டுக்கு 3,650 படங்கள். இன்றைய தேதியில் உலக மக்கள்தொகை சுமார் 760 கோடி; அதில் சரிபாதி மக்களிடமாவது கேமரா கைபேசி இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. ஆக, 3,650-ஐ 380 கோடியால் பெருக்கினால் 13 லட்சத்து 87 ஆயிரம் கோடி (13,87,000,00,00,000). ஒரு படம் ஏறத்தாழ ஒரு எம்.பி. அளவில் இருக்கிறது என்று வைத்துக்கொண் டால், ஒரு ஆண்டுக்கு மொத்தம் 13 லட்சத்து 87 ஆயிரம் கோடி எம்.பி. அளவில் படங்கள் எடுக்கப்படுகின்றன.

x