தாவோ: பாதை புதிது - 14


இரண்டாம் உலகப் போரின்போது நடந்த சம்பவம் என்று எங்கோ படித்தது. எதிரி ராணுவத்தைச் சேர்ந்தவர்களால் ஒருவன் துரத்தப்படுகிறான். தலை தெறிக்க ஓடிவருபவன் சாலையோரத்தில் ஒரு சைக் கிள் கிடப்பதைப் பார்த்து அதை எடுத்துக்கொண்டு வேகவேகமாக மிதிக்கிறான். வெகு தூரம் சென்று விடுகிறான். எதிரிகளிடம் தப்பியாயிற்று என்பதை அவன் உணர்கிறான். அப்போதுதான், தனக்கு சைக்கிள் ஓட்டவே தெரியாது என்ற உண்மை அவனுக்கு உறைக்கிறது. இந்த உணர்வு தோன்றியவுடன் தொப்பென்று விழுந்துவிடுகிறான். மறுபடியும் சைக்கிளை எடுத்து ஓட்ட முயல்கிறான், முடியவில்லை.

நம்மில் பலருக்கும் நீச்சல் தெரியாது. நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் என்றால், நீச்சலுக்கும் நமக்கும் இடையே உள்ள இடைவெளி குறைய வேண்டும். அந்த இடைவெளி என்ன? அச்சம்! அறிவுதான் அந்த அச்சத்தை உருவாக்குகிறது. நீரைப் பற்றியும் ஆழத்தைப் பற்றியும் மரணத்தைப் பற்றியும் நாம் அறிந்தவற்றால் ஆனது அந்த அச்சம். மேலும், நமக்கு நீச்சல் தெரியாது என்ற அறிவும் சேர்ந்துகொள்கிறது. இப்படி, நாம் அறிந்தவற்றை ஒவ்வொன்றாக அகற்றுவதன் மூலமே நீச்சலை நாம் நெருங்குகிறோம். அகற்றுவதென்பது வெறுமனே அறிந்துகொள்வதன் மூலம் அல்ல. நீருக்குள் இறங்குவதன் மூலமே.

அதனால்தான் ஒரு குழந்தையை நீரில் தூக்கிப்போட்டால், நம்மைவிட விரைவில் அது நீந்துகிறது. அதுவும் தொடக்கத்தில் அழலாம். அந்நியமான எந்த ஒன்றையும் கண்டால் ஏற்படும் இயல்பான அழுகை அது. ஆனால், விரைவில் அந்தக் குழந்தை நீச்சலைக் கற்றுக்கொள்கிறது. ஏனென்றால், அதன் மனது நீச்சல் குறித்த எந்தத் தகவலாலும் நிரம்பியிருக்கவில்லை. மேலும், சில காலத்துக்கு முன்புவரை தாயின் கருப்பைக்குள் திரவத்துக்குள் மிதந்துகொண்டிருந்தது. ஆகவே, நீச்சலைக் கற்றுக்கொள்கிறது என்று சொல்வதற்குப் பதிலாகத் தனக்குள் உள்ள நீச்சலை அது மறுபடியும் கண்டடைகிறது என்று சொல்லலாம்.

நமக்கு நீச்சல் தெரியவில்லை என்று சொல்வதைவிட நமக்கு நீச்சல் தெரியும் என்பது நமக்குத் தெரியவில்லை என்பதுதான் உண்மை. கிட்டத்தட்ட நாம் கற்றுக்கொள்ளும் எல்லாமே நமக்குள் இருக்கும் ஒரு விஷயத்தைக் கண்டடைவதற்காகத்தான். அதற்கான தடையாக நமக்கு இருப்பது அனுபவமாக மாறாத அறிவு.

நாம் பிறக்கும்போது எண்ணற்ற சாத்தியங்களுடன் பிறக்கிறோம். சைக்கிளோ காரோ கணிப்பொறியோ கண்டுபிடிக்காத காலத்திலும்கூட மனிதர்கள் அவற்றை இயக்குவதற்கான சாத்தியங்களுடன்தான் பிறந்தார்கள். இந்தக் கருவிகள் கண்டுபிடிக்கப் பட்ட பிறகு உருவானவையல்ல இந்தச் சாத்தியங்கள். சாத்தியம் என்பது வடிவம் கொண்ட, திடமான ஒன்றும் அல்ல. வெற்று வெளியைப் போன்றது. அந்தச் சாத்தியத்தை நாம் அறிவைக் கொண்டு நிரப்பும்போது அதிலிருந்து விலகிச்செல்கிறோம் என்று சொல்கிறது தாவோ. சாத்தியத்துக்கும் நமக்கும் இடையில் இருக்கும் அறிவை ஒவ்வொரு கல்லாகத் தூக்கியெறியும்போது சாத்தியமும் நம் செயலும் ஒன்றாகின்றன என்கிறது தாவோ. அறிவு என்பது வளர்வதை வலியுறுத்துகிறது; தாவோ, தேய்வதை வலியுறுத்துகிறது. தேய்வது என்றால் நமக்கு இடையூறாக இருப்பதும், அனுபவமாக மாறாததுமான அறிவு தேய்வது.

