சொட்டாங்கல்- தமிழச்சி தங்கபாண்டியன்


லிங்கம்மா

“கெப்புலிங்கம்பட்டிதா எங்கவ்வா ஊரு செமதி. கொலசாமி பேரத்தா எனக்கு வச்சுருக்கு. என்னயப் போலவே எஞ்சாமிக்கும் செவப்புக் கலரும், பச்சரிசிக் கொழக்கட்டையும்னா உசிரு”னுவா லிங்கம்மா. பொழுதன்னிக்கும் எதையாச்சும் அதக்கி மென்னுகிட்டேதா இருப்பா. “உறங்கறப்பயும் கடவாப் பல்லக் கடிச்சுகிட்டே, நாக்க மென்னுகிட்டேதா ‘கேடுத’கெடப்பா”னு மொட்டையவ்வா செல்லமா வையும். லிங்கம்மாக்குப் பல்ல வௌக்கமுன்னயும் கடுங்காப்பி ஒரு சொம்பு நெறய கொதிக்கக் கொதிக்க இருக்கணும். அதக் குடிச்சுட்டுப் பொட்டுக் கடலையும் தேங்காச் சில்லையும் சுருக்குப் பைல போட்டுக்கிட்டு காட்டு வேலைக்குக் கௌம்பிருவா. அந்தச் சுருக்குப் பையச் சணல் கயத்துல கட்டி ரெண்டு சுத்தா பாவாடைக் கயத்தோடச் சுத்தி வச்சிருப்பா.

அவளுக்குப் பள்ளியோடம்னாலே பச்சநாவி. அவ அம்மா எத்தன அடி நொங்கெடுத்தாலும் பள்ளியோடத்துக்குப் போக மாட்டேனுட்டா. பால்பவுடரு, மக்காச்சோள வடை போடற அன்னிக்கு மட்டும் காட்டு வேலைய முடிச்சுட்டு வட்டுலோட மதியமா வந்துருவா. அவ வர்றதக் கணக்கு வச்சு சத்துணவு கண்ணம்மாக்கா சோத்துக் குண்டானையும், பருப்பு அண்டாவையும் வௌக்காமப் போட்டு வச்சுருக்கும்.

லிங்கம்மா வர்ற அன்னிக்குச் சத்துணவு தின்னுப்புட்டு வெளியே ஓடாம, அவளோட பாத்திரம் வௌக்க ஒக்காந்துருவோம் நானும் கீதாவும். “தேங்கா நார வச்சுக் குண்டான வௌக்கங்குல்ல நமக்கெல்லாம் ஒடம்புல குத்தாலம் கொட்டும். ‘அண்டா’மட்டும் அலுங்காம வௌக்கிக் கவுத்துறா பாரு”ன்னு ஒல்லி சுப்பு சொன்னதுக்கு, அவ நெத்தி மேல ஒரு தண்ணி லோட்டாவ விட்டெறிஞ்சுட்டா. ‘அண்டா’ங்கிறது லிங்கம்மாவோட பட்டப் பேரு. பள்ளியோடத்துல ஆராச்சும் அப்டிக் கூப்புட்டா பையத் திரும்பி, ஒதட்டோரமா வக்கணம் காட்டிட்டு விட்டுறுவா. வெளிவாசல்ல ஆராச்சும் ‘அண்டா’னுட்டா, அவுக தலைய ஆஞ்சுப்புடுவா.

x