மோதப் போவது கமலும் ரஜினியும்தான்!


முன்பெல்லாம் கமல் - ரஜினி சினிமாவை வைத்து ரசிகர்கள்தான் தங்களுக்குள் முட்டிக்கொள்வார்கள். ஆனால், இப்போது அரசியலில் ரஜினியும் கமலுமே எதிர் எதிர் துருவங்களாகக் கொம்பு சீவப்படுகிறார்கள். சீக்கிரமே இவர்கள் இருவரும் தெற்கு - வடக்காய் தோள்தட்டி நிற்பதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்திருக்கின்றன!

அண்மை ஆண்டுகளாக ரஜினியும் கமலும் பொது மேடைகளில் தங்களது நட்பின் இலக்கணத்தை நாடே பிரமிக்க பிரகடனம் செய்து வந்தார்கள். ஆனால், அரசியல் என்று வந்தபிறகு, ‘அது அத்தனையும் நடிப்பா..?’ என்கிற ரீதியில் இருவரது நடவடிக்கைகளும் மாறிக்கொண்டிருக்கின்றன. சினிமாவைப் போலவே அரசியலிலும் ரஜினிக்கு முன்னதாகவே அவதாரமெடுத்த கமல், தனது அரசியல் பயணத்துக்குப் பகுத்தறிவுப் பாதையைத் தேர்வு செய்தார். ரஜினியோ, “எனது அரசியல் ஆன்மிக அரசியல்” என்று கமலுக்கு எதிர் திசையில் நிற்கிறார்.

ரஜினி தந்திரம்!

அண்மையில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு கருத்துச் சொன்ன ரஜினி, “கலவரத்துக்குக் காரணம் சமூக விரோதிகள்” என்றார். உடனே, “போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் எல்லாம் சமூக விரோதிகள் என்றால், நானும் சமூக விரோதிதான்” என்று ரஜினிக்கு பதிலடி கொடுத்தார் கமல். காவிரிப் பிரச்சினைக்காக கர்நாடக முதல்வர் குமாரசாமியைச் சந்தித்த கமல், “காலாவை விட காவிரி முக்கியம்” என்றார். கர்நாடக முதல்வரைக் கமல் சந்தித்ததற்குத் தமிழகத் தலைவர்கள் கண்டனம் எழுப்புகிறார்கள். ரஜினியோ கமலைப் பாராட்டுகிறார். இதை வைத்து ரஜினிக்கு நண்பர் கமல் மீது பரிவு என்று நினைத்துவிட வேண்டாம். ரஜினி-குமாரசாமி சந்திப்பைப் பாராட்டினாலவது கர்நாடகத்தில் ‘காலா’வுக்கு வழிபிறக்காதா என்பதுதான் இதற்குள் இருக்கும் ரஜினி தந்திரம்!

x