தாவோ அறிவு மறுப்புவாதம் என்பதுபோல் பலருக்கும் தோன்றக்கூடும். அது உண்மையல்ல. அனுபவமாக மாறாத அறிவையே தாவோ மறுக்கிறது. அறிதல் என்பது இயல்பறிவின் நீட்சியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

நம்மைப் பெரிதும் ஆக்கிரமித்திருப்பது பயன்படாத, அனுபவமாக மாறாத அறிவே. இந்த அறிவு, ஒரு புத்தகத்தின் ஒரு வரியையும் அடுத்த வரியையும் நாம் வாசிப்பதற்கு இடையே இந்த எத்தனையோ யோசனைகளை நம்மில் ஏற்படுத்துகிறது. ஒரு இணையதளத்தைப் பார்ப்பதற்குள் அங்கிருந்து இன்னொன்று, அங்கிருந்து இன்னொன்று என்று இழுத்துக்கொண்டே போகிறது. காற்று வேகத்தைவிட மனோவேகம் விரைவானது என்று சொல்வது இதனால்தான். கடைசியில் நாம் செய்தது, கற்றுக்கொண்டது என்ன வென்று பார்த்தால், வெகு சொற்பமாகத்தான் இருக்கும். எந்தவொரு செயலில் முழு மூச்சிலும் ஈடுபடுவதற்கு இதனால்தான் கவனக் குவிப்பு மிகவும் இன்றியமையாததாக ஆகிறது. நம் கவனத்தை நாலாபக்கமும் பிடித்து இழுத்துக்கொண்டிருக்கும் அறிவை, அது நம் மனதில் போட்ட குப்பைகளை விலக்கிவிட்டு செயலில் மனதை ஈடுபடுத்துவதற்குள் போதும்போதுமென்று ஆகிவிடுகிறது. விளைவாக, சென்னையிலிருந்து ஊட்டிக்குச் செல்ல வேண்டிய நாம் காஷ்மீர், பீஜிங், மாஸ்கோ, பெர்லின், லண்டன், நியூயார்க், ஏன் நிலா போன்றவற்றின் வழியாகக்கூட போகிறோம். கோயம்புத்தூர் வழியாகச் செல்வதே இல்லை!

ஊட்டிக்கு கோயம்புத்தூர் வழியாக...

மலையளவு செயலை முதலீடு செய்து தினையளவு லாபத்தை நாம் ஈட்டிக்கொண்டிருக்கிறோம். தினையளவு செயலை முதலீடு செய்து மலையளவு லாபத்தைப் பற்றிக் கற்பனை செய்து பாருங்கள்! அதுதான் தாவோ கூறும் செயல்படாமை.

செயல்படாமை என்பது செயலிலேயே ஈடுபடாமல் சோம்பேறியாக இருப்பது என்று பொருளல்ல. சென்னையிலிருந்து ஊட்டிக்கு மாஸ்கோ வழியாக இல்லாமல் கோயம்புத்தூர் வழியாகச் செல்வதென்று பொருள். நாம் எல்லோரும் செயலின் மையத்தை அணுகாமல் அதைச் சுற்றிவளைத்து அணுகிக்கொண்டிருக்கிறோம். அதனால்தான் எந்தவொரு செயலையும் செய்து முடிப்பதற்குள் அவ்வளவு சக்தி நம்மிடமிருந்து உறிஞ்சப்படுகிறது. செயல்படாமை என்பது மிகக் குறைந்த அளவு சக்தியைச் செலவிட்டு, சாத்தியமாகும் இயல்பான, நியாயமான குறுக்குவழியில் செயலின் மையத்தை அடைவது என்று பொருள்.

கல்லடுக்கும் தியானம்

செயலின் மையம் என்பது என்ன? பாண்ட்டஸ் ஜேன்ஸன் மிகவும் வித்தியாசமான கலைஞர். சுவீடனின் ஏலாண்ட் தீவில் வசிக்கும் இளைஞர். கற்களை அடுக்கிவைத்தல்தான் இவரது கலை. எந்தவித ஒழுங்கான வடிவத்திலும் இல்லாத கூழாங்கற்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கிவைக்கும் கலை. சொல்வதற்கு மிகவும் எளிதாக இருக்கும், செய்துபார்த்தால்தான் தெரியும்.

