தாவோ: பாதை புதிது - 15


வெளிநாட்டிலிருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு தன் பூர்வீகக் கிராமத்துக்கு வந்த தன் சொந்தக்காரச் சிறுமி பற்றி என் நண்பன் கூறிய கதை இது.

இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டு கிராமத்தில் அந்தச் சிறுமிக்கு எல்லாமே வியப்புதான். சுவரில் பல்லி, சுருட்டுப் பிடிக்கும் தாத்தா, அவருடைய கோவணம், மாட்டு வண்டி, கொல்லையில் உள்ள மரங்கள் என்று எல்லாவற்றையும் பார்த்து வியந்துகொண்டே இருந்தாளாம். அவளுடைய வியப்பின் பட்டியலில் எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாய் வந்து சேர்ந்தது உறைமோர். மறுநாள் சாப்பாட்டுக்கு விருந்தினர்களுக்குத் தயிர் வேண்டும் என்பதால், பக்கத்து வீட்டிலிருந்து உறைமோர் வாங்கி வந்து பாலை உறைக்கு ஊற்றினார்கள். அங்கு ஆரம்பித்தது அவளின் கேள்வி கேட்கும் படலம்.

“பக்கத்து வீட்டுக்காரங்க எங்க உறைமோர் வாங்கியிருப்பாங்க?”

“நம்ம வீட்டில”

“அதுக்கு முன்னாடி?”

“அவங்க வீட்டுல?”

“அதுக்கு முன்னாடி?”

இப்படி ஆரம்பித்த கேள்விகள் அவர்கள் குடும்பத்தின் பூர்வீகம் வரைக்கும் கொண்டுபோய் விட்டன. அங்கும் நிற்காமல் பூமியில் தோன்றிய முதல் மனிதன் வரைக்கும் கொண்டுபோய் விட்டது.

“முதல் மனிதனுக்கு யார் உறைமோர் கொடுத்தார்கள்?”

அதுவரை விளையாடிப் பார்ப்போமே என்று சளைக்காமல் பதில் சொல்லிப் பார்த்த நண்பனுக்கு இங்கே மூச்சு முட்டிவிட்டது. கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்றாலும் விளையாட்டை முடித்து வைப்பதற்காக, “கடவுள் கொடுத்தார்” என்றிருக்கிறான்.

“அவருக்கு யார் கொடுத்திருப்பார்கள்?”

என்ற கேள்வியுடன் அந்தச் சிறுமியிடம் கையெடுத்துக் கும்பிட்டு விட்டுக் கிளம்பிவிட்டதாகக் கூறினான்.

குழந்தைகளிடம் பேசுவதில் பெரும் குதூகலமும் சங்கடமும் தருபவை, தர்க்கத்தை அறியாத அவர்களின் கேள்விகள்தான். நாம் முழுக்க முழுக்க தர்க்கத்தில் ஊறிப்போயிருப்பதால், அவர்களிடம் திக்குமுக்காடிப் போகிறோம். குழந்தைகளைத் தர்க்கத்தால் அல்ல, கற்பனையாலும் கதைகளாலும்தான் எதிர்கொள்ள முடியும் என்ற உண்மை நமக்கு உறைப்பதில்லை.

அறிவியல் ரீதியாக அந்தச் சிறுமிக்கு வேறு வகையில் பதில் சொல்லிவிடலாம் என்றாலும், எல்லாக் கேள்விகளும் ஒன்று தொட்டு ஒன்று என்று பிரபஞ்சத் தோற்றத்துக்கே நம்மைக் கூட்டிச் சென்றுவிடும். அங்கேயும் “அதற்கு முன் என்ன?” என்ற கேள்வி நம்மை உறைய வைத்துவிடும்.

எனக்கு இந்த உறைமோர் விவகாரத்தை தாவோவுடன் ஒப்பிடத் தோன்றுகிறது. லாவோ ட்சுவின் சிந்தனை மொழியில் சொல்வதென்றால். தாவோ என்பது எல்லாப் பாலையும் காலம் காலமாகத் தயிராக ஆக்கிய உறைமோரைப் படைத்த, அந்த உறைமோருக்கு முந்திய நிலை; முந்திய நிலை என்றால் அத்துடன் நின்றுவிடாமல் உறைமோராகவும் தயிராகவும் தொடரும் நித்தியத் தொடர்ச்சி.

