உள்ள(த்)தைச் சொன்னாரா... சொன்னதைச் சொன்னாரா..?- சர்ச்சையாகிப் போன ரஜினியின் தூத்துக்குடி பேச்சு!


“உங்க கொள்கை என்ன?” என்று பத்திரிகையாளர் கேட்டபோது “தலை சுற்றிவிட்டது” என்று சொன்ன ரஜினிகாந்த், தற்போது தன்னையறியாமல் தனது கொள்கைகளைப் பகிரங்கப்படுத்திக்கொண்டே வருகிறார். தூத்துக்குடி பயணத்தின்மூலம், அரசியல் அரங்கில் மையப்புள்ளிக்கு வந்திருக்கிறார் அவர். அனைத்து அரசியல்வாதிகளும் அவரைப் பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

“புனிதமான போராட்டம் ரத்தக்கறையுடன் முடிந்துள்ளது. தீ வைத்தது சாதாரண மக்கள் கிடையாது. விஷக்கிருமிகள், சமூக விரோதிகள் உள்ளே நுழைந்திருக்கிறார்கள். தமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகரித்து விட்டனர். ஜல்லிக்கட்டின் இறுதிநாளிலும் இப்படித்தான் நடந்தது” என்ற ரஜினியின் கருத்தே விவாதத்தின் மையம். இந்தக் கருத்தை அவர் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே, “துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் இறந்திருக்கிறார்களே, முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டுமா?” எனக் கேட்டார் ஒரு நிருபர். “எல்லா விஷயத்துக்கும் முதல்வர் ராஜினாமா என்றால் சரியில்லை. அந்த அரசியலை நான் விரும்பவில்லை” என்று சிடுசிடுத்தார் ரஜினி.

“சில தினங்களுக்கு முன்பு, ‘போராடுவதற்கு பலர் இருக்கிறார்கள், அது நம் வேலையல்ல’ என்ற தொணியில் பேசியிருந்தார் ரஜினி. இப்போது வெகுமக்கள் போராட்டத்தையும் வீண் என்கிறார். போராட்டக்களத்தில் சமூக விரோதிகள் புகுந்ததாகக் குற்றச்சாட்டையும் முன்வைக்கிறார். கூடவே, முதல்வர் ராஜினாமா தேவையில்லை என்கிறார். ரஜினிகாந்த் ஒலிப்பது பாஜகவின் குரலைத்தான்” என்று குற்றம் சாட்டுகிறார்கள் திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பிற கட்சியினர். “குமரியில் மத்திய அரசு 20 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமைக்கத் திட்டமிட்டுள்ள துறைமுகத்தை எதிர்த்து மீனவர்கள் போராடி வருகின்றனர். இது மத்திய அரசுக்குப் பெரும் குடைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதையெல்லாம் மனதில் வைத்தே ரஜினி வளர்ச்சியை முன்னிறுத்திப் பேசுகிறார்” என்பதும் அவர்களது குற்றச்சாட்டு.

“ரஜினி பேசியது உண்மையே. அரசியல்வாதிகள் எந்தஇடத்தில் எதைப் பேச வேண்டும் என்று யோசித்துப் பேசுவார்கள். ஆனால், ரஜினி அரசியலுக்குப் புதிது என்பதால், தப்பான இடத்தில் உண்மையை உரக்கப் பேசிவிட்டார்” என்பது போன்ற கருத்துகளும் எழுந்து வருகின்றன. அதே சமயம், “எதற்கெடுத்தாலும் போராடிக்கொண்டே இருந்தால் தமிழகம் சுடுகாடாகிவிடும், போராட்டத்தில் புகுந்த சமூக விரோதிகள்தான் கலவரத்தைத் தூண்டினார்கள், காவல்துறையினரைத் தாக்கியவர்களை சும்மா விடக் கூடாது” என்ற அவரது பேச்சு உண்மையிலேயே அவரது உள்ளத்திலிருந்து வந்ததுதானா அல்லது யாராவது சொல்லிக்கொடுத்ததை அப்படியே கொட்டிவிட்டுப் போனாராஎன்றும் சிலர் சந்தேகம் கிளப்புகிறார்கள்.

x