முடிவற்ற சாலை 5: திப்பு சுல்தானின் ஆடைகள்!


தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் என்ன உடை அணிந்திருந்தார்கள்? அவர்களிடம் மேல்சட்டை அணியும் பழக்கம் இருந்ததா? வேட்டி கட்டியிருந்தார்களா? சினிமாவில் காட்டப்படும் ராஜா வேஷம் என்பது வெறும் ஒப்பனைதானே?

சிற்பங்களில் காணப்படும் மன்னர் உருவம் எதிலும் மேல்சட்டை அணிந்த தோற்றம் கிடையாது. சுவரோவியங்களிலும் அப்படியே. தையல் இயந்திரம் 1790-ம் ஆண்டு தாமஸ் செயின்ட் என்பவரால் வடிவமைக்கப்பட்டது.  விலங்குகளின் தோல்களைத் தைப்பதற்காக இந்த இயந்திரம் உருவாக்கப்பட்டது. அதன் முன்பு வரை கையால் ஊசியைக் கொண்டு தைப்பதே வழக்கம்.

விதவிதமான ஊசி வகைகள் நம்மிடம் இருந்திருக்கின்றன. சீனாவிலிருந்தும் கிரேக்கத்திலிருந்தும் நுண்ணிய ஊசிகள் தமிழகத்துக்குக் கொண்டுவரப்பட்டதாகத் தகவல். அதைக் கொண்டு தையல் கலைஞர்கள் ஆடைகள் தைத்துத் தந்திருக்கக் கூடும்.

தமிழக மன்னர்கள் அணிந்த ஆடைகள் எதுவும் நமக்குக் கிடைக்கவே இல்லை. இலக்கியங்களில் குறிப்பிடப்படும் ஆடைகளே நமக்குக் கிடைத்துள்ள சாட்சியம். நெசவுத் தொழிலில் நாம் மேலோங்கி இருந்ததற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன.

மன்னரின் ஆடை பற்றிய இந்தச் சந்தேகம் எழுந்த இடம் ரங்கப்பட்டணம்.  கர்நாடகத்தில் மைசூர் போகும் வழியில் உள்ளது ரங்கப்பட்டணம். ஆற்றின் கரையில் அமைந்துள்ளது திப்புவின் கோடை மாளிகை. அதைக் காணச் சென்றிருந்தேன். தரியா தவுலத் பாக் எனப்படும் இந்த மாளிகை  இப்போது அருங்காட்சியகம் போல உருமாற்றப்பட்டுள்ளது. புல்வெளியும் நீரூற்றுகளும் அழகிய வேலைப்பாடு அமைந்த மாளிகையாக இருந்தாலும், கழிப்பறைகள் கிடையாது என்பதே நிஜம்!

நீண்ட புல்வெளி. அலங்காரமாக வெட்டிவிடப்பட்ட செடிகள். கோடை விடுமுறை என்பதால், ஏராளமான சுற்றுலாப் பயணிகள்.

திப்புவின் மாளிகையைப் பலமுறை கண்டிருக்கிறேன். இங்குள்ள ஓவியங்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. குறிப்பாக, ‘ஸ்டார்மிங் ஆஃப் ரங்கப்பட்டணம்’ (Storming of Srirangapatna) என்ற போர்க்கள ஓவியம் மிகவும் புகழ்பெற்றது.  இதை வரைந்தவர் ராபர்ட் கெர் போர்டர் என்ற ஆங்கிலேய ஓவியர். இது போலவே ‘திப்புவின் மகன்களை காரன்வாலிஸ் பிரபுவிடம் ஒப்படைத்தல்’ என்ற ராபர்ட் ஹோம் வரைந்த ஓவியம் இரண்டும் முக்கியமான வரலாற்றுச் சாட்சியங்கள்.

மேற்குச் சுவரில் ஹைதர் மற்றும் திப்புவின் 1780-ம் ஆண்டு போர்க்களக் காட்சி இடம்பெற்றுள்ளது. 18 அடி உயர சுவரோவியம். கிழக்குச் சுவரில் அரண்மனை வாழ்க்கையை விவரிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட உருவங்கள் கொண்ட சித்திரங்கள் காணப்படுகின்றன. இத்தோடு  திப்புச் சுல்தான் பயன்படுத்திய வாள், அணிகலன்கள், நாணயங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த மாளிகையினுள் திப்புவின் ஆடையும் கண்ணாடிப் பெட்டகம் ஒன்றினுள் இருந்தது. பட்டால் ஆன அந்த ஆடையைக் காணும்போது திப்பு சுல்தான் உயரம் குறைவானவர் என்ற எண்ணம் உருவானது.

ராபர்ட் ஹோம், இங்கிலாந்தில் பிறந்த ஓவியர். 1791-ம் ஆண்டு காரன் வாலிஸ் பிரபுவின் கூடவே பயணம் செய்து, அவரது முக்கிய நிகழ்வுகளை ஓவியமாக வரைவதற்காக ராபர்ட் ஹோம் நியமிக்கப்பட்டார். அதனால், படைப்பிரிவு செல்லும் இடங்களுக்கு எல்லாம் ஓவியர் ஹோம் கூடவே சென்று, படங்களை வரைந்திருக்கிறார்.

