மூலிகை மகரந்தம்!
‘இந்தப் பூமிக்கு,
இருட்டு முதல்ல வந்துச்சா..?
வெளிச்சம் முதல்ல வந்துச்சா..?’
பூமி தன்னைத்தானே சுத்துதுன்னு தெரியாத காலத்துல மனுசனுக்குத் தோணுன முதல் தத்துவக் கேள்வி இதுதான்! இதுக்குப் பதில் வேணுமே?
‘இருட்டுல பிறந்தவனுக்கு இருட்டுதான் முதல் உதயம்… வெளிச்சத்துல பிறந்தவனுக்கு வெளிச்சம்தான் முதல் உதயம்’னு தத்துவ விளக்கம் சொன்னாங்க. இந்தப் பூமியில பிறந்த கிரகஸ்தனுக்கு இப்படித்தான் ‘உதயாதி நாழிகை’னு கணிதம் போட்டு ஜாதகம் கணிச்சாங்க.
குரங்கணி சித்தனோட விளக்கம் என்னன்னா… இருட்டுதான் நிரந்தரம்! சூரியனோட வீரியம் குறைஞ்சு அடங்குற காலம் வரும். அப்போ இந்தப் பூமிக்கும் இருட்டுதான் நிரந்தரம்! அண்டகோடி சராசரங்களும் இருட்டாத்தான் இருக்கும்.
சூரியனும், சூரிய ஒளியைப் பிரதிபலிக்காத சந்திரனும் இல்லாத, நிறைஞ்ச அமாவாசை இருட்டுக்கு எப்பவுமே ஒரு சிறப்பு இருக்கு. பூவுல தேன் சுரக்கும். மகரந்தம் மந்தாரமா நிற்கும். கடல் தண்ணிக்கு விசை மாறும். மனுசனுக்குப் புத்தி பேதலிக்கும் கள்ள மனம் துள்ளும். சிந்தனை சிறக்கும். விந்து வீரியமாகும்.
குரங்கணி மலையில பளபளனு விடியற நேரம். சித்தன் ராத்திரி பூரா கண்ணு முழிச்சு, மூலிகைகளைப் பொடியாக்கித் துணியில அள்ளிச் சுருட்டி, அரைஞாண் கயித்துல கட்டின அந்த மகரந்தப் பொடி, பத்திரமா இருக்கானு ஒரு தடவை இடுப்பைத் தடவிப் பார்த்துக்கிட்டான். குடிசைக்கு வெளியே வந்து எட்டிப் பார்த்தான். முதுவாக்குடி சனங்க சாரைசாரையாக் காட்டு வேலைக்குப் போய்க்கிட்டு இருந்தாங்க.
சித்தன் நீராகாரத்தைக் குடிச்சிட்டு, பொம்மியோட குடிசைக்குப் போனான். பொம்மியும் கலிங்காவும் விடியறதுக்குள்ள குளிச்சுத் தயாரா இருந்தாங்க. தம்மாகிட்ட தீப்பந்தமும் வில்லும் தயாரா இருந்துச்சு.
சித்தன் வாஞ்சையா பொம்மியோட தலைமேல கையை வெச்சு, “பொம்மி… இப்போ பகல் முடிஞ்சு அமாவாசை ஆரம்பம் ஆகும். கடந்த முப்பது நாள் சந்திராயணத்துல உனக்காக மூலிகை மகரந்தம் தயாரிச்சு பத்திரமா வச்சுருக்கேன். இந்த அமாவாசை ராத்திரியில, இந்த மகரந்தத்தைச் சுத்தமான ஊத்துத் தண்ணியில கரைச்சுக் குடிச்சுட்டு, கன்னியிருட்டுல கலிங்காவோட புணர்ந்தாகணும். அப்படி உபயோகப்படுத்தலைன்னா இதோட வீரியம் இழந்து, பிரயோசனப்படாமலேயே போயிறும். அப்புறம் காலநேரம் கிடைக்காது. நீங்க ரெண்டுபேரும் எங்கயும் பிரிஞ்சு போக வேணாம, என் கூடவே இருங்க. நான் பாண்டியரோட குடிசைக்குப் போய்ப் பார்த்துட்டு வர்றேன்”னு சொல்லிட்டு பாண்டியன் தங்கியிருந்த குடிசைக்குப் போனான்.