பெரும்பாலான மதங்களில் இக்கணத்தையும் இக்கணத் தோற்றமான பொருட்களையும் துறந்துவிட்டுஆதிநிலையை அடைவது பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. தாவோ அவற்றிலிருந்து மாறுபடுகிறது. இக்கணத்தைப் பார்த்தல், அதில் முற்கணத்தின், முதற்கணத்தின் தொடர்ச்சியைப் பார்த்தல், முதற்கணத்துக்கும் முந்திய காலமின்மையைப் பார்த்தல் என்று அனைத்தையும் ஒருங்கே தாவோயிஸம் வலியுறுத்துகிறது. இது அறிவுபூர்வமாக அல்ல, உட்கண் என்று அழைக்கப்படும் உள்ளுணர்வின் பார்வையால்தான் சாத்தியம் என்கிறது. உட்கண்ணால் பார்ப்பதற்கு எளிய பயிற்சியாகத்தான் ‘பொருள்களின் நுண்மையை’ பார்க்க லாவோ ட்சு வலியுறுத்துகிறார்.

உட்கண், உள்ளுணர்வு போன்றவையெல்லாம் ஏதோ ஆன்மிகவாதிகளுக்கே சொந்தமானவை அல்ல. அறிவியலிலும் உள்ளுணர்வுக்குப் பிரதான இடம் இருக்கிறது. இதைப்பற்றி இயற்பியலாளர் ஃப்ரிட்ஜாஃப் காப்ரா ‘இயற்பியலில் தாவோ’ (Tao of Physics) நூலில் இப்படிக் கூறுகிறார்: “அறிவியல் ஆய்வைப் பொறுத்தவரை தர்க்க அறிவும் தர்க்கரீதியான செயல்பாடுகளும் முக்கியப் பங்கு வகித்தாலும் அவை மட்டுமே போதுமானவை அல்ல. அறிவியலாளர்களின் தர்க்கபூர்வமான ஆராய்ச்சிக்கு உள்ளுணர்வின் துணை இல்லை என்றால், அதனால் எந்தப் பயனும் இல்லை. அந்த உள்ளுணர்வுதான் அறிவியலாளர்களுக்குப் புதுப் புதுச் சிந்தனைகளைக் கொடுத்து அவர்களைக் கற்பனைவளம் மிக்கவர்களாக ஆக்குகிறது.

இந்த உள்ளுணர்வுச் சிந்தனைகள் திடீரென்று தோன்றக்கூடியவை; அறிவியலாளர்கள் தங்கள் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு மேசையில் தலைசாய்த்து மூளையைப் பிய்த்துக்கொண்டு சமன்பாடுகளுடன் போராடிக்கொண்டிருக்கும்போது தோன்றுபவை அல்ல. ஓய்வாக இருக்கும்போதோ, மரங்களடர்ந்த பகுதி, கடற்கரை போன்ற இடங்களில் நடந்து சென்று கொண்டிருக்கும்போதோ சட்டென்று தோன்றக்கூடியவை. மிகுந்த மூளை உழைப்புத் தேவைப்படும் செயல்பாடுகளுக்குப் பிறகான இதுபோன்ற ஓய்வான தருணங்களில் மனதின் உள்ளுணர்வுப் பகுதி விழித்துக்கொண்டு செயல்பட ஆரம்பித்து, திடீர் உள்ளுணர்வுச் சிந்தனைகளைக் கொட்ட ஆரம்பிக்கிறது. அறிவியல் ஆராய்ச்சிக்கு அப்படியொரு மகிழ்ச்சியையும் பரவசத்தையும் கொடுக்கக் கூடியவை இந்த உள்ளுணர்வுச் சிந்தனைகள்தான்.”

அறிவியல் மட்டுமல்ல, நம் அன்றாட வாழ்க்கையும் உள்ளுணர்வு இல்லையென்றால், ஸ்தம்பித்துப்போகும். நமக்கு நன்கு தெரிந்த பெயர்கள், தொலைபேசி எண்கள், ஆண்டுகள் போன்றவை திடீரென்று மறந்துபோகும் தருணங்கள் ஏராளம். தலையைப் போட்டுப் பிய்த்துக்கொண்டாலும் நினைவுக்கு வராது. எவ்வளவு நன்றாகத் தெரிந்த விஷயம், இப்படி நினைவுக்கு வராமல் அடம்பிடிக்கிறதே என்று மிகவும் சோர்ந்துபோய் ஒரு கட்டத்தில் நினைவுபடுத்திக்கொள்ளும் முயற்சியைக் கைவிட்டுவிட்டு வேறு வேலை பார்க்கச் செல்வோம். அப்படி வேறு வேலை பார்த்துக்கொண்டிருக்கும் தருணங்களிலோ, ஓய்வாக இருக்கும் தருணங்களிலோ சட்டென்று வானத்திலிருந்து குதித்ததுபோல் அந்தப் பெயரோ, ஆண்டோ நம் நினைவுக்கு வரும். அதுதான் உள்ளுணர்வின் சாகசம்.

