வரலாற்றுப் புகழ்மிக்க இடங்களைத் தேடிக் காண வேண்டும், அங்குள்ள சிறப்பம்சங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்பதில் நாம் அக்கறை காட்டுவதேயில்லை. ஆண்டுதோறும் கோடையில் ஊட்டி, கொடைக்கானலுக்குச் செல்லும் கூட்டம் அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. ஆனால், இவர்களில் ஒரு சதவீதம் கூட ஹரப்பா நாகரிகச் சான்றான லோத்தலையோ, நாளந்தா பல்கலைக்கழகத்தையோ, ஜாலியன் வாலாபாக் பகுதியையோ கண்டவர்களில்லை.
இவ்வளவு ஏன்... தமிழகத்தின் பேரழகுமிக்க கலைக்கூடங்களாக தாராசுரம், பட்டீஸ்வரம், திருபுவனம், கங்கைகொண்ட சோழபுரம், கிருஷ்ணாபுரம் போன்ற இடங்களுக்குப் போய்வருகிறவர்களும் குறைவே. கலை ரசனை குறித்து பள்ளியிலே தனிக்கவனமும் அறிமுகமும் துவங்கப்பட வேண்டும். இது போலவே கல்வி நிலையங்கள் மாநிலத்திலுள்ள முக்கிய வரலாற்றுச் சின்னங்களுக்கும் மாணவர்களை அழைத்துப் போக வேண்டும்.
எனது பள்ளி நாட்களில் இந்தியா முழுவதுமே பல இடங்களுக்குப் பயணம் அழைத்துப் போனார்கள். இன்று பெரும்பான்மை பள்ளிகள், வகுப்பறைக்கு வெளியே மாணவர்களுக்கு எதையும் அறிமுகம் செய்வதில்லை. பெற்றோர்களுக்கும் இதில் ஆர்வம் இருப்பதில்லை.
இவற்றை ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்க் கேள்வி கேட்கிறார்கள். நம் நிலத்தின், இனத்தின், மொழியின் வரலாற்றைத்தெரிந்து கொள்ளாமல் இருப்பது அவமானமில்லையா? ஒரு தலைமுறையே இப்படித் தங்கள் வரலாற்றைத் தெரிந்து கொள்ளாமல் விலக்கப்பட்டு வருவது வேதனையளிக்கிறது.
ஒடிசா மாநிலம் அதன் வரலாற்றுப் பெருமைமிக்க இடங்கள், தொல்லியல் களங்கள், இயற்கை வாழிடங்கள் யாவையும் உள்ளடக்கி ஒரு கல்ச்சுரல் அட்லஸ் வெளியிட்டுள்ளது. இதைக் கையில் வைத்துக் கொண்டால், அந்த மாநிலத்தில் எந்த இடத்தில் என்ன சரித்திரச் சான்றுகள், தொல்லியல் களங்கள் உள்ளன என்பதை எளிதாகக் கண்டறியமுடியும். தமிழகத்தில் இதுபோன்ற கல்ச்சுரல் அட்லஸ் எதுவும் தயாரிக்கப்படவில்லை. முதன்மையாக நாம் மேற்கொள்ள வேண்டிய பணியிது.
தமிழகத்தின் வரலாற்றைத் தமிழ்நாட்டிற்குள்ளாகவே பெரிதும் ஆய்வு செய்திருக்கிறார்கள். ஆனால், இமயம் வரை தமிழகத்தின் வேர்கள் படர்ந்துள்ளன. ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் தமிழ்ப் பெயரில் ஊர்கள் உள்ளதாக, சிந்து சமவெளி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் குறிப்பிடுகிறார். தமிழகத்திற்கு வெளியே தமிழ் மொழி, இனம் குறித்த கல்வெட்டுகள், சான்றுகள் எங்கெல்லாம் உள்ளன என்பது முழுமையாகத் தொகுக்கப்பட வேண்டும்.
ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வருக்கு அருகிலுள்ள உதயகிரியில் காணப்படும் ஹத்திகும்பா கல்வெட்டு, தமிழகத்தின் மூவேந்தர்களும் ஒருங்கிணைந்து கூட்டணியாகச் செயல்பட்டதை குறிக்கிறது. இதைக் காண்பதற்காக ஒடிசா சென்றிருந்தேன். தமிழகத்தைப் போலவே பண்பாட்டு சிறப்பு பெற்றது ஒடிசா. முன்னாளில் கலிங்கம் என அழைக்கப்பட்டது. தமிழக வணிகர்கள் கலிங்கத்திற்குச் சென்று வணிகம் செய்திருக்கிறார்கள். இது போலவே கலிங்கத்துப் பட்டு, தமிழகத்தில் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. கலிங்கம் என்ற சொல்லே ஆடையைத்தான் குறிக்கிறது. மகாபாரதத்தில் கலிங்க நாடு குறித்துப் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலம் முழுவதுமே இயற்கையோடு இணைந்த வாழ்க்கையே பிரதானமாகவுள்ளது. புவனேஸ் வரம் தன் பழமையை அப்படியே தக்கவைத்துள்ளது. சென்னை போன்ற பெருநகரவாசிகளுக்கு எல்லாவற் றிலும் அவசரம். சாப்பிடப்போனால்கூட ஐந்து நிமிடம் காத்திருக்க மாட்டார்கள். வேகம். அதிவேகம். வேகமோ வேகம்தான் தமிழக வாழ்க்கை. எல்லா நோய் களுக்கும் இதுவே ஆதார காரணம். ஆனால், ஒடிசா சென்றவுடன் நாம் காண்பது எங்கும் நிதானம்! மக்கள் எதற்காகவும் பரபரப்பாக ஓடுவதில்லை. நிதானமாகச் செயல்படுகிறார்கள்.