குடிசைக்கு வெளியே நீராகாரக் கலயத்தோட ஒரு சேவுகன் காத்துக்கிட்டு இருந்தான். நடுக்குடிசையில பாண்டியன் சம்மணங்கால் போட்டு உட்கார்ந்திருந்தான். ராத்திரி முச்சூடும் தூங்காததால கண்ணு பூத்துப் போய் இருந்துச்சு.
பக்கத்தில போன சித்தன், “பாண்டியரே, கவலைப்பட வேணாம். நாயக்கர் படை வந்தால் நான் சமாதானம் பேசுறேன். உங்களுக்குக் காலம் கூடிவந்துருச்சு!”னு குடிசைக்கு மேல பார்த்தான். ஒரு பெரிய பல்லி வாயில, ஈசல் சிக்கித் துடிச்சிக்கிட்டு இருந்தது.
சித்தனை நிமிர்ந்து பார்த்த பாண்டியன், “இல்ல சித்தா… கண்ணை மூடினாலே என்னைச் சுத்தி ஆயிரம் எருமை மாடுகளும், அதுமேல ஆயிரம் எமதர்மன்களும் பாசக்கயிறை வீசிக்கிட்டு உட்கார்ந்திருக்கிற மாதிரி காட்சி தெரியுது! ரொம்ப இம்சையா இருக்கு. உங்க முதுவர் இனத்துக்கு நாங்க செஞ்ச துரோகமோ என்னவோ…”- ஏதோ சொல்ல வந்த பாண்டியன், ரெண்டு கையையும் தூக்கி, குடிசைக்கு மேல பார்த்துப் பதற்றமானான். இதை ஓரக்கண்ணால் பார்த்தான் சித்தன்.
“சித்தா… மேல பார்த்தாயா? பல்லி வாயில ஈசல்… சகுனம் சரியில்லையே! என்ன நடக்கும் சித்தா?”
“என்ன நடக்கும்… இயற்கை தன் சக்தியக் காட்டுது. பல்லியோட வயித்துல இருக்குற கருமுட்டைக்குத் தீனி வேணும். ஈசல் மட்டும் பல்லி வாய்க்குள்ள போகும். ஈசலோட றெக்கை மட்டும் கீழே உதிரும். ஈசல் பிறக்கும்போது றெக்கைகளோட பிறக்கல, இல்லையா? உதிர்ந்த றெக்கை எறும்புக் குஞ்சுகளுக்கு ஆகாரமா இருக்கும்… இது விதி!
பிறக்கும்போது கொண்டுவந்ததில்லை மண்மேல்
இறக்கும்போது கொண்டுபோவதில்லை
பொன்னை நினைத்து வெகுவாகத் தேடுவர் பூவையன்னாள்
தன்னை நினைத்து வெகுவாய் உருகுவர்!
சரி… இந்த நீராகாரத்தைக் குடிங்க பாண்டியரே! நீங்களும் நந்திச்சாமியும் எங்கேயும் போகக் கூடாது. ஆமா, இந்த நந்திச்சாமி எங்கே?”னு கேட்டுக்கிட்டே சித்தன் பதற்றமா வெளிய வந்து தேட ஆரம்பிச்சான்.
மலை அடிவாரத்துல, போடப்ப நாயக்கர் தன்னோட பரிவாரங்களப் பார்த்து, காட்டு மரங்களையெல்லாம் ஒரு சதுக்கமா வெட்டச் சொல்லி உத்தரவு போட்டுக்கிட்டு இருந்தார்.
திடீர்னு அங்க வந்த சேவுகமார்கள் ரெண்டு பேர், “மகாராசா… காட்டுக்குள்ள பராக்குப் பார்த்துக்கிட்டு இருந்தோம். இந்த ஆளு மாறுவேஷத்துல நம்மை வேவு பார்க்க வந்தவர்போல தெரிஞ்சது..! பிடிச்சுக் கொண்டுவந்துட்டோம்!”னு ஒரு கும்பிடு போட்டு விலகி நின்னாங்க.
போடப்ப நாயக்கர் உத்துப் பார்த்தாரு… தலையாட்டினாரு.
