அரேபிய ரோஜா 16: ராஜேஷ் குமார்


கற்பனைத் தேரில் அற்புதப் பயணம்

ராஜேஷ் குமார்
rajeshkumar.novelist@gmail.com ­

அந்த இடத்தில் சர்புதீனை சற்றும் எதிர்பார்க்காத மஹிமாவும் ஹம்தாவும் அதிர்ச்சியின் உச்சத்தைத் தொட்டுவிட்டு சுவாசிக்க மறந்தவர்களாய் அப்படியே நிசப்தமாய் நின்றார்கள்.

அவன் நிதான நடை போட்டு அவர்கள் இருவரையும் நெருங்கினான். இரண்டு ஜோடிக் கண்களிலும் கலவரம் பரவிக்கொண்டிருந்தது.

மஹிமாவுக்கு வெகு அருகாக வந்து நின்றான். அவன் விட்ட மூச்சுக்காற்றில் உயர் ரக விஸ்கியின் வாசனை.

“மஹிமா... வெல்கம் டு துபாய்.’’

மஹிமாவும் ஹம்தாவும் வியர்க்க ஆரம்பித்தார்கள். சர்புதீன் இப்போது தமிழ் பேசினான்.

“இந்த ட்ரெஸ் கோடு புர்க்காவும் உனக்கு அழகாய்த்தான் இருக்கு மஹிமா. துபாய்ல இருக்கிறவரை நீ இதே ட்ரெஸ்ஸை கன்டினியூ பண்ணலாம்...’’ என்று சிரித்துக்கொண்டே சொன்னவன் சட்டென்று குரலைத் தாழ்த்தினான்.

“மஹிமா... ‘அரேபிய ரோஜா’ ப்ராஜெக்ட்டுக்காக அல் அராபத் டெக்னாலஜி பீப்பிள்தான் உன்னை துபாய்க்குக் கூப்பிட்டிருக்காங்க. உன்னை ஏர்போர்ட்டிலிருந்து ஹோட்டல் ‘கோல்டன் டாட்ஸ்’க்குக் கூட்டிட்டுப் போறதுக்காகக் கையில் ப்ளக் கார்டோடு ஏர்போர்ட் ரிஸீவிங் பாயின்ட்டில் ரெண்டு பேர் காத்திட்டுருக்கும்போது நீ இப்படி ஒரு ஏர்ஹோஸ்டஸோடு திருட்டுத்தனமாய் வெளியே வந்தது எந்த வகையில் நியாயம்?’’

மஹிமா எதுவும் பேசத் தோன்றாமல் வாய் உலர்ந்து போய் நிற்க, ஹம்தா மட்டும் சற்றே துணிச்சலை வரவழைத்துக்கொண்டு தன் இடது கையின் ஆட்காட்டி விரலை உயர்த்தினாள். அடிக்குரலில் கர்ஜித்தாள்.

“இதோ பார்... ஒரு பெண்ணை மிரட்டுறதுக்கும், அவளைத் தப்பான வழிக்குக் கொண்டுபோறதுக்கும் இது ஒண்ணும் இந்தியா இல்லை. சத்தமாய் நான் ஒரு குரல் கொடுத்தா போதும். இங்கே இருக்கிற ஒட்டுமொத்த அபார்ட்மென்ட் ஆட்களும் வந்துடுவாங்க. அதுக்கப்புறம் உன்னோட நிலைமை என்னாகும்னு ஒரு சில விநாடிகள் யோசிச்சுப் பாரு..!’’ ஹம்தா பேசிக்கொண்டு இருக்கும்போதே அவளுடைய பேச்சு அறுந்த தோரணமாயிற்று.

சர்புதீனின் கையில் இருந்த பிஸ்டல் மெல்ல உயர்ந்து மஹிமாவின் நெற்றிப்பொட்டில் தன் உலோக வாயை வைத்திருந்தது.

“ஹம்தா... இனி ஒரு வார்த்தை நீ பேசினாலும் சரி, மஹிமாவின் தலை ரத்தக்களரியாகிவிடும். நான் துபாய் போலீஸுக்கு மட்டுமில்லை. எந்த நாட்டு போலீஸுக்கும் பயப்படாதவன். இப்ப நான் சொல்றபடி கேட்டா, ரெண்டு பேருக்கும் நல்லது. இல்லைனா சுட்டுத் தள்ளிட்டுப் போயிட்டே இருப்பேன்.’’

மஹிமா குரல் நடுங்கக் குறுக்கிட்டாள்.

“நா... நாங்க இப்ப என்ன பண்ணணும்?’’

‘‘உனக்கு இடது பக்கம் திரும்பிப் பாரு.’’