புவனேஸ்வரில் காலை உணவிற்காக ஒரு உணவகத்திற்குச் சென்றிருந்தேன். காலை நேரம்... கூட்டமேயில்லை! சென்னையில் காலை எட்டு மணிக்கு எந்த உணவகத்திற்குச் சென்றாலும் பரபரப்பு, அவசரத்தையே கண்டு பழகிய எனக்கு இங்கே சாவகாசமாக சர்வர் வந்து நின்று ஆர்டர் எடுத்து பதினைந்து நிமிசங்களுக்குப் பிறகு உணவு கொண்டு வந்து சாப்பிட்டது ஆசுவாசமாகயிருந்தது.
ஒடிசா மாநில மக்களும் அரிசி உணவினை முதன்மையாக எடுத்துக் கொள்பவர்கள். அதுவும் கோராபுட் மாவட்டம்தான் இந்தியாவில் அரிசி முதல் முறையாக விளைந்த மாநிலம் என்கிறார்கள். நெல் ஆராய்ச்சி மையம் கட்டக்கில் தானிருக்கிறது. மிகச் சிறந்த நெல் ரகங்கள் இங்கே விளைகின்றன. சுடு சோறும், நெய்யும், பருப்பும், இனிப்பு வகைகளுமே இவர்களின் விருப்பமான உணவுகள்.
சென்னை போன்ற மாநகரம் உறங்குவதேயில்லை. காலை ஆறுமணிக்கே கொதிப்பின் உச்சநிலையை அடைந்துவிடுகிறது. ஆனால், ரம்மியமான காற்றும் நீலவானமும், இளம்குளிருமாக புவனேஸ்வர் மெதுவாகத்தான் கண் விழிக்கிறது. கடைகள் யாவும் பத்துமணிக்குப் பிறகே துவங்குகின்றன. அதிக வாகன நெருக்கடிகள் இல்லை.
எந்த ஊருக்குச் சென்றாலும் அங்கு மக்கள் கூடுகின்ற இடங்களை அவசியம் பார்த்துவிடுவேன். அதுவே உண்மையான வாழ்க்கையை எடுத்துக்காட்டுவதாகயிருக்கும். அதிலும் குறிப்பாகக் காய்கறிச் சந்தைகள், பழக்கடைகள், புத்தகக் கடைகளுக்கு அவசியம் போய்வருவேன். காரணம்... விதம் விதமான மனிதர்களை அங்கு ஒரே இடத்தில் பார்க்கலாம். என்னவிதமான காய்கறிகள் விளைகின்றன. அதை என்ன விலையில் விற்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும். தமிழகத்தோடு ஒப்பிட்டால், ஒடிசாவில் காய்கறிகளின் விலை மிகவும் மலிவு. சிறுவணிகர்கள் ஏமாற்றிச் சம்பாதிக்க வேண்டியதில்லை என்ற அறத்தோடு செயல் படுகிறார்கள்.
உதயகிரியைக் காண்பதற்காகச் சென்றோம். தொலைவில் சூரிய வெளிச்சத்தில் உதயகிரி ஒளிர்ந்து கொண்டிருந்தது. வரலாற்றுப் பிரசித்தமான இடங்களுக்குப் போவதற்கு முன்பு அதை பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டு போவது நல்லது. அப்போதுதான் எதைக் காண வேண்டும். எவ்வளவு நேரம் அதற்குச் செலவிட வேண்டும் என்பது புரியும். தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இடம் என்பதால், சிறப்பா கப் பராமரிக்கப்பட்டு வருகிறது உதயகிரி.
உதயகிரி, கந்தகிரி குகைகள் தொல்லியல் மற்றும் சமண வரலாற்றில் மிகவும் முக்கிய மான இடமாகும். கலிங்கத்தை ஆண்ட மன்னர் காரவேலன் காலத்தில் இக்குகைகளில் சமண,பவுத்தத் துறவிகள் தங்கியிருந்திருக்கிறார்கள். உதயகிரி அருகில் லலித்கிரி எனும்பவுத்த தொல்லியல் களம் உள்ளது.