தலைப்பாகையைக் கழட்டிக் கையில வச்சுக்கிட்ட நந்திச்சாமி, “மகாராசா, என் பெயர் நந்திச்சாமி. இது வேஷம் இல்லை. தளபதி உடுப்புதான். நான்தான் பெரும்பிறவி பாண்டியனோட தளபதி. குரங்கணி மலையிலிருந்து தப்பிச்சு வந்திருக்கேன். பாண்டியரும் நானும் உங்க கண்ணுல படாம மறைஞ்சு வாழ்றது உண்மைதான். அதே சமயம் பாண்டியனைப் பிடிக்க அரிகேசரிநல்லூர்க்குப் போங்கன்னு நீங்க உங்க படைவீரர்களுக்கு உத்தரவு போட்டதைத் தெரிஞ்சுக்கிட்டேன். அங்க போன படைவீரர்கள் எங்க மக்களைக் கட்டிப்போட்டு, பாண்டியன் இருப்பிடத்தைத் துப்புக் கொடுக்கச் சொல்லி சித்ரவதை பண்றதா எங்க ஒற்றன் வந்து சொன்னான். பூலான் நந்தீஸ்வரர் கோயிலை எங்க இன மக்கள்தான் புனருத்தாரனம் செஞ்சு பராமரிச்சு வர்றாங்க. பாண்டியனைத் தேடுற சாக்குல உங்க படைவீரர்கள் எங்க கோயிலையும் மக்களையும் துவம்சம் செய்துடுவீங்களோனு பயந்துதான் நானே உங்ககிட்ட வந்து சரணாகதியாகிட்டேன்.
என்னோட பேரே திருமால் நந்திச்சாமிதான். சிவபெருமான் திரிபுரத்தைத் தகனம் செய்தபோது அவருக்கு உதவி செய்றதுக்கு திருமாலே நந்தியா மாறுனது மாதிரி, பாண்டியரைப் பிடிக்க உங்களுக்கு ஒத்தாசையாய் இருப்பேன். பாண்டியர் ஆதிகுடி முதுவார்களோட பாதுகாப்புல இருக்காரு…”
“நிறுத்துங்க… நீர் பாண்டியனைக் காட்டிக்கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?”
“அவனைக் காட்டிக்கொடுக்கிறேன்னு தப்பிதமா அர்த்தம் பண்ணிக்க வேணாம். எங்க இன மக்களைக் காப்பாத்தி வாழ வைக்க நினைக்கிறேன்னு அர்த்தப்படுத்திக்கங்க. இது சத்தியம் மகாராசா!”
“அவன்னு சொன்னதால, இப்போ உன்னை நம்புறேன்… ம்?” மீசையைத் தடவி, மேற்கொண்டு சொல்லச்சொல்லி தலையைத் தூக்கி, புருவத்தையும் தூக்கினாரு போடப்ப நாயக்கர்.
“எங்க குல பெண்களை நாசப்படுத்தினான்;. வாயால சொல்ல முடியல. நானும் உடந்தையா இருந்துட்டேன். அவனைப் பழிவாங்கி அழிக்கத்தான் சித்தன்கிட்ட பாண்டியனைக் கோளாறாக் கூப்பிட்டுப் போய் ஒப்படைச்சேன். அந்தச் சித்தனோ, பாண்டியனையும் என்னையும் மன்னிச்சு, உசுருக்குப் பாதுகாப்பு தந்து, கஞ்சி ஊத்திக் காப்பாத்திக்கிட்டு இருக்கான்.
இந்தச் சாக்குல, பாண்டியன் எனக்குத் தெரியாமலே ஒரு படையைக் காட்டுக்குள்ள திரட்டிக்கிட்டு இருக்கான். மலைச் சாதி மக்களை ஒழிக்கவா… இல்ல, உங்கப் படைகூட மோதவான்னு ருசுப்படுத்த முடியலை. அதுல ஒரு சேவுக விசுவாசிதான் எனக்கு எல்லாக் கதையும் சொன்னான். இப்போ நீங்கதான் எங்க குலத்துக்குப் பாதுகாப்பு. நீங்கதான் மகாராசா!”னு போடப்ப நாயக்கரோட கால்ல விழுந்தான் நந்திச்சாமி.
தன்னோட பரிவாரத் தளபதியைக் கூப்பிட்ட நாயக்கர், “இன்னிக்கு ராத்திரிக்குள்ள பெரும்பிறவி பாண்டியனையும், சித்தனையும் கட்டித் தூக்கி வரணும். குரங்கணி மலைக்குப் படையைத் தயார்ப்படுத்துங்க!”
- சொல்றேன்...