மஹிமா திரும்பிப் பார்த்தாள்.

‘‘ஒரு ஒயிட் கலர் வேன் தெரியுதா?’’

‘‘ம்...’’

“ரெண்டு பேரும் மூச்சுக் காட்டாம நடந்துபோய் அந்த வேன்ல ஏறி உட்காரணும்.’’

மஹிமாவும் ஹம்தாவும் தயக்கமாய் நின்று கொண்டிருக்க சர்புதீன் கேட்டான். ‘‘என்ன... இம்ரா உங்க ரெண்டு பேருக்காக அபார்ட்மென்ட்ல வெயிட் பண்ணிட்டிருப்பான்னு நினைக்கிறீங்களா? இம்ரா, வேன்ல உங்க ரெண்டு பேருக்காகக் காத்துட்டிருக்கா... ம்... போங்க. அவளுக்குப் பக்கத்துல போய் உட்காருங்க. மத்த விஷயங்களையெல்லாம் வேன்ல போகும்போதே பேசிட்டுப் போகலாம்.’’

துப்பாக்கியின் வாய் இப்போது மஹிமாவின் நெற்றிப் பொட்டிலிருந்து கீழே இறங்கிப் பின்னங்கழுத்தை ஜில்லிப்பாய் ஸ்பரிசித்தது.

‘‘ம்...நடங்க. ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் சின்ன சில்மிஷம் பண்ணிணாலும் சரி... ரெண்டு பேருமே ரத்தத்தைச் சிந்தி அதே இடத்துல உயிரை விட வேண்டியதுதான்!’’

ஒரு நிமிஷ நடையில் வேனை நெருங்கினார்கள். வேனின் ட்ரைவிங் இருக்கையில் யாரோ ஒரு நபர் உட்கார்ந்து இருப்பது நிழல் உருவமாய் தெரிந்தது. வேனின் பின்பக்க கதவைத் திறந்துவிட்டான் சர்புதீன். இருவரும் ஏறி உட்கார்ந்ததும் அவர்களைத் தொடர்ந்து சர்புதீனும் ஏறிக்கொண்டான்.

வேன் உடனே புறப்பட்டு வேகம் எடுக்க, பிரதான சாலைக்கு வந்து வெளிச்சமான மேம்பாலத்தில் ஏறியது.

வேனுக்குள் ஏ.சி. காற்று நிரம்பியிருந்தாலும், மஹிமாவும் ஹம்தாவும் வியர்வைக் குளியலில் இருந்தார்கள். இருவரின் பார்வையும் சுற்றும்முற்றும் அலைய, எதிரில் கையில் பிஸ்டலோடு உட்கார்ந்திருந்த சர்புதீன் சிறிய சிரிப்போடு கேட்டான்.

‘‘யாரைத் தேடுறீங்க... இம்ராவையா?’’

இருவரும் ‘ஆமாம்’ என்பதுபோல் தலையை அசைத்தார்கள்.

‘‘நீங்க ரெண்டு பேரும் உட்கார்ந்து இருக்கிற நீளமான சீட்டுக்குக் கீழே குனிஞ்சி பாருங்க...’’

இருவரும் கலவர விழிகளோடு குனிந்து பார்த்தார்கள்.

வேனுக்குள் பரவியிருந்த மங்கிய வெளிச் சத்தில் அந்த நீளமான இருக்கைக்குக் கீழே இம்ரா மல்லாந்து தெரிந்தாள். உடம்பில் எந்தச் சலனமும் இல்லை.

ஹம்தா பதற்றமும் பயமும் கலந்த குரலில் கேட்டாள். ‘‘இம்ராவுக்கு என்னாச்சு? ஏன் இப்படி அசைவில்லாமல் இருக்கா..?’’

‘‘அவளை வெளியே இழுத்து என்ன வாயிருக்கும்னு ரெண்டு பேரும் பாருங்க. நீதான் ஏர்ஹோஸ்டஸ் ஆச்சே. அவ உடம்புக்கு என்ன பிரச்சினைனு பார்த்து ஃபர்ஸ்ட் எய்ட் ஏதாவது பண்ணு ஹம்தா.’’

மஹிமாவும் ஹம்தாவும் இம்ராவை இருக்கையின் அடியிலிருந்து நிதானமாய் உருவி வெளியே கொண்டுவந்தார்கள்.

மார்பில் உறைந்துபோன ரத்தக் குளத் தோடு வெளிப்பட்டாள் இம்ரா. விழிகள் ஒரே திசையைப் பார்த்து நிலைத்துப்போயிருக்க, அவளுடைய உடம்பில் உயிர் இல்லை என்பது பார்த்த விநாடியிலே தெரிந்தது.