காரவேலன் சமண மதத்தைப் பின்பற்றிய வன். கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கலிங்க தேசத்தை ஆண்டவன். புகழ்பெற்ற இவனது ஆட்சியின் போது தான், வடக்கத்திய படையெடுப்புகளைத் தடுக்க மூன்று தமிழ் அரசர்களும் வைத்திருந்த கூட்டணியை முறியடித்ததாக இக்கல்வெட்டில் பொறித்திருக்கிறான்.
ஹத்தி கும்பா கல்வெட்டு 17 வரிகளைக் கொண்ட முக்கியமான வரலாற்று சாசனமாகும். இதில் தமிழகம் தொடர்பான இரண்டு முக்கியக் குறிப்புகள் உள்ளன. ஒன்று... சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் கூட்டணியை வென்றதாக காரவேலர் கூறுவது. மற்றது பாண்டிய மன்னர் அளித்த பரிசுகள் பற்றியது.
113 ஆண்டுகளாக நீடித்த த்ரமிள தேசத்து மன்னர்களின் கூட்டணியை, தான் வென்றேன் எனக் காரவேலர் சொல்கிறார். வடவர்களை எதிர்த்துப் போரிட தமிழக மன்னர்கள் கூட்டணி அமைந்திருந்தார்கள் என்பதன் சாட்சியமிது. மூன்று தமிழ் மன்னர்களும் ஒன்று சேர்ந்து போரிட்டிருக்கிறார்கள். அவர்களுக்குள் வடவர் களை எதிர்ப்பதில் ஒற்றுமையிருந்திருக்கிறது என்பதையே இக் கல்வெட்டு சுட்டிக்காட்டுகிறது. இதைக் காணும்போது வடவர்களின் ஆதிக்கத்தை எதிர்ப்பதில், இன்று அதுபோல ஒற்றுமையும் கூட்டணியும் ஆட்சியாளர்களிடம் இல்லையே என வருத்தமாக இருந்தது.
பாண்டிய மன்னரிடமிருந்து முத்துக்களையும், மாணிக்கம், ரத்தினம் உள்ளிட்ட அரிய வகை கற்களையும், யானைகள், குதிரைகள் உள்ளிட்ட பரிசுகளையும் பெற்று தன் அரண்மனையைக் கார வேலர் அலங்கரித்தார் என்கிறது இக் கல்வெட்டு. இதன் மூலம் பாண்டிய நாட்டின் செல்வச் செழிப்பை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
உதயகிரியைக் காண்பதற்காக நிறைய சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அவர்களின் ஒரே நோக்கம் புகைப்படம் எடுப்பது மட்டுமே என்பதுதான் வேதனை. உதயகிரி குடை வரைகளில் ஒன்றிரண்டில் மட்டுமே சிற்பங்கள் காணப்படு கின்றன. குடைவரைகளின் அலங்கார வளைவுகள் சிறப்பாகச் செதுக்கப்பட்டுள்ளன. உதயகிரியில் உச்சியில் ஒரு சமணக் கோயில் உள்ளது. அங்கே சலவைக் கல்லில் செதுக்கப்பட்ட பார்சுவநாதர் சிற்பம் காணப்படுகிறது.
கந்தகிரி குகைகள் சாதவாகன மன்னர்களால் சமணத் துறவிகளுக்கு அளிக்கப்பட்டவை. எட்டு அடுக்குகளாக இருந்த இக்குகைகள் பூகம்பத்தால் சிதறுண்டிருக்கின்றன. இப்போது மீதமிருப்பது மூன்றடுக்குகளே! இந்த குகைகளில் வசீகரமான உடலமைப்பு கொண்ட யவன வீரனின் சிற்பம் காணப்படுகிறது. கலிங்கத்திற்கு ஒரு காலத்தில் யவனர்களுடன் இருந்த வணிகத்தொடர்பால் யவன வீரர்கள் இங்கே வந்து பணியாற்றினார்கள்.
ஹத்தி கும்பா கல்வெட்டு பிராமியில் எழுதப்பட்டிருக்கிறது. இதன் முன்பாக நின்றபோது அந்த எழுத்துகளை வாசிக்க முடியவில்லை. ஆங்கில பிரதியாக்கத்தை வைத்துக் கொண்டு வரி வரியாகப் பார்த்தேன். நெகிழ்ச்சியாக இருந்தது. மொழிதான் சரித்திரத்தின் அழியாச் சான்றாக இருக்கிறது.
காலம் வரலாற்றின் புகழ்பெற்ற மன்னர்களை அடையாள மற்று செய்துவிட்டது. ஆனால், கற்கள் இன்றும் அவர்கள் புகழ்பாடிக் கொண்டேயிருக்கின்றன. கல்லின் மௌனம் காலத்தால் வெல்லமுடியாதது போலும்!
(பயணிக்கலாம்...)