சுயலாப அரசியலும் தொலைநோக்குப் பார்வையும்!


‘நீட்’ தேர்வில் தோல்வி அடைந்த மாணவிகளின் தற்கொலை மீண்டும் தமிழகத்தைத் தாளாத சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இளம் தளிர்களை இழந்து வாடும் பெற்றோர் மற்றும் உறவினர்களின் கண்ணீர் உலுக்கி எடுக்கிறது.

அதேசமயம், இதைக் காரணம் காட்டி, ‘நீட்’ தேர்வு கூடாது என இனியும் சிலர் எதிர்ப்பதை ஏற்க முடியவில்லை. கல்வி - வேலைவாய்ப்பில் இளைய சமுதாயம் தேச எல்லைகளைத் தாண்டி, தயங்காமல் பயணித்தாக வேண்டிய போட்டி யுகம் இது. அப்படி இருக்க, நமது மாணவர்களின் திறமைக்கான போட்டி மாநில எல்லைக்குள்ளேயேதான் அமைய வேண்டும் என்ற சிந்தனை காலத்துக்கு ஒவ்வாதது; இன்னொரு தலைமுறையின் வளர்ச்சியைக் கட்டிப்போடக் கூடியது.

பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் வாங்கிக் கொடுப்பதே லட்சியம் என்று செயல்பட்டு, மாணவர்களை மனப்பாட இயந்திரங்களாக மாற்றுகிறோம். இத்தகைய கல்வித் திட்டத்தால்தான், ‘நீட்’ போன்ற அகில இந்திய தகுதித் தேர்வுகளில் போட்டியிட நம் மாணவர்களுக்குத் தயக்கம் இருந்தது. உண்மையில்... எதையும் சந்தித்து வெற்றி பெறும் அறிவுத் திறன் கொண்டவர்கள்தான் தமிழக மாணவர்கள். அதற்கேற்ப, அவர்களுக்கான கல்வித் தரத்தை உயர்த்தும் முயற்சியில் இப்போது தமிழகக் கல்வித் துறை இறங்கி இருப்பது நல்ல ஆரம்பம்.

அரசின் இதுபோன்ற தொலைநோக்கு முடிவுகளுக்கு ஆதரவு கொடுப்பதும், ‘நீட்’ போன்ற தேர்வுகளுக்குக் கிராமப்புற மாணவர்களும் செலவின்றி பயிற்சி பெறுவதற்கான வழி வகைகளை யோசிப்பதும், தற்கொலை எண்ணம் தவறானது என்பதை மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் புரியவைப்பதும்தான் நல்ல அரசியல் தலைவர்களுக்கு அழகு. அதைவிடுத்து, மரணங்களை அரசியலாக்கி, எதிர்கால யதார்த்தத்திலிருந்து மாணவர்களைத் திசை திருப்பி, அரசியல் லாபம் தேடுவது அல்ல!

x