பல வடிவங்களிலும் இருக்கும் கற்களை ஜேன்ஸன் பல விதங்களிலும் அடுக்கிவைப்பார். அவர் சொன்னதைக்கேட்டுக் கற்கள் நிற்கும். புவியீர்ப்பு விசையைவிட வேறெந்தப் பிடிமானமும் அவற்றுக்குக் கிடையாது.

ஒவ்வொரு கல்லும் ஒவ்வொரு கோணத்திலும் ஒரு புவியீர்ப்பு மையத்தைக் கொண்டிருக்கும். அந்த மையத்தைக் கண்டறிந்துவிட்டால் பசையில்லாமலே ஒவ்வொரு கல்லும் மற்ற கற்களுடன் ஒட்டிக்கொள்ளும். கற்களைச் சும்மா ஒன்றின் மேல் ஒன்று என்று நிறுத்துவதோடு நின்றுவிடாமல், அதில் ஒரு வடிவத்தையும் ஜேன்ஸன் கொண்டுவருகிறார். அதுதான் மிகவும் கடினமானது. ஒவ்வொரு கல்லடுக்கையும் உருவாக்க ஜேன்ஸன் அதிகபட்சம் 5 மணி நேரம் எடுத்துக்கொள்கிறார். இந்த ஐந்து மணி நேரமும் அவருக்கு ஒரு வகையில் தியானம்தான். நமக்குப் பல நாட்களும் மாதங்களும் ஆகலாம். அவரது கல்லடுக்குக் கலையின் வீடியோக்களும் படங்களும் இணையத்தில் சந்தடியைச் சற்று சாந்தமாக்கும் வகையில் பரவிக்கொண்டிருக்கின்றன. அவற்றைப் பார்ப்பதே நமக்கு ஒருவகையில் தியானம்தான். (வீடியோ: https://goo.gl/14e4GP, படங்கள்: https://goo.gl/sGKhTy).

புவியின் ஈர்ப்புவிசையோடு முதல் கல்லைப் பேச விடுகிறார் ஜேன்ஸன். அடுத்த கல்லை வைக்கும் போது நாம் நினைப்போம், புவி, முதல் கல் ஆகிய இரண்டின் ஈர்ப்பு மையத்தையும் இரண்டாவது கல்லுடன் இணைக்க வேண்டும் என்று. அப்படியில்லை. முதல் கல்லை ஈர்ப்பு மையத்துடன் இணைத்துவிட்ட பிறகு அங்கே ஒரே ஈர்ப்புமையம்தான். உச்சியில் அடுக்கும் கல் வரை ஒரே ஈர்ப்பு மையம்தான். புவிக்கும் ஒவ்வொன்றாக அடுக்கப்படும் அந்தக் கற்களுக்கும் அதை அடுக்குபவரின் மனதுக்கும் ஒரே ஈர்ப்பு மையம்தான். இதில் மிகமிக நுணுக்கமான விலகல் இருந்தாலும், அங்கே அந்தக் கற்கள் நிற்க வாய்ப்பில்லை. அசாத்தியமான வேலைகளை எப்படிச் செய்ய வேண்டும் என்பதைத் தனது கலையின் மூலம் ஜேன்ஸன் நமக்குக் கற்றுத்தருகிறார். ‘உங்கள் செயலின் மையத்தையும் உங்கள் மனதின் மையத்தையும் இணைக்கும்போது செயலும் நீங்களும் ஒன்றாவீர்கள். அப்போது அங்கே நிற்பது உங்கள் செயல் மட்டுமல்ல, உங்கள் மனதும் கூட. செயல் வடிவில் உங்கள் மனது அழகாக நிற்கிறது’ என்று ஜேன்ஸனின் கல்லடுக்குகள் நமக்குச் சொல்லாமல் சொல்கின்றன.

செயலின் மையத்தைக் கண்டறிவதுதான் செயல்படாமை. அதனை மேற்கொண்டால் நம்மால் செய்ய முடியாததென்று ஏதுமில்லை என்கிறது தாவோ.

(உண்மை அழைக்கும்...)

-ஆசை

அதிகாரம் 48

புலமையை நாடிச் செல்கிற மனிதன்

நாள்தோறும் வளர்வான்;

தாவோவை நாடிச் செல்கிற மனிதன்

நாள்தோறும் தேய்வான்.

தேய்வான், தொடர்ந்து தேய்வான்,

செயல்படாமையை அடைகிறவரையும்.

எல்லாவற்றையும் செய்ய முடியும்

செயல்படாமையினால்.

- சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன் சீன ஞானி லாவோ ட்சு எழுதிய ‘தாவோ தே ஜிங்’ நூலிலிருந்து; தமிழில்: சி.மணி

x