மூன்றாம் மைசூர் போரில் ஆங்கிலேயர்களிடம் திப்பு சுல்தான் தோற்றுப்போகவே, அதற்கு நஷ்ட ஈடாக அவரது ராஜ்ஜியத்தில் ஒரு பகுதியும் 3.3 கோடி வராகன் பணமும் கொடுக்கும்படி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

இந்தப் பணம் செலுத்தப்படும் வரை பிணையாக திப்பு சுல்தானின் பிள்ளைகள் இருவரை ஆங்கிலேய அரசு பிடித்து வைத்துக்கொண்டது. 10 வயதான அப்துல் காலிக் சுல்தான், 8 வயதான மொய்சுதீன் சுல்தான் ஆகிய இருவரையும் ஆங்கிலேயர் பிணையாகப் பெற்றனர்.

பிணையக் கைதிகளாகக் கொண்டுசெல்லப்பட்ட திப்புவின் பிள்ளைகள் சென்னைக் கோட்டையில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு வெள்ளைக்காரர்களின் பழக்க வழக்கங்கள் கற்றுக்கொடுக்கப்பட்டன. சென்னைக் கோட்டையில் வீட்டுச்சிறை போல இரண்டு ஆண்டுகள் அவர்களை பிரிட்டிஷ் நிர்வாகம் வைத்திருந்தது. 1794 பிப்ரவரி  29-ம் தேதி, தேவனஹள்ளியில் தவணைப் பணத்தைச் செலுத்திவிட்டு திப்பு சுல்தான் தனது பிள்ளைகளை மீட்டுக்கொண்டார் என்பது வரலாறு.

காரன்வாலிஸிடம் தன் பிள்ளைகளை திப்பு ஒப்படைக்கும் ஓவியம் முன்பாக நிற்கும்போது, அந்தக் காட்சியை மனம் தானே கற்பனை செய்துகொண்டது. பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்ட இளவரசர்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? சொந்தப் பிள்ளைகளைப் பிணையாகக் கொடுத்த திப்புவின் மனநிலை எவ்வாறு இருந்திருக்கும்? மாவீரனும் கூட அவமானத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்தான் இல்லையா!

திப்பு சுல்தானின் போர்க்களக் காட்சி ஓவியத்தில், எதிரிகளை ஏமாற்ற திப்பு சுல்தான் போலவே உடைஅணிந்த நகல் உருவங்கள் களத்தில் சண்டையிட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதில் ஒரிஜினல் திப்பு சுல்தான் யார் என்பதை திப்புவின் விசுவாசிகளில் ஒருவனே காட்டிக்கொடுத்திருக்கிறான்.

திப்பு சுல்தான் வீழ்த்தப் பட்டது நம்பிக்கைத் துரோகத்தால் மட்டுமே. காட்டிக் கொடுக்கும் கயவர்கள் வரலாற்றில் எப்போதும் இருந்திருக்கிறார்கள். துரோகம்தான் உலகின் அழிக்க முடியாத ஆயுதம்.

திப்பு சுல்தான் நவீன அறிவியல் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர். இதனால்,துப்பாக்கி செய்யும் வல்லுநர்கள், வெடிமருந்து தயாரிப்பவர்களை பிரான்ஸிலிருந்து மைசூருக்கு வரவழைத்திருக்கிறார். பீரங்கிகளையும் வெடிபொருட்களையும் மைசூரிலேயே தயாரிப்பதற்கான ஆலையையும் உருவாக்கியிருக்கிறார்

ஆடம்பரமான திருமணங்களைத் தடுக்க வேண்டும் என நினைத்த திப்பு சுல்தான், ஒருவர் தனது வருமானத்தில் ஒரு சதவீதத்தை மட்டுமே திருமணத்துக்குச்செலவு செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்றைக்கு இது அவசியமாக செயல்படுத்த வேண்டிய சட்டம்.

இதுபோலவே தனது அரண்மனையில் பெரிய நூலகம் ஒன்றை திப்பு சுல்தான் உருவாக்கியிருந்தார். அதில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான அரிய நூல்கள் இடம்பெற்றிருந்தன. திப்பு சுல்தான் 1787-ம் ஆண்டு முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தியதோடு, மதுவிற்பனையில் ஈடுபட்டு வந்தவர்களுக்கு மறுவாழ்வும் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்.

ஸ்ரீரங்கப்பட்டணத்திலேதான் திப்புவின் சமாதியும் உள்ளது. கும்பாஸ் எனப்படும் அந்தச் சமாதிக்குப் போனபோது ஆட்களே இல்லை. வெயிலில் காய்ந்து கொண்டிருந்தது சமாதி. மண்ணுக்குள் போன பிறகு மன்னனும் வெறும் பெயர்தானே.

(பயணிக்கலாம்...)

வாசிக்க வேண்டிய புத்தகம்

இ.பாலகிருஷ்ண நாயுடு எழுதிய ‘டணாயக்கன் கோட்டை’  நாவல் திப்பு சுல்தானுடைய வரலாற்றை, அரசாட்சி முறையை, அவர் வீழ்த்தப்பட்ட வரலாற்றைத் துல்லியமாக விவரிக்கக்கூடியது. இந்த நாவலைத் தேடி நானும் கோணங்கியும் 80-களில் ஊர் ஊராக அலைந்தோம். கோவையிலுள்ள பழைய புத்தகக் கடை ஒன்றில் கண்டுபிடித்து வாசித்தோம். தற்போது இந்த நாவலின் புதிய பதிப்பை  ‘அம்ருதா’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது. சரித்திர நாவல்களில் ஆர்வமுள்ளவர்கள் வாசிக்க வேண்டிய புத்தகம் இது.

x