பிடித்தவை 10- கவிஞர் மீ.உமாமகேஸ்வரி


கோவையைச் சேர்ந்த கவிஞர் மீ.உமா மகேஸ்வரி, ‘சுட்டும் விழிச்சுடர்’, ‘எல்லோருக்கும் உண்டு புனைப்பெயர்’ ஆகிய கவிதைத் தொகுப்புகளைத் தமிழுக்குத் தந்தவர். இரண்டு தொகுப்புகளுக்குமான இடைவெளி 25 ஆண்டுகள்.

திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில், வாலி தலை மையில் நடந்த உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுக் கவியரங்கில் கவி பாடியவர். சேவற்கொடியோன், சாலமன் பாப்பையா, சுகிசிவம், அறிவொளி, சொ.சத்தியசீலன் உள்ளிட்ட முன்னணி ஆளுமைகளுடன் ஏராளமான பட்டிமன்றங்கள், வழக்காடு மன்றங்களில் சொல்லாடியவர். இலங்கை, மஸ்கட், சிங்கப்பூர் எனக் கடல் கடந்தும் பேசியவர். அகில இந்திய வானொலியில் தேர்வு பெற்ற இவரது, ‘செயற்கை பூக்கள்’ கவிதை (2011-ம்ஆண்டு) 16 இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு ஒரே நேரத்தில் ஒலிபரப்பு செய்யப்பட்டது. தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க கோவை மாவட்டச் செயலாளர் எனப் பொதுப் பணிகளிலும் இருப்பவர்.

ஆளுமை: பகுத்தறிவையும் கேள்வி கேட்கும் துணிச்சலையும் பெண் சமூகத்திற்குக் கற்றுத்தந்த தந்தை பெரியாரும், ‘நந்தனைப் போல் ஒரு பார்ப்பான் இந்த நாட்டினில் இல்லை' என்று வெடிப்புற பேசிய மகாகவி பாரதியும்.

கதை: எழுத்தாளர் இமையத்தின் ‘பெத்தவன்'. சாதி ஆணவப் படுகொலைகள் குறித்து சமூகத்தின் மனசாட்சியைத் தட்டி நீதி கேட்கிற நெடுங்கதை இது என்பதால்!

x