தூத்துக்குடியை மட்டுமல்ல... வன கிராமங்களையும் விழுங்கத் துடிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள்!


'தூத்துகுடியில் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததால் துப்பாக்கிச் சூடு நடத்தினோம்...’ என்கிறது தமிழக அரசு. அப்படியானால் இந்தியாவில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் அதிகமாகக் காடுகளையும், மலைகளையும், நீர் நிலைகளையும் சேதப்படுத்திவரும் வேதாந்தா உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அரசுப் பேருந்துகளும் ஆட்சியர் அலுவலகமும் பொதுச் சொத்து எனில், காடுகளும், மலைகளும், நீர் நிலைகளும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பாத்தியப்பட்ட சொத்துகளா? வன்முறையை நியாயப்படுத்தவில்லை, அதேசமயம் எரிக்கப்பட்ட பேருந்தையும் உடைக்கப்பட்ட ஆட்சியர் அலுவலகத்தையும் சரிசெய்துகொள்ளலாம். ஆனால், அழிக்கப்பட்ட காடுகளையும், மலைகளையும், நீர் நிலைகளையும் மீண்டும் உருவாக்க முடியுமா? இந்திய அரசியல் சாசன சட்டப் பிரிவு 51 - ஏ-ன் படி வனங்கள், நீர் நிலைகள், வன உயிர்கள் உள்ளிட்ட இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டியதுதானே ஓர்  அரசின்

முதல் கடமை?

ஒருவேளை ஸ்டெர்லைட், தூத்துக்குடியை விட்டு வெளியேறிவிட்டாலும் அது ஏற்படுத்தி யுள்ள சுற்றுச்சூழல் சேதங்களைச் சரி செய்ய இன்னும் ஒரு தலைமுறை பிடிக்கும் என்கிறார்கள் சுற்றுச்சூழலியலாளர்கள். தூத்துக்குடி என்பது ஓர் உதாரணம் மட்டுமே. இந்தியா முழுவதும் ஸ்டெர்லைட் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் செய்துள்ள சேதாரங்கள் ஏராளம். கடந்த 1996-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் வாழவந்த நாடு, சேலூர் நாடு, அபியூர் நாடு ஆகிய வன கிராமங்களில் இதே  வேதாந்தா நிறுவனம் செய்த சேதங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. சுமார் 12 ஆண்டுகள் அங்கு பாக்சைட் கனிமம் வெட்டி எடுப்பதற்காகக் சுமார் 600 ஏக்கர் பரப்பளவிலான காடு முற்றிலுமாக அழிக்கப்பட்டது. பழங்குடியினர் வெளியேற்றப்பட்டார்கள். 2008-ம் ஆண்டு வேதாந்தா நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்ந்தார் சமூக செயல்பாட்டாளரான பியூஷ் மானுஷ். அன்றைய நாமக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்தவர் சகாயம். தொடர்ந்து அந்த நிறுவனம் அங்கிருந்து அகற்றப்பட்டது.

ஆனாலும், இன்றுவரை கொல்லிமலையில் அழிக்கப்பட்ட வனம் உயிர்ப் பெறவே இல்லை. இதேபோன்று சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த ஏற்காடு மலையின் உச்சியான பக்கோடா பாயின்ட் அருகிலும் பல ஏக்கர் பரப்பளவுக்குக் காடுகளை அழித்து மலையை வெட்டியிருக்கிறது வேதாந்தா. சமீபகாலமாக பன்னாட்டு நிறுவனங்கள் பல்முனை அழுத்தங்கள் மூலம் அரசின் கொள்கை முடிவுகளிலேயே தங்களுக்குச் சாதகமான முடிவுகளை எடுக்க வைக்கின்றன. புலிகள் பாதுகாப்பு, காடுகள் வளர்ச்சி, கார்பன் வணிகம் என்று அதற்கு நிறைய முகங்கள். பன்னாட்டு நிறுவனங்களின் இதுபோன்ற நடவடிக்கைகளால், பெரிதும் பாதிக்கப்பட்டிருக் கிறார்கள் பழங்குடியினர். நிறைய உதாரணங்களைச் சொல்ல முடியும்...

x