தாவோ: பாதை புதிது - 16


காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது நடந்த சம்பவம் இது. இந்திய மக்களைத் திரட்டி ஜோகனஸ்பர்க் நகரத்தில் ஒரு கூட்டத்தை காந்தி நடத்தினார். கூட்டம் முடிந்ததும் தனது நண்பரின் மனைவியான மிலி போலக்குடன் காந்தி அந்த அரங்கை விட்டுப் புறப்பட்டார். வெளியில் ஒரு தூணுக்குப் பின்னால் யாரோ ஒருவர் தயங்கித் தயங்கி நிற்பதை அவர்கள் காண்கின்றனர். அந்த நபரை நோக்கி காந்தி செல்கிறார். மிலி சற்றுப் பின்தங்குகிறார்.

காந்தி நேராக அந்த மனிதரிடம் சென்று, அவருடன் கைகோத்துக்கொண்டு ஏதோ பேசுகிறார். பிறகு, அந்த மனிதர் தயங்கித் தயங்கி காந்தியுடன் நடந்துசெல்கிறார். தாழ்வான குரலில் இருவரும் பேசிக்கொண்டே நடக் கிறார்கள். தெருவின் முடிவில் அந்த நபர் காந்தியிடம் ஏதோ ஒரு பொருளைக் கொடுத்துவிட்டுச் செல்கிறார். அது என்ன என்று மிலி போலக் காந்தியிடம் கேட்க ‘கத்தி’ என்கிறார் காந்தி. அந்த நபர் காந்தியைக் கொல்வதற்காக வந்திருக்கிறார். காந்தி தென்னாப்பிரிக்காவிலுள்ள இந்திய மக்களுக்கு துரோகம் செய்வதாகவும், அரசாங் கத்தின் கையாளாக இருந்துகொண்டு இந்தியர்களிடம் நண்பராக, தலைவராக காந்தி நடிப்பதாகவும் அந்த நபர் கருதியிருக்கிறார்.

“அவர் உங்களைக் குத்தியிருப்பார்... ‘என்று பேச ஆரம்பித்த மிலியைக் காந்தி மேற்கொண்டு பேசவிட வில்லை.

"என்னைக் கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தனக்கு இருப்பதாக அவர் நினைத்தார். ஆனால், உண்மையில் அவருக்கு அந்தத் துணிச்சல் கிடையாது. நான் அவர் நினைத்த அளவுக்கு உண்மையில் மோசமானவனாக இருந்தால் நான் சாக வேண்டியவன்தானே? இனி நாம் இதை நினைத்துக் கவலைப்பட வேண்டியதில்லை. அவர் இனிமேல் என்னைக் கொலை செய்ய முயல்வார் என்று நான் நினைக்கவில்லை. நான் அவரைக் கைது செய்ய வைத் திருந்தால், அவர் எனக்கு ஒரு எதிரியாக மாறியிருப் பார். இனி அவர் ஒரு நண்பராகவே இருப்பார்."

மிலி போலக், காந்தியைப் பற்றி ‘காந்தி எனும் மனிதர்’ (தமிழில்: க. கார்த்திகேயன், சர்வோதய இலக்கியப் பண்ணை) என்ற நூலை எழுதியிருக்கிறார். அதில் விவரிக்கப்பட்ட சம்பவம்தான் இது.

காந்தியைப் பற்றி நினைத்து நினைத்து நான் ஆச்சரியப்படும் விஷயங்களுள் ஒன்று, எப்படி அவர் 79 வயது வரை உயிர் வாழ்ந்தார் என்பதுதான். தென்னாப்பிரிக்கா, இந்தியா என்ற இரண்டு நாடுகளிலும் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகவும், பிரிட்டிஷ், இந்திய முதலாளிகளுக்கு எதிராகவும், தன் சொந்த மக்களின் அதீதங்களுக்கு எதிராகவும் எத்தனையோ போராட்டங்களை நடத்திய வர். இதனால், எந்த அளவுக்கு உறவுகளை யும் நட்பையும் சம்பாதித்துக்கொண்டாரோ அந்த அளவுக்கு எதிர்ப்பையும் எதிரி களையும் சம்பாதித்துக்கொண்டார்.

