செரங்குவத்தி
துந்நூறு இல்லாமச் சேர்மக்கனியப் பாக்கவே ஏலாது. காது ஓரத்துல தேங்காய் எண்ணெய் மினுமினுங்க, ரெண்டு தேங்காச் சில்லுகள அதக்கி வச்சுக்கிட்டுப் பள்ளியோடத்துக்கு மொத ஆளா வந்துருவாப்ல. வகுப்பறை எல்லாத்துலயும் கலர் சாப்பீஸ் வச்சு ரோசாப்பூ வரைஞ்சு, ‘கலை வணக்கம்’னு எழுதறது அவனோட வேலை. சேர்மாக்கு தொணக்காலே போட வராது. தமிழ் வாத்தியாரு முத்தையா அதுக்காக அவன முட்டிலயே அடிச்சாலும், “சாரு, வலிக்கி, வலிக்கி”ம்பானே யொழிய, “கடலைப் பர்க்கச் சென்றன்”னுதா எழுதுவாப்ல.
சேர்மாவின் அப்பா தனிக்கொடி செக்கெண்ணெய்க் கடைக்காரர். பள்ளியோடம் விட்டவுடனேயே செக்குல ஆட்டுன எண்ணெய வூடுகளுக்குக் கொண்டுபோய்க் கொடுக்குறது சேர்மாவின் வேல. எந்தத் தூக்குவாளி யார் வூட்டுக்கு, எண்ணெய் எத்தன வீசம்படினு ‘கரீட்டா’ கணக்கு வச்சுருப்பான். இங்கிலீஸூல சேர்மாக்குப் புடிச்ச வார்த்தக ‘கரீட்டு’ம் ‘ராஸ்கோலு’ம். எதுக்கெடுத்தாலும் இந்த வார்த்தகளச் சொல்லித்தா குதிப்பாப்ல, வைவாப்ல. ரவைக்குக் கஞ்சிக்கு ரெண்டு தேங்காச்சில்லுகள தொட்டுக்குவான். போற வூடுகள்ல ஒக்காந்து “ரெண்டு சில்லு கொடுக்கா''ன்னு வாங்கித் திங்காமப் போமாட்டாப்ல.
சேர்மாக்கு சவ்வுமிட்டாய் காச்சவும், அதுல வெதவெதமாப் பொம்மைக, வாட்சுக செய்யவும் தெரியும். லீவு வுட்டாச்சுன்னா, டவுனுக்குப் போய்க் கருணாகரன்அண்ணாச்சிக் கடைல கலர்ப்பொடி வாங்கியாந்துருவான். யாரையும் அண்டவுடாமக் காச்சுவான்னாலும், என்னிய மட்டும் கூட்டு சேத்துக்குவாப்ல. “சன்னமான இலுப்பச் சட்டிதா லாயக்கு ‘போண்டா’. தீயக் கொறச்சுக் கிண்டனும்”னு பக்குவஞ் சொல்லிக்கிட்டே மிட்டாய்ப் பாகைக் காச்சுவான். என்னிய ‘போண்டா’னுதா பட்டப்பேரு வச்சுக் கூப்புடுவான்.