தனியார் நிறுவனத்தில் குறைந்த சம்பளத்தில் வேலை செய்யும் அவர், வாடகை வீட்டில் வசிக்கிறார். மூவாயிரம் வாடகை கொடுக்க முடியாமல், இரண்டாயிரம் வாடகைக்கு இன்னொரு சிறிய வீட்டுக்குக் குடிபெயர்கிறார். வீட்டில் இருக்கும் சாமான்களை மனைவி, இரு பிள்ளைகளோடு சேர்ந்து அவரே புதுவீட்டுக்குச் சுமந்து செல்கிறார். யாரோ நான்கு பேர் இதைப் பார்த்துக்கொண்டே இருந்துவிட்டு கடைசியில், அவரிடம் ஒரு தொகையைக் கேட்டு வாங்கிச் சென்றனர். நடுத்தர வாசியான அவரும் எதிர்க்கத் துணிவின்றி அவர்கள் கேட்ட பணத்தைக் கொடுத்துவிட்டு புதுவீட்டுக்குள் நுழைகிறார்.
இதைத் தட்டிக்கேட்க, சண்டையிட, நாயகர் யாரும் ஓடிவருகிறாரா..? இது ஏதும் திரைப்பட படப்பிடிப்பா..? எனச் சுற்றும் முற்றும் கண்களைச் சுழற்றினேன். அப்படி ஏதும் இல்லை. அக்கம் பக்கத்தில் கேட்டால், “சேட்டா இவெடே புதியதானோ… இதானோ நோக்குக்கூலி” என்றார்கள். இதை வசூலிப்பதே சர்வகட்சிகளின் தொழிற்சங்கங்கள் தான் என்றதும் இன்னும் அதிர்ச்சியானேன். இது நடந்து இரண்டு மாதங்கள் இருக்கும். இப்போது நோக்குக்கூலிக்கு முற்றாக தடைவிதித்துவிட்டது கேரள அரசு. உழைப்பாளர் தினத்திலிருந்து இந்தத் தடைஉத்தரவு அமலுக்கு வந்திருப்பது கூடுதல் சிறப்பு.
தலித் சமூகத்தினரை அறநிலையத்துறை கோயில்களில் அர்ச்சகராக நியமித்தது தொடங்கி, சமூகநீதியை முன்னிறுத்தி ஏராளமான திட்டங்களை முன்னெடுத்து வருகிறது கேரளம். மாநிலத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி தொழிலாளர்களின் கட்சி. கேரளத்தில் தொழிற்சங்கங்களும் வலுவானவை. இந்தச் சூழலில் நோக்குக்கூலி முறையை ரத்து செய்தது புரட்சியே! தொழிலாளர்களுக்கு அனுசரணையாக இருப்பது இடதுசாரிகளின் அடிநாதம். ஆனால், கேரளத்தில் பொதுமக்களை தொழிற்சங்கங்கள் மிரட்டும் சூழலும் இருந்தது. நோக்குக்கூலி என்னும் பெயரில் தொழிற்சங்கங்கள் செய்த சேட்டைகள் மக்களை வாட்டி எடுத்தன.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சொக்கலிங்கம், “வீட்டுக்குத் தேவையான ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின்னு பொருள்களை வாங்கும்சராசரி நுகர்வோரில் ஆரம்பிச்சு, வணிகர்கள் விற்பனைக்காக ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டுபோகும் பொருள்கள் வரை எதையும் அவர்களே சுயமாகக் கொண்டு போக முடியாது. சொந்தப் பணியாளர்களை வைத்தும் பொருள்களை நகர்த்த முடியாது. இதுக்காகவே உள்ள பாரம் ஏற்றி, இறக்கும் தொழிலாளர்கள் மூலமாத்தான் இதைச் செய்யணும். இதைக் கண்காணிப்பதில் தொழிற்சங்கங்களும் தீவிரமாய் இருக்கும். பொருள்களை இறக்கி வைத்துவிட்டு அவங்க கேட்கும் கூலியைக் கேட்டால் மிரண்டு போவோம்.