1930-களின் தொடக்கத்திலிருந்து 1948-ல் ஒரு இந்துத்துவ வெறியனால் சுட்டுக்கொல்லப்படும்வரை அவர் மீது ஆறேழு கொலை முயற்சிகள் நடக்கத்தான் செய்தன. அவரைக் கொல்பவர்களாலும் மரணத்தாலும் அவரை எளிதில் அணுக முடியும் என்றாலும் அது 1948-வரை சாத்திய மாகவில்லை என்பது மிகவும் ஆச்சரிய மானது. ஏனெனில், இதுவரையிலான உலகத் தலைவர்களிலேயே தனக்கென்று எந்தப் பாதுகாப்பும் வைத்துக்கொள்ளாத, அனைவரும் எளிதில் அணுகக்கூடிய தலைவரென்று காந்தியைத்தான் சொல்ல முடியும். தன்னைச் சுற்றிப் பாதுகாவலர்கள் இருப்பதை காந்தி விரும்பவில்லை. ஆகவே, காந்தியை ஒருவர் கொல்ல நினைத்திருந்தால், கோட்சே செய்ததைப் போல மிகவும் எளிதாக அவரை அணுகி முன்பே கொன்றிருக்க முடியும். அது அவ்வளவு எளிதில் நடக்காததற்கு என்ன காரணம் என்று யோசித்துப்பார்க்கிறேன்.

ஒரு வகையில் காந்தியின் தூய்மையும் திறந்த மனதும் வெளிப்படையான வாழ்க்கையும் அவரைச் சுற்றிக் கண்டுணர முடியாத ஒரு ஒளிவட்டத்தை ஏற்படுத்தியிருந்தது என்றுதான் நான் நம்புகிறேன். புத்தருடைய ஒளிவட்டம், அவர் இருந்த காடு முழுவதும் பரவியிருந்தது என்றும் அந்த ஒளிவட்டத்துக்குள் சிங்கம், புலி போன்ற விலங்குகளெல்லாம் சாதுவாக உலவிக்கொண்டிருந்தன என்றும் புத்தரைப் பற்றிய கதைகளில் படித்திருக்கிறேன். இதை தர்க்கபூர்வமாக ஆராய்வதைவிட இதன் குறியீட்டுத்தன்மையையே பார்க்க வேண்டும்.

இது போன்ற பல கோணங்களில் பார்க்கும்போது லாவோ ட்சு கூறும், ‘செழித்த தே உடைய மனிதன் ஒரு கைக்குழந்தை மாதிரி’ என்ற வரிகளுக்கும் அதைப் பின்தொடரும் வரிகளுக்கும் காந்தியை ஓரளவுக்கு உதாரணமாகக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

ஜென் கதைகளில் ஒரு வில் வீரனைப் பற்றி அடிக்கடி வரும். தூரத்தில் உள்ள இலக்கை நோக்கித் துல்லியமாகக் குறிபார்த்தபடி வில்லின் நாணை, எந்த அளவுக்கு இழுக்க முடியுமோ அந்த அளவுக்கு இழுத்துப் பிடித்திருக்கிறான் ஒரு வில் வீரன். அவனுடைய புஜத்தின் தசையைத் தொட்டுப்பார்த்தால் அவ்வளவு மென்மையாக இருக்கும். உள்ளத்திலும் உடலிலும் மென்மையாக இல்லாமல் இலக்கைத் துல்லியமாக எட்ட முடியாது என்கிறது தாவோ.

காந்தி, தான் வாழ்ந்த காலத்தில் எந்த மனிதரை விடவும் மிகவும் ‘பிஸி’யானவர். ஏனெனில் அவரது அக்கறை வட்டம் என்பது இந்தி யர், இந்தியர்களுக்குள் சிறுபான்மை யினர், ஒடுக்கப்பட்ட மக்கள், விவசாயிகள், பழங்குடியினர் என்ற வட்டத்தில் தொடங்கி அங்கிருந்து உலகம் முழுவதையும் நோக்கி விரிந்தது. அவர் ஒவ்வொரு நாளும் எழுதிய கடிதங்கள், பத்திரிகைக்கு எழுதிய பக்கங்கள், அரசியல் ரீதியிலான சந்திப்புகள், பயணங்கள் எல்லாவற்றுக்கும் மத்தியிலும் ஒரு குழந்தையிடம் விளையாட, உரையாட அவருக்கு நேரம் இருந்தது.

ஒரு சிறிய வேலையில் நாம் மும்முரமாக மூழ்கியிருந்தோம் என்றால், நம் முகத்திலிருந்து முதலில் சிரிப்பு மறையும், புற உலகை மறப்போம். மனைவியோ குழந்தையோ குறுக்கே வந்தால், “எவ்வளவு முக்கியமான வேலையில் இருக்கிறேன். எனக்குத் தொந்தரவு கொடுக்காதீர்கள்” என்று அவர்களிடம் எரிந்து விழுவோம்.

