இது ரஜினிக்கு முதல் பரீட்சை!


தூத்துக்குடி கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் ஆறுதல் சொல்லப்போன நடிகர் ரஜினிகாந்த், வெளியிட்ட கருத்துகள் வரிக்கு வரி விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கின்றன. ஆண்டாண்டு காலமாக தமிழக அரசியல் களத்தில் இயங்குபவர்களின் கருத்துகளைக்கூட யாரும் இவ்வளவு தீவிரமாய் விமர்சிக்கவில்லை!

முழுநேர அரசியல்வாதிகளின் கருத்துகளைவிட பகுதிநேர அரசியல்வாதியாக கட்சியின் கட்டுமான வேலையில் இருக்கும் ரஜினியின் பேச்சு இத்தனை முக்கியத்துவம் பெறுவது கூர்ந்து கவனிக்கத்தக்கது.

ரஜினி பேசினாலும் சர்ச்சை; பேசாவிட்டாலும் பிரச்சினை என்றாகிவிட்ட நிலையில். வெளிவர இருக்கும் அவரது ‘காலா’ திரைப்படத்தில் போராட்டம், வன்முறை, காவல் துறையின் கண்ணியம் குறித்தெல்லாம் என்ன சொல்லியிருக்கிறார் என்பதும் இனி சர்ச்சைக்கு உள்ளாகும். அடியெடுத்து வைத்ததுமே அரசியலில் ஜெயித்த எம்.ஜி.ஆர். திரையில் ஒரு வீச்சு; நேரிலும் அதே பேச்சு என்று இருந்தார். அதனால் தான் மக்களின் முதல்வரானார். ரஜினி இதிலிருந்து மாறுபடுவாரேயானால், அது அவரது பொதுவாழ்க்கைப் பயணத்தை நிச்சயம் பாதிக்கும். வசூலுக்காக ரசிகர்களை உசுப்பிவிடுவது, அரசியல் அரங்கில் சாந்தமுகம் காட்டுவது என ரஜினி இனி இரட்டை வேடம் போடக் கூடாது.

சட்டத்தைக் கையிலெடுத்துக்கொண்டு நட்டநடு ரோட்டில் காவல் அதிகாரியை விரட்டிச் சென்று கையை வெட்டுவதெல்லாம் நடிப்போடு நிற்பவர்களுக்கு மட்டுமே சரிவரலாம். ஊருக்கு உபதேசம் செய்வது மட்டுமல்ல... சேவையும் செய்பவரே உண்மையான அரசியல்வாதியாக இருக்க முடியும். ரஜினியும் இதைப் புரிந்துகொண்டு நடக்க வேண்டும்.

x