ஸ்ரீரஞ்சனி ஜூனியர்- கனவுலகின் கண்ணீர் துளி!


அன்றைய பண்டரிபாய் – மைனாவதி தொடங்கி இன்றைய சாய் பல்லவி – பூஜா வரை, திரையில் தோன்றிய சகோதரிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆனால், அக்காவின் பெயரிலேயே நடிக்க வந்த தங்கை ஸ்ரீரஞ்சனி ஜூனியர் மட்டும்தான்!

சினிமாவில் அக்கா பெறமுடியாமல்போன அங்கீகாரத்தைத் தனது திறமையான நடிப்பால் தக்கவைத்துக் கொண்டவர் ஸ்ரீரஞ்சனி ஜூனியர். ஆனால், தனக்குக் கிடைக்காத வெற்றிக்கனியைத் தங்கை பறித்துக் கொண்டு வந்தபோது, அதைக் கொண்டாட அந்த அக்கா ஸ்ரீரஞ்சனி உயிருடன் இல்லை. புற்றுநோய் அவரைப் பறித்துக்கொண்டு போய்விட்டது.

தெலுங்கு சினிமாவில் சீதை கதாபாத்திரத்தை முதன்முதலாக ஏற்று நடித்தவர் ஸ்ரீரஞ்சனி (1906 - 39). கிராமபோன் ரெக்கார்டுகள் புகழ்பெற்றுவிட்ட 1920-களில் ஆந்திரா முழுவதும் ஒலித்தது இவரின் இனிமையான குரல். நாடக மேடையிலிருந்து திரைக்கு வந்த இந்த இசைக்குயில் நடிகை, எட்டுப் படங்களில் நடித்தார். அதில் ஒன்று சி.புல்லையா இயக்கிய ‘லவகுசா’ (1934). இதில்தான் தெலுங்கு சினிமாவில் சித்தரிக்கப்பட்ட முதல் சீதை வேடத்தை ஏற்றார். ஆனால், அடுத்த சில ஆண்டுகளில் புற்றுநோயுடன் போராடி, 1939-ல் ஆகால மரணம் அடைந்தார் ஸ்ரீரஞ்சனி. அப்போது அவரது தங்கை மகாலட்சுமிக்கு 16 வயது!

அக்காவின் குழந்தைகளைக் கவனிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், சிற்றன்னையாகப் புகுந்தவீட்டில் அடியெடுத்து வைத்தார் மகாலட்சுமி. ஸ்ரீரஞ்சனி உயிருடன் இருந்தபோது சின்னஞ்சிறுமியாகப் படப்பிடிப்புகளுக்கும் நாடக மேடை களுக்கும் வந்துகொண்டிருந்த இவரது அழகையும் திறமையையும் கலையுலகம் மறக்காமல் நினைவில் வைத்திருந்தது. அக்காளின் கணவர், ‘உனது திறமையைஅடுக்களையில் ஒளித்துவைத்துவிடாதே’ என்று சுதந்திரச் சிறகுகளை வழங்க, துள்ளியெழுந்தார் மகாலட்சுமி.‘பீஸ்மா’ என்ற பிரம்மாண்டத் தெலுங்குப்புராணப் படத்தில் சிறுவேடம் ஏற்று திரைக்கு அறிமுகமானார்.

x