காந்தியோ தூரத்தில் இருக்கும் இலக்கை நோக்கித் துல்லியமாகக் குறிவைத்திருக்கும் அதே நேரத்தில் தன் தசைகளையும் இதயத்தையும் மென்மையாக வைக்கத் தெரிந்த மனிதர். செழித்த ‘தே’ உடையவர். (தே என்றால் தாவோவைச் செயல்படுத்தும் விதம் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதுதானே!)

தன்னை முழுவதுமாக இந்தச் சமூகத்திடம் திறந்து காட்டிய ஒருவரைக் கொல்ல வருபவன்கூட அவரது காலில் விழுந்துவிட்டுதான் கொல்ல வேண்டும். அந்த மனிதரின் குழந்தைமையின் ஒளிவட்டம் அப்படி. தன் உடல், தன் குடும்பம், அரசியல், நாட்டு மக்கள் என்று எல்லாருக்கும் எல்லாவற்றுக்கும் இடையே ஒரு பரிபூரண லயத்தைக் காண முயன்று அதில் குறிப்பிடத் தகுந்த வெற்றியும் மதிக்கத் தகுந்த தோல்வியும் அடைந்த காந்தியிடம் ஆங்காங்கே தாவோ மனிதனை நம்மால் காண முடியும்.

‘தாவோ தே ஜிங்’ நூலின் பல பாடல்களில் கூறியுள்ள படி இந்தப் பாடலிலும் லாவோ ட்சு மென்மையையே நம் சக்தியின் ஆதாரமாகக் கொள்ளச் சொல்கிறார். அதுதான் தன்னைத் தானே புதுப்பித்துக்கொள்ளும் சக்தி என்கிறார். இயற்கையிலும் மனிதர்களுக்கிடையிலான உறவிலும் பரிபூரண லயத்தைக் காண்பதன் மூலம் இந்தச் சக்தியை அடைவதும் புதுப்பித்துக்கொள்வதும் சாத்தியம் என்கிறார். ஒரு செயலைச் செய்யும்போது நம் மென்மையை முழுவதும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்கிறார். அதுவே இந்த உலகில் நம்மை எப்போதும் கைக்குழந்தைபோல வைத்திருக்கும் என்கிறார். கைக்குழந்தைக்கு மூர்க்கத்தைக் கூட கனியச் செய்யும் சக்தி இருக்கிறது என்கிறார்.

(உண்மை அழைக்கும்...)

அதிகாரம் 55

செழித்த தே உடைய மனிதன்

ஒரு கைக்குழந்தை மாதிரி.

அந்தக் கைக்குழந்தையை

விஷப்பூச்சி எதுவும் கடிக்காது;

அதைக்

கொடிய மிருகம் எதுவும் தூக்கிக்கொண்டு போகாது;

அதை

ஊனுண்ணிப் பறவை எதுவும் தாக்காது.

அதன் எலும்புகள்

மெலிந்து இருக்கின்றன;

அதன் தசை நார்

மென்மையாக இருக்கிறது;

ஆனால், அதன் பிடி

பலமாக இருக்கிறது.

அதற்கு

ஆண் பெண் சேர்க்கை தெரியாது;

என்றாலும், அது

பருவம் எய்துகிறது.

அதாவது, அது

மிகச் சிறந்த வீரியத்தைக் கொண்டிருக்கிறது.

அது நாள் முழுவதும் கத்தலாம்;

என்றாலும், அதன் குரல்

கம்மிப்போவதில்லை.

அதாவது, அது

பரிபூரண லயத்தில் இருக்கிறது.

இந்த லயத்தைத் தெரிந்துகொள்வது

நிரந்தரத்தை அணுகுவதாகும்.

இந்த நிரந்தரத்தைத் தெரிந்துகொள்வது

ஞானத்தை அடைவதாகும்.

வாழ்வை நீட்டித்துக்கொள்வது

பெரும் கேட்டுக்கு இட்டுச்செல்லும்;

ஆகையால் சுவாசத்தைச் சிரமப்படுத்துவது

விறைத்துப்போவதாகும்.

- சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு சீன ஞானி லாவோ ட்சு எழுதிய ‘தாவோ தே ஜிங்’ நூலிலிருந்து, தமிழில்: சி.மணி

x