எக்சுபெரி எழுதி உலகப் புகழ்பெற்ற ‘குட்டி இளவரசன்’ நூலில் ஒரு நரி அந்தக் குட்டி இளவரசனுக்கு இப்படிச் சொல்கிறது: ‘இதயத்துக்குத்தான் பார்வை உண்டு. முக்கியமானது கண்களுக்குத் தென்படாது.’ கண்களை இங்கே காரண அறிவுடன் ஒப்பிட்டால் இதயத்தை உள்ளுணர்வுடன், ஆழ்மனதுடன் ஒப்பிடலாம். காரண அறிவு ஒரு தொடர்ச்சியான பழக்கத்துக்கு அடிப்படையைக் கொடுக்கிறது என்பதால், அதனளவில் அதுவும் முக்கியமானதுதான். ஆனால், காரண அறிவுடன் எல்லாம் முடிந்துவிடாது. அறிவுக்கு உயிர் கொடுப்பது உள்ளுணர்வுதான்.

அறிவினால் குறிப்பிட்ட ஆழம் வரைதான் செல்ல முடியும். அதைவிட ஆழமாகச் செல்வது உள்ளுணர்வுதான் என்று நம்பப்படுகிறது. எல்லாவற்றின் நுண்மையையும் நாம் பார்க்க அதுதான் நமக்கு உதவுகிறது.

“உன்னுடைய காமத்தை உன்னால் நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியவில்லை என்றால், உன்னுடைய உண்மையான ஆன்மிகத்தை ஒருபோதும் உன்னால் கண்டுபிடிக்க இயலாது. உனது விண்ணக ஆன்மாவைக் கண்டறிவதற்கு உன்னை அழைத்துச் செல்வது உன்னுடைய இவ்வுலக ஆன்மாதான். உன்னைப் படைத்தது எதுவோ அதை உற்றுநோக்கினால்தான் உன்னை எது சாஸ்வதமாக ஆக்குமோ அதை உன்னால் கண்டறிய முடியும்” என்று சொல்கிறது மிக முக்கியமான தாவோயிஸ காமப் புத்தகமான ‘வெள்ளைப் பெண்புலியின் கையேடு’ (White Tigress Manual). காமத்துக்கு மட்டுமல்ல ஒவ்வொரு விஷயத்துக்கும் இது பொருந்தும். இதனால்தான் நுண்மையைப் பார்க்க முடியாதவர்களால் பிரம்மாண்டத்தையும், இக்கணத்தைப் பார்க்க முடியாதவர்களால் நித்தியத்துவத்தையும் காண முடியாது என்று தாவோயிஸமும் ஜென் பவுத்தமும் திரும்பத் திரும்பக் கூறுகின்றன.

ஆக, இனி எந்தச் சிறுமியிடம் நீங்கள் அகப்பட்டாலும் அவளிடம் முழுவதுமாகச் சரணடையுங்கள். அப்போது தெரிந்துகொள்வீர்கள், பிரபஞ்சம் தோன்றிய முதல் கணத்திலேயே உறைமோரும் தோன்றியதென்று, பிரபஞ்சமே ஒரு உறைமோர்தானென்று.

(உண்மை அழைக்கும்...)

அதிகாரம் 52

இந்தப் பிரபஞ்சத்தின் தொடக்கம்

அது வெளிப்பட்டபோது,

பிரபஞ்சத்தின் அன்னை என்று கருதப்படலாம்.

அன்னையை ஒரு மனிதன் அறிந்துகொள்ளும்போது

குழந்தைகளையும் அவன் அதையொட்டி அறிந்துகொள்கிறான்.

குழந்தைகளை அவன் அறிந்திருந்தாலும்

அன்னையை விட்டு விலகாமல் அவன் இருக்கிறான்.

இவ்வாறு, அவன் உடம்பு சிதைந்துபோகலாம் என்றாலும்

ஒருபோதும் அவன் அழியமாட்டான்.

மனிதன் தன் வாயை மூடிக்கொண்டு

தன் வாயில்களை அடைத்துக்கொண்டால்

அவன் ஒருபோதும் களைத்துப்போக முடியாது.

மனிதன் தன் வாயைத் திறந்துகொண்டு

தன் காரியங்களை அதிகரித்துக்கொண்டால்

அவனை ஒருபோதும் காப்பாற்ற முடியாது.

பொருள்களின் நுண்மையைப் பார்ப்பது

பார்வைத் தெளிவு எனப்படுகிறது.

மெலியது எதுவோ

அதை விட்டு விலகாமல் இருப்பது

திறமை எனப்படுகிறது.

எனவே, உன் விளக்கை உபயோகி;

ஆனால் பிரகாசத்தைக் குறைத்துவிடு.

இப்படிச் செய்தால், உனக்கு எந்தக் கெடுதலும்

நீ செய்துகொள்ள மாட்டாய்.

நிரந்தரத்தைப் பின்பற்றுவது என்று

இது அழைக்கப்படுகிறது.

-சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு

சீன ஞானி லாவோ ட்சு எழுதிய ‘தாவோ தே ஜிங்’ நூலிலிருந்து, தமிழில்: சி.மணி

-ஆசை

x