ரஜினி சார்... மத்தியில் சிஸ்டம் எல்லாம் சரியா இருக்கா?- கேள்விகளால் விளாசும் பிரகாஷ் ராஜ்!


ஆக, சினிமாவில் இருந்து அரசியல். இப்போது இதுதான் ‘ட்ரெண்ட்’ இல்லையா?

‘இருட்ல இருக்கேன்... எப்படிக் கவிதை எழுதுறதுன்னு கேட்க மாட்டேன். இருட்டைப் பத்தி கவிதை எழுதுவேன்’னு கவிஞர் ப்ரெட் சொன்னார். புலம்பறதால ஒண்ணும் நடந்துடாது. புது மாற்றத்தை நம்மகிட்ட இருந்துதான் தொடங்கியாகணும். வசதியான வீடு, காஸ்ட்லியான காரு, பல மொழிகளில் நடிப்பு, காதல், கவிதை, நண்பர்கள்னு ரொம்ப ஜாலியா, சுயநலமா வாழ்ந்திட்டிருந்த எனக்குக் குற்றவுணர்ச்சி வந்துச்சு பாருங்க, அங்க வந்துருச்சி பொறுப்பு. அறம்ங்கிறது வேற ஒண்ணும் இல்ல. நம்ம குற்றவுணர்ச்சிதான். ஓட்டத் தெரியாத ஒரு டிரைவர், பயணிகளை ஏத்திக்கிட்டு பஸ்ஸை நெடுஞ்சாலையில வேகமா ஓட்டிட்டுப் போற மாதிரி நம்ம ஆட்சியாளர்கள் நடந்துக்குறாங்க. ஆனா, எங்க குதிக்கணும்னு மட்டும் ஆட்சியாளர்களுக்குத் தெளிவு இருக்கு. நாமதான் பின்பாட்டு பாடிகிட்டு ‘எல்லாம் சுபிட்சமா’ இருக்குனு நினைச்சிட்டு இருக்கோம். என்னைக் கலைஞன்னு சொல்லிக்கிறேன். ஆனா, பொறுப்பா இருக்கேனாங்கிற கேள்விக்கான பதில்தான் என்னோட அரசியல் பயணம்.

உங்கள் தோழி கௌரி லங்கேஷ் மரணத்தின் வெளிப்பாடுதான் இந்தக் கோபமா?

அது மரணம் இல்லை. கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக நடந்த படுகொலை. மரணமா இருந்தா கடந்து வந்துட முடியும். கொலையைப் பார்த்துட்டு எப்படி வரமுடியும்? அதுவும் அந்தக் கொலை நம்ம வீட்ல நடக்கும்போதாவது சத்தம் போட்டாகணும் இல்லையா? என் குருநாதர் லங்கேஷ் மாதிரியே, அவரோட பொண்ணு கௌரி லங்கேஷ், துணிச்சலும் சமூக அக்கறையும் கொண்ட நேர்மையான பத்திரிகையாளர். மதவாத சக்திகளைத் துணிச்சலாக விமர்சனம் செய்ததற்காகவே கெளரியை வீட்டு வாசலில் வெச்சு சுட்டுக் கொன்னாங்க. கெளரியோட மரணத்தை என் கையில் தூக்கிச் சுமந்து சவக்குழியில் இறக்கி வெச்சிருக்கேன்.

x