மஹிமாவின் இருதயம் துடிக்க மறந்து ஒரு பனிக்கட்டியாய் மாறியது. ஹம்தா கோபாவேசத்தோடு சர்புதீனைப் பார்க்க அவன் தன் கையில் இருந்த பிஸ்டலைத் தன் தாடையில் தேய்த்துக்கொண்டே உதட்டில் உதித்த ஒரு உயிரில்லாத புன்னகையோடு கேட்டான்.

‘‘என்ன ஹம்தா அப்படிப் பாக்குறே... நான் இருபது நிமிடங்களுக்கு முன்னாடியே இம்ராவோட அபார்ட்மென்ட்டுக்கு வந்துட் டேன். இம்ரா உங்க ரெண்டு பேரோடையும் போன்ல பேசி முடிச்சதும், இந்த ‘ ஜீரோ நாய்ஸ்’ பிஸ்டலிலிருந்து ரெண்டு தோட் டாவை அனுப்பி அவளை ரத்தச் சகதி யாக்கி இந்த வேனுக்குக் கொண்டுவந்துட் டேன். நீயே சொல்லு... கம்பெனிக்கும் எனக்கும் துரோகம் பண்ணின இவளை இனியும் உயிரோடு விட்டுவைக்கலாமா?’’

“யூ... யூ...யூ’’ என்று ஆத்திரத்தோடு கத்திய ஹம்தா சட்டென்று எதிர்பாராத ஒரு விநாடியில் தன் மார்புப் பகுதிக்குள் கையைக் கொண்டுபோய் எதையோ எடுத்து அழுத்தினாள்.

‘ப்ளக்’

அரையடி நீளத்துக்குத் தன் பளபளப்பான நாக்கை நீட்டியது அந்த மல்டிபர்ப்பஸ் டிவைஸ்.

சர்புதீன் சிரித்தான்.

‘‘ஓ... தற்காப்பு ஆயுதம். ஒவ்வொரு பொண்ணுகிட்டேயும் இருக்க வேண்டிய ஒரு மஸ்ட் வெப்பன் இந்த மல்டிபர்ப்பஸ் டிவைஸ். குட். இப்ப என்னை என்ன பண்ணப் போறே? அந்தக் கத்தியால குத்திக் கொல்லப் போறியா? ம்... வா... வந்து ட்ரை பண்ணு.’’

ஹம்தா கையில் கத்தியோடு அவன் மீது பாய்ந்தாள்.

தன் மீது ஒரு புஷ்பமூட்டையைப் போல் வந்து விழுந்த ஹம்தாவைச் சுலபமாய்க் கையாண்டான் சர்புதீன். கத்தியைப் பிடித் திருந்த அவளுடைய வலது கையின் மணிக்கட்டை இறுக்கமாய்ப் பற்றிக்கொண் டவன், தன் வலது கையால் அவளுடைய கழுத்தைப் பிடித்தான். இரும்புப் பிடி.

பத்தே விநாடிகள்.

ஹம்தாவின் தலை ஸ்லோமோஷனில் தொய்ந்தது. சர்புதீன், வேனை ஓட்டிக் கொண்டிருந்த நபரைப் பார்த்துக் குரல் கொடுத்தான்.

‘‘வஹாப்...’’

‘‘என்ன சர்புதீன்?’’

‘‘ரெண்டாவது கோழியையும் கொல்ல வேண்டியதாயிடுச்சு.’’

வேனை வளைவில் திருப்பிக்கொண்டே அந்த வஹாப் சிரித்தான்.

‘‘சரி சரி... மூணாவது கோழி என்ன பண்ணுது?’’

‘‘மிரண்டு போய் உட்கார்ந்திருக்கு...’’

‘‘அதைக் கொன்னுடாதே... பத்திரமாய்க் கொண்டுபோய் சேர்க்கணும்.’’

‘‘அது எனக்குத் தெரியாதா என்ன?’’

மஹிமாவின் உடம்புக்குள் 440 வோல்ட்ஸ் திகில் மின்சாரம் பாய்ந்துகொண்டிருக்க, வேன் இப்பொழுது 150 மைல் வேகத்தில் ஒரு அரையிருட்டான சாலையில் பயணித்துக் கொண்டிருந்தது.

மஹிமாவின் இருதயம் துடிக்க மறந்து ஒரு பனிக்கட்டியாய் மாறியது. ஹம்தா கோபாவேசத்தோடு சர்புதீனைப் பார்க்க அவன் தன் கையில் இருந்த பிஸ்டலைத் தன் தாடையில் தேய்த்துக்கொண்டே உதட்டில் உதித்த ஒரு உயிரில்லாத புன்னகையோடு கேட்டான்.

(தொடரும்)

x